Published:Updated:

இன்ஜினீயர் சுஜிக்கு இரண்டாவது முறையாக போலீஸ் கஸ்டடி! - வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற போராடிய பெண்கள்

சுஜி என்கிற காசி
சுஜி என்கிற காசி ( twitter )

சுஜியை ஏற்கெனவே கஸ்டடி எடுத்து விசாரணை நடத்தியதில், அவரது நண்பர் டேசன் ஜினோ என்பவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை பெண் மருத்துவரை காதல் வலையில் வீழ்த்தி பணம் பறித்ததுடன் அவரது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த வழக்கில் நாகர்கோவிலைச் சேர்ந்த இன்ஜினீயர் சுஜி என்ற காசி கைது செய்யப்பட்டார். அதன்பின்னர் நேசமணிநகர் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் காசியிடம் பணம் நகைகளை இழந்ததாகப் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து கந்துவட்டிக்கு பணம் வாங்கியவரிடம் அதிக பணம் வசூலித்ததுடன், அவரிடம் இருந்து ஹார்லி டேவிட்சன் பைக்கையும் பறித்து வைத்ததாக ஒருவர் வடசேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸார், காசி வைத்திருந்த ஹார்லி டேவிட்சன் பைக்கையும் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சிறுமி ஒருவர் காசி மீது புகார் அளித்ததன் பேரில் அவர்மீது போக்ஸோ சட்டம் பாய்ந்தது. சென்னை பெண் மருத்துவர் உட்பட ஐந்து பெண்கள் புகார்கள் மீதும், ஒரு கந்துவட்டி புகார் என சுஜி மீது மொத்தம் ஆறு வழக்குகள் பதியப்பட்டுள்ளன. மேலும் அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது.

காசி என்ற சுஜி
காசி என்ற சுஜி

சென்னை பெண் மருத்துவரை ஏமாற்றி மோசடி செய்த வழக்கில் ஏற்கெனவே மூன்று நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டார் சுஜி. இந்த நிலையில் கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பதிவான போக்ஸோ வழக்கில் ஆறு நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி இன்று முதல் சுஜியிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமிகள் முதல் திருமணம் ஆனவர்கள் வரை அனைத்து தரப்பு பெண்களையும் சுஜி ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது.

ஏற்கெனவே சுஜியை கஸ்டடி எடுத்து விசாரணை நடத்தியதில் அவரின் நண்பர் டேசன் ஜினோ என்பவர் கைது செய்யப்பட்டார். சுஜியின் காதல் வலையில் விழும் பெண்களின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவது மற்றும் பெண்களை மிரட்டுவதும் டேசன் ஜினோவின் ரோல் எனப் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதுபோன்று சுஜிக்கு ஆதரவாக இணையதளங்களில் பெண்களின் வீடியோ மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ததாக வெளிநாட்டில் இருக்கும் மற்றொரு நண்பரை பிடிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்திய மாதர்சங்கத்தினர்
கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்திய மாதர்சங்கத்தினர்

இந்தநிலையில் காசி என்ற சுஜி வழக்கில் மேலும் பலர் தொடர்பு உள்ளதாகவும், அவர்களிடமும் போலீஸார் விசாரணை நடத்த வேண்டும் எனவும், இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் எனவும் கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த நான்கு பெண்கள் இன்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அடுத்த கட்டுரைக்கு