நாகர்கோவில்: `எய்ட்ஸ் நோயால் இறந்துவிடுவேன்’ - மாணவியை மயக்கிக் கடத்திய இளைஞர்!

அந்த இளைஞருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது தெரியும் எனவும், அவர்மீது பரிதாபப்பட்டுதான் நான் என்னை அவரிடம் ஒப்படைத்தேன் எனவும் அந்த மாணவி சொல்லியிருப்பதாகச் சொல்கிறார்கள் போலீஸ் தரப்பில்.
கன்னியாகுமரி மாவட்டம், தடிக்காரன் கோணம் பகுதியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் திடீரென மாயமானார். பெற்றோர் உறவினர்கள், தோழிகளின் வீடுகள் எனப் பல இடங்களில் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து இது குறித்து நாகர்கோவிலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் தடிக்காரன்கோணம் பகுதியைச் சேர்ந்த 22 வயதான ஆட்டோ ஓட்டுநர் 11-ம் வகுப்பு மாணவியைக் காதலித்திருப்பது தெரியவந்தது. பின்னர் ஆசைவார்த்தைகளைக் கூறி அந்த மாணவியைத் திருமணம் செய்வதற்காக அழைத்துச் சென்றிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. எனவே, பெற்றோரின் புகாரின் அடிப்படையில் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவரையும், அவர் அழைத்துச் சென்ற மாணவியையும் தேடிவந்தனர். இந்தநிலையில், இளைஞர் அந்த மாணவியுடன் தனது உறவினர் வீட்டில் இருந்ததைக் கண்டறிந்த போலீஸார் அவர்களை மீட்டு காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

இளைஞர் கடத்திச் சென்ற மாணவியை போலீஸார் மீட்டதுடன், ஆட்டோ டிரைவரிடம் தனியாக விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த இளைஞர் எய்ட்ஸ் நோயாளி என்ற அதிர்ச்சித் தகவல் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்மீது கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின்கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பின்னர் மகளிர் போலீஸார் மாணவியிடம் தனியாக விசாரணை நடத்தியுள்ளனர். அதில் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்ற அந்த இளைஞர் மாணவிக்குப் பாலியல் தொந்தரவு அளித்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் `எய்ட்ஸ் நோய் காரணமாக நான் விரைவில் இறந்துவிடுவேன்’ என மிகவும் சோகத்துடன் கூறி, மாணவியின் மனதில் இரக்கத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்திருக்கிறது.

மேலும், அந்த இளைஞருக்கு எயிட்ஸ் நோய் இருப்பது தெரியும் எனவும், அவர் மீது பரிதாபப்பட்டுத்தான் நான் என்னை அவரிடம் ஒப்படைத்தேன் எனவும் அந்த மாணவி சொல்லியிருப்பதாகச் சொல்கிறார்கள் போலீஸார் தரப்பில். இதைக் கேட்டவுடன் போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து மீட்கப்பட்ட மாணவியை போலீஸார் ஆசாரிப்பள்ளத்திலுள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் எய்ட்ஸ் பரிசோதனை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். எய்ட்ஸ் நோயாளியான இளைஞர், மாணவியை மூளைச்சலவை செய்து கடத்திச் சென்ற விவகாரம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.