Published:Updated:

நாமக்கல்: போலி பணி ஆணை; வேலை வாங்கித் தருவதாக ரூ.24 லட்சம் மோசடி - அதிமுக கிளைச் செயலாளர் கைது!

ஜெகதீஸ்வரன், அவரின் உறவினர் மதிவதனி ஆகியோரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, தலா ரூ.12 லட்சம் வீதம் ரூ.24 லட்சத்தைப் பெற்றுக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. அதோடு, போலியாகப் பணி நியமன ஆணைகளையும் கல்யாணி வழங்கியதாகக் கூறப்படுகிறது.

பள்ளிபாளையம் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.24 லட்சம் மோசடி செய்த வழக்கில், அ.தி.மு.க கிளைச் செயலாளரும், அவரின் தங்கையும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள ஓடப்பள்ளியைச் சேர்ந்தவர் கல்யாணி. இவர், கடந்த 2006-ம் ஆண்டு ஓடப்பள்ளி அக்ரஹாரம் ஊராட்சி மன்ற உறுப்பினராக இருந்தார். பின்னர், அரசுப்பள்ளியில் நூலகர் பணிக்குத் தேர்வானதால், ஊராட்சி உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். மேலும், இவர் தனது அண்ணனான ஓடப்பள்ளி அ.தி.மு.க கிளைச் செயலாளர் செந்தில்குமாருடன் சேர்ந்து அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி சிலரிடம் பணம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால், யாருக்கும் அவர்கள் சொன்னபடி வேலை வாங்கித் தரவில்லையாம்.

நாமக்கல்
நாமக்கல்

இதற்கிடையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன், அவரின் உறவினர் மதிவதனி ஆகியோரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, தலா ரூ.12 லட்சம் வீதம் ரூ.24 லட்சத்தை பெற்றுக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. அதோடு, போலியாக பணி நியமன ஆணைகளையும் கல்யாணி வழங்கியதாகக் கூறப்படுகிறது. தங்களுக்கு போலிப் பணி ஆணை வழங்கியதோடு, தாங்கள் கொடுத்த பணத்தையும் அவர்கள் திருப்பித் தராததால், இது குறித்து, ஜெகதீஸ்வரன் மதிவதனி ஆகியோர் நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தனர்.

இதையடுத்து, காவல் ஆய்வாளர் அம்பிகாவதி, அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், கல்யாணி, அவரின் அண்ணன் செந்தில்குமார் இருவரும் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தைப் பெற்று ஏமாற்றியது தெரியவந்தது.

மேலும், சிலருக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணைகளை போலியாக அச்சடித்துவைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கல்யாணி, செந்தில்குமாரை போலீஸார் கைதுசெய்தனர். பின்னர், அவர்கள் குமாரபாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், ஏற்கெனவே கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஓடப்பள்ளியைச் சேர்ந்த தி.மு.க கிளைச் செயலாளர் தங்கராசுவின் சகோதரர் மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ. 8 லட்சம் பெற்று ஏமாற்றினாராம். இதனால், மனமுடைந்த தங்கராசு, கல்யாணியின் வீட்டின் முன்பு தீக்குளித்துப் பரிதாபமாக இறந்திருக்கிறார்.

கைது
கைது

இப்படி, உயிர்பலி ஏற்பட்டும், கல்யாணியும் அவரின் சகோதரரும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றுவதை நிறுத்தவில்லை என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே, முன்னாள் சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா மீது, வேலை வாங்கித் தருவதாக கூறி, பல பேர்களிடம் பணமோசடி செய்த வழக்கில், நாமக்கல் குற்றப்பிரிபு போலீஸார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், அதே கட்சியைச் சேர்ந்த அண்ணனும் தங்கையும் சேர்ந்து பலரிடமும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்துள்ள விவகாரம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு