Published:Updated:

`37 வயதாகியும் பெண் கிடைக்கவில்லை!' -சிறுமியைத் திருமணம் செய்து சிக்கிக் கொண்ட நாமக்கல் இளைஞர்

ஜெயலட்சுமணனுக்கு வயது அதிகம் ஆகிவிட்டதால், பலரும் அவருக்குப் பெண் தர தயங்கியதாகச் சொல்லப்படுகிறது.

Representational image
Representational image

17 வயதே ஆன சிறுமியைத் திருமணம் செய்த பெட்ரோல் பங்க் ஊழியர் மற்றும் சிறுமியின் பெற்றோர்களை போலீஸார் கைது செய்த சம்பவம், கரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம்
திருமணம்
மாதிரி படம்

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரைச் சேர்ந்தவர், ஜெய லட்சுமணன் (வயது 37). இவர் பரமத்தி வேலூரில் உள்ள தனியார் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக ஜெயலட்சுமணனுக்குத் திருமணம் செய்துவைக்க அவரின் பெற்றோர் முயற்சி செய்துள்ளனர். ஆனால், ஜெயலட்சுமணனுக்கு வயது அதிகம் ஆகிவிட்டதால், பலரும் அவருக்குப் பெண் தரத் தயங்கியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜெயலட்சுமணனின் தாய் நல்லம்மாள், கரூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது நிரம்பிய சிறுமியின் பெற்றோரிடம் ஆசைவார்த்தை கூறி, தனது மகனுக்குத் திருமணம் செய்ய சம்மதிக்க வைத்தார்.

Representational image
Representational image

அதன்படி, ஜெயலட்சுமணனுக்கும், கரூர் பகுதியைச் சேர்ந்த அந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து, ஜெயலட்சுமணன், அந்தச் சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்தார். இந்தநிலையில், சிறுமிக்குக் கட்டாயத் திருமணம் நடந்ததாக கரூர் மாவட்ட சைல்டு-லைன் அமைப்பினருக்குத் தகவல் வந்தது. அந்தத் தகவலை சிறுமியின் சொந்த ஊரைச் சேர்ந்த சிலர் தெரிவித்துள்ளனர்.

`ரூ.15,000 கடனுக்கு அடமானம்!'- கரூரில் 13 வயது சிறுமிக்கு நடந்த அதிர்ச்சி திருமணம்

இந்தத் தகவல் கரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்குத் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் சத்யபிரியா தலைமையிலான போலீஸார், கரூர்ப் பகுதியில் உள்ள சிறுமியின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமிக்குக் கட்டாய திருமணம் நடந்தது உண்மை எனத் தெரியவந்தது. இதுகுறித்து, அந்தச் சிறுமியும் கரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

Representational image
Representational image

அதன்பேரில், ஜெயலட்சுமணன் மற்றும் குழந்தைத் திருமணத்துக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தந்தை பழனிவேல், தாய் லதா, உறவினர் வசந்தா ஆகிய நான்கு பேர் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த விவகாரத்தில் தலைமறைவாக உள்ள ஜெயலட்சுமணனின் தாய் நல்லம்மாளை போலீஸார் தேடி வருகின்றனர்.