Published:Updated:

ஓயாத மணல் கொள்ளை... நேரில் ஆய்வு! - அதிகாரிகளுக்கு டோஸ்விட்ட நாமக்கல் எம்.பி

மணல் கொள்ளை - எம்.பி சின்ராஜ் ஆய்வு
மணல் கொள்ளை - எம்.பி சின்ராஜ் ஆய்வு

சட்டவிரோதமாக திருமணிமுத்தாறில் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு எம்.பி உத்தரவிட்டார்.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள ஆறு மற்றும் விவசாய நிலத்தில் தொடர்ச்சியாக மணல் கொள்ளை நடப்பதாக வந்த புகாரைத் தொடர்ந்து, ஸ்பாட்டுக்கு அதிரடி விசிட் அடித்த நாமக்கல் எம்.பி ஏ.கே.பி.சின்ராஜ், மணல் கொள்ளைக்குப் பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்யவைத்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மணல் கொள்ளையைத் தடுக்கும் சின்ராஜ்
மணல் கொள்ளையைத் தடுக்கும் சின்ராஜ்

நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக இருப்பவர், ஏ.கே.பி.சின்ராஜ். இவர், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியைச் சேர்ந்தவர். தனது தொகுதிட்குப்பட்ட பகுதிகளில் மத்திய, மாநில அரசுகளின் நிதிகளில் நடைபெறும் பணிகளின் தரத்தைத் தொடர்ந்து ஆய்வுசெய்துவருகிறார். அரைகுறையாக நடக்கும் பணிகளைத் தடுத்து நிறுத்தி, மறுபடியும் அந்தப் பணிகளைத் தரமாகச் செய்யச் சொல்லி வலியுறுத்திவருகிறார்.

நாமக்கல்:`அரசுப் பணிகள் தரமாக நடக்கணும்!’- வைரல் வீடியோவின் பின்னணி பகிர்ந்த சின்ராஜ் எம்.பி

சமீபத்தில், நாமக்கல் மாவட்டம், மலச்சமுத்திரம் ஒன்றியத்திலுள்ள கோட்டம்பாளையத்தில் இயங்கிவரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் கட்டப்பட்டுவரும் காம்பவுண்ட் சுவரை உடைத்துப் பார்த்து, சிமென்ட் கலவை பொலபொலவென்று உதிர்வதைக் கண்டுபிடித்து, தரமில்லாமல் நடக்கும் பணியைக் கையும் களவுமாகப் பிடித்தார்.

மணல் கொள்ளையைத் தடுக்கும் சின்ராஜ்
மணல் கொள்ளையைத் தடுக்கும் சின்ராஜ்

அதேபோல், தொகுதி முழுக்கப் போடப்படும் சாலைகளின் தரத்தை ஆய்வுசெய்து, கான்ட்ராக்டர்களையும் அதிகாரிகளையும் அலறவைக்கிறார். பரமத்தி வேலூர் பகுதியில் இயங்கிவந்த கெமிக்கலைப் பயன்படுத்தி கரும்பிலிருந்து வெல்லம் தயாரிக்கும் தனியார் கம்பெனியில் ஆய்வுசெய்து, அதற்கு சீல் வைக்கவைத்தார். அங்கே பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்யவைத்தார்.

நள்ளிரவு மணல் கடத்தல்; மடக்கிய டி.எஸ்.பி! -போலீஸுக்கு அதிர்ச்சி கொடுத்த திருவாரூர் புள்ளி

இந்தநிலையில், அதே பரமத்தி வேலூர் வட்டத்தில் வரும், ராமதேவம் ஊராட்சியிலுள்ள சி.புதுப்பாளையம் என்னும் பகுதியில் சர்வே எண்: 412-ல் சட்டவிரோதமாக திருமணிமுத்தாறில் சிலர் மணல் எடுத்து விற்பனை செய்வதாக, ஏ.கே.பி.சின்ராஜூக்குத் தகவல் வந்ததது. அந்தப் புகாரின் அடிப்படையில், நேற்று மாலை திடீரென சம்பந்தப்பட்ட இடத்தை எம்.பி ஏ.கே.பி.சின்ராஜ் அதிரடியாக ஆய்வு செய்தார். இந்த ஆய்வில், திருமணிமுத்தாறிலிருந்து சட்டவிரோதமாக மணல் எடுத்து பதுக்கி விற்பனை செய்வதைக் கண்டறிந்தார். மேலும், அருகிலுள்ள விவசாய நிலங்களிலிருந்து சுமார் 25 அடி ஆழத்துக்கு மேல் சட்டவிரோதமாக மணல் எடுக்கப்பட்டதையும், ஏ.கே.பி.சின்ராஜ் கண்டுபிடித்தார்.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்

இதுகுறித்து, உடனடியாக கனிமவள அதிகாரிகள், வட்டாட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார். அவர்களும் சம்பந்தப்பட்ட இடத்துக்கு வந்தனர். சட்டவிரோதமாக திருமணிமுத்தாறில் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு எம்.பி உத்தரவிட்டார். மணல் கடத்தலுக்குப் பயன்படுத்திய ஜே.சி.பி., டிப்பர் லாரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களைக் கையும் களவுமாக பிடித்த எம்.பி ஏ.கே.பி.சின்ராஜை அந்தப் பகுதி மக்கள் பாராட்டிவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு