Published:Updated:

நாமக்கல்: கூட்டுறவு சங்கத்தில் ரூ.31.78 லட்சம் மோசடி; தலைவர், செயலாளர் கைது... என்ன நடந்தது?

26.5.2017 முதல் 25.10. 2019 வரையிலான காலகட்டத்தில், இங்கு பயிர்க்கடன், நகைக்கடன் வழங்கியது உள்ளிட்டவற்றில், மோசடி நடந்திருப்பதைக் கண்டறிந்தனர். தொடர்ந்து அவர்கள் ஆய்வு செய்ததில், ரூ.31.78 லட்சம் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நூற்றுக்கணக்கான விவசாயிகளை உறுப்பினராகக் கொண்ட தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.31.78 லட்சம் மோசடி செய்த தலைவரும் செயலாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே இருக்கிறது பில்லூர். இந்தக் கிராமத்தில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், பில்லூர் மற்றும் அருகில் உள்ள சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள், உறுப்பினர்களாக உள்ளனர்.

பரமத்தி வேலூர்
பரமத்தி வேலூர்
நா.ராஜமுருகன்

இந்தக் கூட்டுறவு கடன் சங்கம், விவசாயிகளுக்கு கடன் வழங்கி வருகிறது. அதோடு, விவசாயிகளுக்கு பட்டா, சிட்டா மூலம் பயிர்க்கடன் மற்றும் நகைக்கடன் வட்டியில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், 'இந்தத் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில், சிறு குறு விவசாயிகளுக்கு கடன் வழங்குவதில்லை. இங்கே பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகின்றன' என்று விவசாயிகள் தொடர் புகார் கூறி வந்தனர்.

ஆனால், இந்தக் கூட்டுறவு கடன் சங்கத்தில் எந்தவித ஆய்வையும் உயரதிகாரிகள் மேற்கொள்ளவில்லை என்று விவசாயிகள் புலம்பி வந்தனர். இந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு இந்தக் கடன் சங்கத்தின் வரவு, செலவு கணக்குகளை கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தணிக்கை செய்தனர்.

அப்போது, 26.5.2017 முதல் 25.10.2019 வரையிலான காலகட்டத்தில், இங்கு பயிர்க்கடன், நகைக்கடன் வழங்கியது உள்ளிட்டவற்றில், மோசடி நடந்திருப்பதைக் கண்டறிந்தனர். தொடர்ந்து அவர்கள் ஆய்வு செய்ததில், ரூ.31,78,000 மோசடி நடந்து இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து, திருச்செங்கோடு சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் வெங்கடாசலம், நாமக்கல் மாவட்ட வணிக குற்றப்புலனாய்வு போலீஸாரிடம் புகார் செய்தார்.

விவசாயம்
விவசாயம்
நாமக்கல்: பெண் குழந்தை மர்ம மரணம்! -அவசரமாகப் புதைக்கப்பட்ட சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை

அந்தப் புகாரின் அடிப்படையில், மாவட்ட வணிக குற்றப்புலனாய்வு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், இன்ஸ்பெக்டர் சின்னதங்கம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர். அவர்களின் தீவிர விசாரணையில், இந்த மோசடியில் பில்லூர் வங்கியின் தலைவர் வேலுச்சாமி, செயலாளர் வெங்கடேச பெருமாள் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில், நேற்று தலைவர் வேலுச்சாமி, செயலாளர் வெங்கடேச பெருமாள் ஆகிய இருவரையும், வணிக குற்றபுலனாய்வு போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு பலன் தர வேண்டிய தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில், தலைவரும் செயலாளரும் இணைந்து மோசடியில் ஈடுப்பட்டிருப்பது, அப்பகுதி விவசாயிகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு