Published:Updated:

`திருடச் சென்றபோது எழுந்துவிட்டார்!’ - 92 வயது மூதாட்டியை, குழவிக்கல்லைப் போட்டுக் கொன்ற இளைஞர்

கொலை
கொலை

`கொரோனா காலம் என்பதால், வேலை சரிவரக் கிடைக்கவில்லை. அதனால், வருமானம் இன்றித் தவித்த நான், பணம், நகைக்காக பாட்டியைக் கொலைசெய்துவிட்டேன்' என்று கூறியுள்ளார் அந்த நபர்.

நாமக்கல் அருகே நகை, பணத்துக்காக நள்ளிரவில் தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 92 வயது மூதாட்டி மீது இளைஞர் ஒருவர் குழவிக்கல்லைப் போட்டு கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது. அந்த மூதாட்டியின் வீட்டில் குடியிருந்த பெயின்ட்டர் ஒருவரே, அந்த மூதாட்டியைக் கொலை செய்திருப்பது, போலீஸாரின் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

 கொலைசெய்யப்பட்ட மாராயி
கொலைசெய்யப்பட்ட மாராயி
நித்யானந்தா ஆசிரமம்: "இங்கிருந்து என்னை அழைத்துச் சென்றுவிடுங்கள்"-மகனிடம் கேட்ட  தாய்;பின்னணி என்ன?

நாமக்கல் மாவட்டம், மோகனூரில் இருக்கும் நேரு நகர்ப் பகுதியில் வசித்துவந்தவர், மாராயி. 92 வயது மூதாட்டியான இவர், கணவரை இழந்த நிலையில், தனது சொந்த வீட்டில் தனியாக வசித்துவந்திருக்கிறார். நேற்று காலை வெகுநேரமாகியும் மூதாட்டி வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்திருக்கிறது. இதனால், அந்த மூதாட்டியின் மற்றொரு வீட்டில் குடியிருந்த, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த காளிதாஸ் என்பவர், அவரின் பேரன் கணேசனுக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். இதனால், பதறிப்போன கணேசன், சம்பவ இடத்துக்கு வந்திருக்கிறார். தனது பாட்டி தங்கியிருக்கும் வீட்டின் கதவை பலமுறை தட்டினார். ஆனால், உள்ளேயிருந்து எந்தத் தகவலும் வராததால், கணேசன் அதிர்ச்சியடைந்தார். இதனால், மாராயியின் உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மூதாட்டியின் தலையில் காயங்களுடன் சடலமாக கிடந்திருக்கிறார். இந்தச் சம்பவம் குறித்து மோகனூர் காவல் நிலையத்தில் தகவல் அளிக்கப்பட்டதன் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் மூதாட்டியின் சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டனர்.

கொலை
கொலை

காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில், கொலைசெய்யப்பட்ட மூதாட்டியின் வீட்டில் வசித்த காளிதாஸை விசாரித்தபோது, பாட்டி வைத்திருந்த நகை, பணத்தைத் திருடச் சென்றபோது பாட்டிஎழுந்து கொண்டதால், அருகில் இருந்த சிறிய குழவிக்கல்லால் அவரது தலையில் அடித்துக் கொலை செய்துவிட்டு, தனது வீட்டுக்கு வந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார். தன்மீது சந்தேகம் வராமல் இருப்பதற்காகத்தான், அவரின் பேரனுக்குத் தகவல் கொடுத்ததாகவும் கூறியிருக்கிறார்.

டெல்லி: 50 இடங்களில் கத்திக்குத்து; இளம்பெண் கொடூரக் கொலை! - கூட்டுப்பாலியல் வன்கொடுமையா?

'கொரோனா காலம் என்பதால், வேலை சரிவர கிடைக்கவில்லை. அதனால், வருமானமின்றி தவித்த நான், பணம், நகைக்காக பாட்டியைக் கொலைசெய்துவிட்டேன்' என்று கூறியிருக்கிறார். இதனையடுத்து, காளிதாஸைக் கைதுசெய்த மோகனூர் காவல் நிலைய போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். நகை, பணத்துக்காக தான் குடியிருந்த வீட்டின் உரிமையாளரையே இளைஞர் ஒருவர் கொலை செய்திருக்கும் சம்பவம், அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. காளிதாஸின் மனைவி, உயிரிழந்த மாராயியின் பேரன் கணேசன் வைத்திருக்கும் கடையில் பணிபுரிந்துவருவது குறப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு