Published:Updated:

ஒரு வாரத்தில் அறிக்கை; தாமாக முன்வந்து வழக்கு பதிவு -விழுப்புரம் சிறுமி விவகாரத்தில் கொதித்த ஆணையம்

சிறுமி ஜெயஸ்ரீயின் வீடு
சிறுமி ஜெயஸ்ரீயின் வீடு

முன் விரோதத் தகராறில் விழுப்புரம் சிறுமி எரித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்திருக்கிறது தேசிய குழந்தைகள் ஆணையம்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரை அடுத்திருக்கும் சிறுமதுரை காலனியைச் சேர்ந்தவர் ஜெயபால் (42), ராஜி தம்பதி. இவர்களுக்கு இரண்டு ஆண், இரண்டு பெண் பிள்ளைகள். விவசாயக் கூலி வேலை செய்துவரும் ஜெயபால் தனது வீட்டிலேயே சிறிய பெட்டிக்கடை ஒன்றையும் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று ஜெயபாலும், அவரின் மனைவியும் வெளியே சென்றிருந்த நிலையில், மூத்த மகளான ஜெயஸ்ரீ (16) மட்டும் வீட்டில் இருந்திருக்கிறார்.

`என் அப்பா எங்கே....!’-முன்விரோதத்தால் எரிக்கப்பட்ட சிறுமி; அ.தி.மு.க நிர்வாகிகள் கைது

சுமார் 11 மணியளவில் ஜெயபால் வீட்டுக்குள் இருந்து திடீரென்று புகைமூட்டம் வெளியேறியதுடன், அலறல் சத்தமும் கேட்டது. அதனால் அக்கம்பக்கத்தினர் ஜெயபாலின் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கே உடல் முழுவதும் கருகிய நிலையில் சிறுமி ஜெயஸ்ரீ உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயஸ்ரீயை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

90 சதவிகித தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி ஜெயஸ்ரீ, கவுன்சிலர் முருகன் மற்றும் கலியபெருமாள் இருவரும்தான் தனது கைகளைக் கட்டிப்போட்டு மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தியதாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அ.தி.மு.க கவுன்சிலர் முருகன் மற்றும் கிளைக்கழக செயலாளர் கலியபெருமாள் இருவரையும் கைது செய்த காவல்துறை அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

தேசிய குழந்தைகள் ஆணயம்
தேசிய குழந்தைகள் ஆணயம்

சிறுமி எரிக்கப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியிருக்கும் நிலையில், முருகன் மற்றும் கலியபெருமாள் ஆகிய இருவரையும் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டிருக்கின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ``சிறுமியை எரித்துக் கொலை செய்த அ.தி.மு.க-வினர் தண்டிக்கப்பட வேண்டும்” என்று கூறியிருக்கிறார். பா.ம.க நிறுவனர் ராமதாஸ்,``ஆயிரம் முன்பகை இருந்தாலும் மனிதமும், இதயமும் உள்ளவர்களால் வாழ வேண்டிய சிறுமியை உயிருடன் எரிக்கும் குரூரத்தை அரங்கேற்ற முடியாது. இதற்கு காரணமானவர்களுக்கு விரைந்து தண்டனை வழங்கப்பட வேண்டும். அது இத்தகைய கொடியவர்களுக்குப் பாடமாக அமைய வேண்டும்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

`என் அப்பா எங்கே....!’-முன்விரோதத்தால் எரிக்கப்பட்ட சிறுமி; அ.தி.மு.க நிர்வாகிகள் கைது

தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் குறித்து தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்திருக்கும் தேசிய குழந்தைகள் ஆணையம், சிறுமிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 1 வாரத்துக்குள் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டிருக்கிறது.

மேலும், தேசிய அளவில் குழந்தைகள் சந்திக்கும் மனஅளவிலான சித்ரவதைகளுக்கும் உடலளவிலான வன்கொடுமைகளுக்கும் ஒரே சட்டம்தான். குற்றமிழைத்தவர்களுக்கு குழந்தைகள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஆணையங்கள் சட்டம் 2005, பிரிவு 13(1)-ன்படி தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு