Published:Updated:

100 லாக்அப் மரணம்; பெண்களுக்கு எதிராக 3.59 லட்சம் வழக்குகள்! -அதிர்ச்சி கொடுத்த குற்ற ஆவணக் காப்பகம்

இந்தியாவிலே உத்தரப்பிரதேசம் மாநிலத்தில்தான் பெண்களுக்கு எதிராக அதிக குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

 லாக்-அப்
லாக்-அப்

இந்தியாவில் 2017-ம் ஆண்டு நடந்த குற்றச் சம்பவங்கள் தொடர்பான அறிக்கையை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் நேற்று வெளியிட்டது. இதில் லாக்-அப் மரணங்கள், பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தொடர்பான புள்ளிவிவரங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. 2017-ம் ஆண்டு பெண்களுக்கு எதிராக 3,59,849 குற்றச்சம்பவங்கள் நடந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், போலீஸ் காவலில் 100 மரணங்கள் நடந்துள்ளதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது.

குற்றம்
குற்றம்

2017-ம் ஆண்டு போலீஸ் காவலில் இருந்த கைதிகள் உயிரிழந்ததில் ஆந்திர மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் போலி என்கவுன்டர், லாக்-அப் மரணங்கள் என 27 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதற்கு அடுத்ததாக குஜராத் மற்றும் மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்கள் இடம்பிடித்துள்ளன. இந்த மாநிலங்களில் 2017-ம் ஆண்டு 15 மரணங்கள் நடந்துள்ளன. இதில் மோசமான விஷயம் என்னவென்றால், இந்த 100 மரணங்களுக்குக் காரணமானவர்களில் ஒருவர்கூட தண்டிக்கப்படவில்லை.

``ஆள்கடத்தல் குற்றங்களில் தமிழகம் முதலிடம்!”- அதிரவைக்கும் குற்ற ஆவணக் காப்பக அறிக்கை

இதுதொடர்பாக, 33 போலீஸார் கைதாகியுள்ளதாகவும் 27 காவலர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 2016-ம் ஆண்டு 96 மரணங்கள் நிகழ்ந்த நிலையில் 2017-ல் 100 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. 2017-ம் ஆண்டு போலீஸ் அதிகாரிகள் மீது 56 மனித உரிமை மீறல்கள் வழக்காகப் பதிவாகியுள்ளது. இதில் 48 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் 3 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்குகள் பெரும்பாலும் சித்ரவதை செய்ததாகப் பதிவாகியுள்ளது. இதில் 6 வழக்குகள் என்கவுன்டர் தொடர்பானது. 2017-ம் ஆண்டு போலீஸ் காவலில் இருந்து 1,163 கைதிகள் தப்பியோடியதாகக் கூறப்பட்டுள்ளது. இதில் அதிகமாக மத்தியப் பிரதேசத்தில் லாக்-அப்பில் இருந்து 319 கைதிகள் தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

2017-ம் ஆண்டு பெண்களுக்கு எதிராக 3,59,849 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் உத்தரப்பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இந்த மாநிலத்தில் 56,011 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதையடுத்து, மகாராஷ்டிராவில் 31,979 வழக்குகளும் மேற்கு வங்கத்தில் 30,002 வழக்குகளும் பதிவாகியுள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்களின் கீழ் 27.9 சதவிகித வழக்குகள் குடும்ப உறவுகளால் கொடுமை செய்யப்பட்டதாக பதிவாகியுள்ளன. கடத்தல் வழக்குகள் 20.5 சதிவிகிதம், பாலியல் வன்கொடுமை வழக்குகள் 7 சதவிகிதம் பதிவாகியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2017-ம் ஆண்டு 188 மூத்த குடிமக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். கொள்ளை, செயின்பறிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்த மரணங்கள் நடந்துள்ளன. மூத்த குடிமக்கள் கொலை செய்யப்பட்டதில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. அதற்கு அடுத்தப்படியாக மகாராஷ்ட்ரா மாநிலம் உள்ளது. சிறைத் துறையின் மூலம் கிடைக்கும் வருமானங்கள் வரிசையில் தெலுங்கானா ரூ.59.92 கோடி வருமானத்துடன் முதலிடத்தில் உள்ளது.தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த தமிழகம், கடந்த 2017-ம் ஆண்டு 56.83 கோடியுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.