Published:Updated:

`சிறார் வதை; 11 நாளில் குற்றப்பத்திரிகை..9 மாதத்தில் தண்டனை!' - நெல்லை நீதிமன்றம் அதிரடி

நெல்லையில் சிறார் வதை வழக்கில் போலீஸார் 11 நாள்களில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணை விரைவாக நடத்தப்பட்டதில் 9 மாதத்தில் குற்றவாளிக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

judgement
judgement

நெல்லை டவுன் பெருமாள் தெற்கு ரதவீதியில் முருகன் என்ற 68 வயது முதியவர் வசித்து வந்தார். அவரது வீட்டின் அருகில் வசித்த குடும்பத்தினருடன் அவர் நட்புடன் பழகியிருக்கிறார். அதனால் அந்த வீட்டில் உள்ள 8 வயதுச் சிறுமியும் முருகனிடம் தாத்தா என்கிற வகையில் பழகியிருக்கிறார். ஆனால் முருகன், அந்தச் சிறுமியிடம் தவறான கண்ணோட்டத்துடன் பழகியிருக்கிறார்.

`இது போர்னோகிராஃபி அல்ல; சிறார் வதை வீடியோக்கள்!’ - தவற்றைச் சுட்டிக் காட்டிய IWF

முருகனின் நடவடிக்கை காரணமாக அச்சமடைந்த சிறுமி, தன் தாயிடம் முருகனின் நடவடிக்கை பற்றிச் சொல்லியிருக்கிறார். அதிர்ச்சியடைந்த பெற்றோர், இதுகுறித்து நெல்லை மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்கள்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த இன்ஸ்பெக்டர் வேல்கனி, குற்றம் சாட்டப்பட்ட முருகனிடம் விசாரித்தார். ஆனால் அவர் எதையும் ஒப்புக் கொள்ளாத நிலையில், சிறுமியின் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது முருகன் அந்தச் சிறுமியை வதை செய்யும் நோக்கில் செயல்பட்டது தெரியவந்தது.

வீட்டில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா இந்த வழக்கில் முக்கியச் சாட்சியாக விளங்கியது.
துணை ஆணையர் சரவணன்

அதனால் சிசிடிவி-யை முக்கிய ஆதாரமாகக் கொண்டு இந்த வழக்கில் 11 நாள்களில் இன்ஸ்பெக்டர் வேல்கனி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து நெல்லை மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.

சிறார் வதை வீடியோ விவகாரம்- முதல் நபராகத் திருச்சி மெக்கானிக் கைது!

வழக்கு விசாரணையின்போதும் நெல்லை போலீஸார் தொடர்ந்து ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்புக் கொடுத்தார்கள். அதனால், வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி இந்திராணி, குற்றம் நடைபெற்ற 9 மாதத்தில் தீர்ப்பளித்தார். அதில், குற்றம்சாட்டப்பட்ட முருகனுக்கு ஐந்தாண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ.5,000 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.

இன்ஸ்பெக்டர் வேல்கனியைப் பாராட்டும் துணை ஆணையர் சரவணன்
இன்ஸ்பெக்டர் வேல்கனியைப் பாராட்டும் துணை ஆணையர் சரவணன்

இந்த வழக்கில் சிறப்பான முறையில் புலனாய்வு செய்து குற்றவாளியைக் கைது செய்ததுடன் 11 நாள்களிலேயே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அத்துடன் வழக்கை விரைவாக நடத்த ஒத்துழைத்து குற்றவாளிக்கு 5 ஆண்டு தண்டனை வாங்கிக் கொடுத்த ஆய்வாளர் வேல்கனி மற்றும் காவல்துறையினருக்கு நெல்லை மாநகர துணை ஆணையர் சரவணன் பரிசு வழங்கிப் பாராட்டினார்.