Published:Updated:

``3 சிம்கார்டுகள்; ஒரே ஒரு செல்போன்!"- விடிய விடிய பெண் குரலில் பேசிய நெல்லை இன்ஜினீயர்

நெல்லை இன்ஜினீயர் வளன் ராஜ்குமார் ரீகன்
நெல்லை இன்ஜினீயர் வளன் ராஜ்குமார் ரீகன்

பெண் குரலில் பேசி ஆண்களை ஏமாற்றிய நெல்லை இன்ஜினீயர் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் 3 சிம்கார்டுகள், ஒரே ஒரு வாட்ஸ்அப் வசதியுள்ள செல்போனைப் பயன்படுத்தியுள்ளார்.

பெண் குரலில் பேசி பலரை ஏமாற்றிய வழக்கில் கைதான நெல்லை மாவட்டம் பணகுடியைச் சேர்ந்த இன்ஜினீயர் வளன் ராஜ்குமார் ரீகன் (24) சிறைக் கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கிறார். அவரைக் கைது செய்த மயிலாப்பூர் போலீஸார், வளன் ராஜ்குமார் ரீகன் குறித்து புதிய தகவல்களை நம்மிடம் பகிர்ந்தனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மயிலாப்பூர் போலீஸார், ``நெல்லை மாவட்டம், பணகுடியைச் சேர்ந்த வளன் ராஜ்குமார் ரீகன், இன்ஜினீயரிங் முடித்ததும் சென்னையில் 3 ஆண்டுகள் வேலை பார்த்தார். ஆனால், போதிய வருமானம் கிடைக்கவில்லை. சென்னையில் தனியாக இருந்த வளன் ராஜ்குமார் ரீகன், `லொக்கேன்டா' செயலியை டவுன்லோடு செய்துள்ளார். ஆரம்பத்தில் அந்தச் செயலி மூலம் கிடைத்த போன் நம்பரில் பெண்களுடன் வளன் பேசிவந்துள்ளார். அப்போதுதான் வளன் ராஜ்குமாரின் பெண் குரலுக்கு பலர் அடிமையாகியிருப்பதை அந்தச் செயலி நிர்வாகம் கண்டறிந்தது.

`தனிமையில் இருப்பதாக உணர்கிறீர்களா?!' -பெண் குரலில் பேசி லட்சங்களைக் குவித்த நெல்லை இன்ஜினீயர்
இன்ஜினீயர் வளன் ராஜ்குமார் ரீகன்
இன்ஜினீயர் வளன் ராஜ்குமார் ரீகன்

இதையடுத்து, வளன் ராஜ்குமாரின் செல்போன் நம்பரை அந்தச் செயலியை டவுன்லோடு செய்த வாடிக்கையாளர்களுக்கு பகிரப்பட்டது. வளன் ராஜ்குமாருடன் போனில் பேசிய அந்தச் செயலியின் வாடிக்கையாளர்கள், ஒருகட்டத்தில் வளனின் காந்தக் குரலைக் காதலிக்கத் தொடங்கினர். வளன் ராஜ்குமாரை பெண் என்று கருதி அவரின் புகைப்படத்தை வாட்ஸ்அப்பில் அனுப்பும்படி நச்சரித்துள்ளனர். அவர்களிடம் போட்டோ அனுப்ப ரூ.100-ம், பாலியல் ரீதியாக ஓப்பனாக பேச ரூ.500-ம், வீடியோ அனுப்ப ரூ.1,500-ம் கட்டணமாக வசூலித்துள்ளார். அதற்காக தேசியமயமாக்கப்பட்ட வங்கி அக்கவுன்ட்களை அவர் பயன்படுத்தியுள்ளார்.

நேரில் பார்க்காமல், வளன் ராஜ்குமார் அனுப்பிய பெண்ணின் போட்டோவைப் பார்த்து அவரைப் பலர் உயிருக்கு உயிராக காதலித்துள்ளனர். பணம் அனுப்புபவர்களிடம் வளன் ராஜ்குமாரும் தொடர்ந்து பெண் குரலிலேயே பேசிவந்துள்ளார். இந்தச் சமயத்தில்தான் சிலர் வளன்ராஜ்குமாரை நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் வளன் ராஜ்குமார், என் குடும்பச் சூழல் காரணமாக உங்களை என்னால் நேரில் சந்திக்க முடியாது என்று கூறிவிடுவார். அதையும் மீறி தொல்லைப்படுத்துபவர்களின் செல்போன் நம்பரைக் குறிப்பிட்டு காவல்துறையிடம் ஆன் லைனில் புகார் கொடுப்பதை வளன்ராஜ்குமார் வாடிக்கையாக வைத்துள்ளார்.

நெல்லை வளன் ராஜ்குமார் ரீகன்
நெல்லை வளன் ராஜ்குமார் ரீகன்
`பெண் குரலில் வலை; வெளிநாட்டு கஸ்டமர்கள்!' -சென்னை போலீஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நெல்லை இன்ஜினீயர்

ஆன்லைன் புகார்கள் அனைத்தும் பிரியா என்ற பெயரிலும் ஒரே ஐபி அட்ரஸிலிருந்தும் வந்ததால் சந்தேகம் ஏற்பட்டது. மேலும் புகாரில் குறிப்பிட்டுள்ள நம்பரில் விசாரித்தால் புகார் கொடுக்கவில்லை என்ற பதிலும் கிடைத்தது. அதனால்தான் புகார் கொடுத்த ஐபி முகவரியை ஆய்வு செய்தபோதுதான் வளன் ராஜ்குமார் குறித்த தகவல் கிடைத்தது. அப்போதுகூட வளன் ராஜ்குமாரை சந்திப்பதற்கு முன்பு வரை நாங்களும் (போலீஸாரும்) அவரை பெண் என்று கருதினோம். நேரில் பார்த்தபோதுதான் அவர் பெண் அல்ல, ஆண் என்று தெரிந்தது.

வளன் ராஜ்குமாரை கைது செய்யும்போது அவரின் உறவினர் ஒருவர், நீ ஜெயிலுக்கு போ, நான் உன்னை பெயிலில் எடுக்கிறேன் என்று போலீஸார் முன்னிலையில் கூறினார். அதைக்கேட்டு எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. வளன் ராஜ்குமாரின் பேச்சுக்கு அடிமையான பலர் அவரின் செல்போனுக்கு தொடர்ந்து கால் செய்துவருகின்றனர். அவர்களின் விவரங்களை சேகரித்துவருகிறோம். வளன் ராஜ்குமார், 3 சிம்கார்டுகளைப் பயன்படுத்திவந்துள்ளார். மேலும், வாட்ஸ்அப் வசதியுள்ள ஒரே ஒரு செல்போனை வைத்திருந்தார். இரவு முழுவதும் தூங்காமல் விடிய விடிய அவர் பேசிக்கொண்டிருந்துள்ளார். அவர் தூங்கும்போது அனைத்து செல்போனையும் சுவிட்ச் ஆப் செய்து வைத்துவிடுவார்.

வளன் வாட்ஸ்அப்
வளன் வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்பில்தான் வளன் ராஜ்குமார் ரீகன், எல்லா விவரங்களையும் பகிர்ந்துள்ளார். அதனால் அவரின் வாட்ஸ் அப்பிலிருந்து முக்கிய தகவல்களைச் சேகரித்துள்ளோம். இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் 2 பிரிவுகளும் தகவல் தொழில்நுட்பத்தை தவறுதலாகப் பயன்படுத்தியது தொடர்பாக 2 பிரிவுகளின் கீழும் என 4 பிரிவுகளில் வளன் மீது வழக்கு பதிந்துள்ளோம். வளனை ஜாமீனில் எடுக்க ஒரு டீம் களமிறங்கியுள்ளது என்றனர்.

வளனிடம் பெண் குரலில் ஏமாற்றுவது எப்படி என்று போலீஸார் கேட்டதற்கு, அவர் உடனே நடித்துக் காட்டியுள்ளார். வளனின் பெண் குரலைக் கேட்ட போலீஸார், அது உண்மையாகவே ஒரு பெண்ணின் வாய்ஸ் போலவே இருந்ததைக் கண்டு ஆச்சர்யமடைந்துள்ளனர். அப்போது வளனின் போனுக்கு வந்த ஒர் அழைப்புக்கு அவர் பெண் குரலிலேயே பதிலளித்துள்ளார். எதிர்முனையில் பேசுபவரின் எண்ணம், விருப்பத்துக்கு ஏற்ப தயங்காமல் வளன் பொய் கூறியதை போலீஸார் கேட்டுக்கொண்டிருந்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு