Published:Updated:

சீட்டுக்கு பணம் வாங்கிய தகராறில் கொல்லப்பட்டாரா நெல்லை முன்னாள் மேயர்?

அடுத்தடுத்து கொலைகள்... அதிர்ச்சியில் அரசியல்வாதிகள்!

பிரீமியம் ஸ்டோரி

நெல்லை முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி, அவரின் கணவர் மற்றும் பணிப்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

முருகசங்கரன், உமாமகேஸ்வரி
முருகசங்கரன், உமாமகேஸ்வரி

நெல்லை மாநகராட்சியில் 1996-2001 காலகட்டத்தில் மேயராகப் பொறுப்பு வகித்தவர் உமாமகேஸ்வரி. நெல்லை மாநகராட்சியின் முதல் பெண் மேயரும்கூட. சில வருடங்களுக்கு முன் உமாமகேஸ்வரியின் மகன் சாலை விபத்தில் மரணமடைந்தார். மிகவும் மனம் உடைந்த உமாமகேஸ்வரி, அதன் பிறகு கட்சிப் பணிகளிலிருந்து ஒதுங்கியே இருந்தார். வீணை இசைப்பதில் ஆர்வம் கொண்டிருந்த அவர், கச்சேரிகளுக்குச் செல்ல ஆரம்பித்தார். தி.மு.க மகளிர் அணி மாவட்ட அமைப்பாளராக இருந்த அவர், ஜூலை 23-ம் தேதி கொடூரமாகக் கொல்லப்பட்டார். வீட்டில் இருந்த அவரையும், அவரின் கணவர் முருகசங்கரன், பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோரை ஒரு கும்பல் கம்பியால் தாக்கியும், கத்தியால் குத்தியும் கொலை செய்தது.

கொலை தொடர்பாக விசாரணை நடத்தும் தனிப்படை அதிகாரிகளிடம் பேசினோம். ‘‘உமாமகேஸ்வரி ஜூலை 23-ம் தேதி வீட்டில் இருந்தபோது, ஒரு கும்பல் வீட்டுக்கு வந்திருக்கிறது. அவர்கள் அறிமுகமானவர்களாக இருந்ததால், வீட்டின் உள்ளே அழைத்துப் பேசியிருக்கிறார். பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, மூவரையும் அந்தக் கும்பல் கொலை செய்திருக்கிறது.

சீட்டுக்கு பணம் வாங்கிய தகராறில் கொல்லப்பட்டாரா நெல்லை முன்னாள் மேயர்?

ஆரம்பத்தில் இந்தக் கொலைக்கு வட மாநிலக் கொள்ளையர்கள் காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்தோம். ஆனால், அதற்கான முகாந்திரம் எதுவுமில்லை. அதேசமயம், தி.மு.க-வைச் சேர்ந்த ஒரு பெண் பிரமுகருக்கு தேர்தலில் சீட் வாங்கிக் கொடுக்க பல லட்சம் பணம் வாங்கியிருக்கிறார் உமாமகேஸ்வரி. சீட் வாங்கிக் கொடுக்காததுடன், பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வருகின்றன. இதனால் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரித்துவருகிறோம்’’ என்றார்கள்.

சீட்டுக்கு பணம் வாங்கிய தகராறில் கொல்லப்பட்டாரா நெல்லை முன்னாள் மேயர்?

இந்தக் கொலை சம்பவத்தில் உயிரிழந்த பணிப்பெண் மாரியம்மாளின் குடும்பம், நிர்க்கதியாகி இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்த அவர், வீடுகளில் வேலைசெய்து மூன்று பெண் குழந்தைகளை வளர்த்துவந்தார். அவரின் மகள்களான வீரலட்சுமி 12-ம் வகுப்பும், ஜோதிலட்சுமி 10-ம் வகுப்பும், ராஜேஸ்வரி 8-ம் வகுப்பும் படிக்கிறார்கள். தாயை இழந்த அந்தக் குழந்தைகளின் நிலையை எண்ணி உறவினர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், கொலையான உமாமகேஸ்வரியின் வீட்டுக்கு வந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ஆனால், அருகில் உள்ள மாரியம்மாளின் வீட்டுக்குச் செல்லவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது, சமூக வலைதளங்களில் பெரும்சர்ச்சையைக் கிளப்பியது. அதனால், மறுநாள் டி.பி.எம்.மைதீன்கான் எம்.எல்.ஏ-வை மாரியம்மாள் வீட்டுக்கு அனுப்பி, ஒரு லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கினார் ஸ்டாலின்.

மாரியம்மாள் குடும்பத்தினர்
மாரியம்மாள் குடும்பத்தினர்

நெல்லை மாநகர காவல் துறை துணை ஆணையர் சரவணன், ‘‘கொலை வழக்கு விசாரணைக்காக, காவல் உதவி ஆணையர் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

உமாமகேஸ்வரியுடன் கொலையான பணிப்பெண் மாரியம்மாள் குடும்பத்துக்கு, தமிழக அரசின் சார்பில் குற்றங்களால் பாதிக்கப்பட்டோர் நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்வோம். சமூக ஆர்வலர்கள் மூலமாகவும் மாரியம்மாளின் மகள்கள் மூவருக்கும் கல்வி உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுப்போம்.

சீட்டுக்கு பணம் வாங்கிய தகராறில் கொல்லப்பட்டாரா நெல்லை முன்னாள் மேயர்?

கொலை நடந்த வீடு, ஒதுக்குப்புறத்தில் இருக்கிறது. அந்தப் பகுதியில் இருந்த சி.சி.டி.வி கேமராப் பதிவின் மூலம் இரு நபர்களை அடையாளம் கண்டிருக்கிறோம். அவர்களைத் தேடி வருகிறோம். இது தவிர, அரசியல்ரீதியாக அல்லது கொடுக்கல் வாங்கல் தொடர்பான விவகாரங்கள் குறித்த தகவல்களையும் கவனமாக விசாரிக்கிறோம். விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள்’’ என்றார் நம்பிக்கையுடன்.

பதவியைப் பறித்தார்... உயிரைப் பறிகொடுத்தார்!

நெல்லை படுகொலை சம்பவத்துக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு தி.மு.க செயற்குழு உறுப்பினரான கருணாகரன் படுகொலை செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசலைச் சேர்ந்தவர் அவர். தன் தோட்டத்தில், தந்தையின் கல்லறையைச் சுற்றி கம்பி வேலி அமைக்கும் பணியைப் பார்வையிட்ட பின்னர், வீட்டுக்கு காரில் புறப்பட்டபோது படுகொலை செய்யப்பட்டார். தி.மு.க ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் பதவியிலிருந்து சுரேஷ் என்பவர் சில மாதங்களுக்கு முன்பு தூக்கப்பட்டார். அதற்குக் காரணம் கருணாகரன் என்பதாகக் கருதி, பழிவாங்கும் நோக்கில் இந்தக் கொலை நடந்துள்ளது. இது தொடர்பாக சுரேஷ் தரப்பைச் சேர்ந்த ஐந்து பேரை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு