Published:Updated:

`வீட்டுக்குள்ள யாரும் போகக் கூடாது!' -நெல்லையில் மனநலம் பாதித்த மகனால் தாய்க்கு நேர்ந்த கொடூரம்

கொலை
கொலை ( மாதிரிப் படம் )

'மனநலம் பாதிக்கப்பட்ட அகிலனுக்கும் தாய் விமலாவுக்கும் இடையே அடிக்கடி சண்டை நடக்கும்' என அருகில் வசிப்பவர்கள் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை, ஆபுத்திரன் தெருவைச் சேர்ந்தவர் வானமாமலை. இவரது மனைவி விமலா. வானமாமலை இறந்துவிட்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் மூன்று மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. 70 வயதான விமலா, இரண்டாவது மகன் அகிலன் என்பவருடன் வசித்துவந்தார்.

உயிரிழந்த மூதாட்டி விமலா
உயிரிழந்த மூதாட்டி விமலா

ரயில்வே துறையில் பணியாற்றிய வானமாமலை, விருதுநகரில் பணியில் இருந்தபோது இறந்துவிட்டதால், அவரது மகன் அகிலனுக்கு வாரிசு அடிப்படையில் வேலை கிடைத்தது. அதனால் தாய் விமலாவுடன் அவர் விருதுநகரில் வசித்துவந்தார்.

அகிலனுக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனநலப் பிரச்னை ஏற்பட்டது. அதனால் அவரது மனைவி அவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். அவரது மனநலப் பிரச்னை காரணமாக வேலையில் குளறுபடிகள் ஏற்பட்டதால், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

மனநலம் பாதிக்கப்பட்ட அகிலன்
மனநலம் பாதிக்கப்பட்ட அகிலன்

வானமாமலை உயிருடன் இருந்தபோது, பாளையங்கோட்டை ஆபுத்திரன் தெருவில் நான்கு வீடுகளைக் கட்டியிருக்கிறார். வேலையை இழந்த அகிலன், தன் தாய் விமலாவுடன் அதில் ஒரு வீட்டில் குடியிருந்தார். மூன்று வீடுகளிலிருந்து கிடைக்கும் வாடகைப் பணத்தை வைத்து இருவரும் குடும்பத் தேவைக்கான செலவுகளைச் சமாளித்து வந்திருக்கிறார்கள்.

இருவரும் அருகில் வசிப்பவர்களிடம் அதிகம் பேசுவதில்லை எனத் தெரிகிறது. இவர்களின் வீட்டு மாடியில் குடியிருந்த மார்ட்டின் என்பவர், சில வாரங்களுக்கு முன்பு வீட்டைக் காலிசெய்துவிட்டுச் சென்றுவிட்டார். அதனால் வீட்டுக்குக் கொடுத்திருந்த அட்வான்ஸ் தொகையை விமலாவிடமிருந்து வாங்குவதற்காக மார்ட்டினின் தந்தை இன்று வந்துள்ளார்.

மூதாட்டி விமலாவின் வங்கி பாஸ்புக்
மூதாட்டி விமலாவின் வங்கி பாஸ்புக்

அட்வான்ஸ் பணத்தை வாங்க வீட்டுக்குள் செல்ல முயன்ற மார்ட்டினின் தந்தையை வாசலில் அமர்ந்திருந்த அகிலன் அனுமதிக்கவில்லை. அவரிடம் கேட்டபோது, ‘எங்கம்மா செத்துட்டாங்க’ எனச் சொல்லியிருக்கிறார். வீட்டில் இருந்து துர்நாற்றம் எழுந்ததால் சந்தேகம் அடைந்த அவர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்திருக்கிறார்.

பாளையங்கோட்டை போலீஸார் விரைந்து வந்து வீட்டுக்குள் செல்ல முயன்றபோது, அவர்களையும் வீட்டுக்குள் விட மறுத்து வாசலிலேயே அமர்ந்திருந்துள்ளார். சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர், போலீஸார் அவரைச் சமாளித்து வீட்டுக்குள் சென்று உடலைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

image
image

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், விமலா தலையில் கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. கொலை நடந்து இரு தினங்கள் ஆகியிருக்கலாம் எனவும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

மனநலம் பாதிக்கப்பட்ட அகிலனுக்கும் தாய் விமலாவுக்கும் இடையே அடிக்கடி சண்டை நடக்கும் என அருகில் வசிப்பவர்கள் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். சண்டையிட்ட போதிலும் இருவரும் சீக்கிரமே சமாதானமடைந்து சகஜமாகப் பேசிக் கொண்டிருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளனர். 

 `குடிக்க பணம் தரல; வழக்கம் போலதான் அடித்தேன்' - 80 வயது அப்பாவைக் கொலை செய்த மகன்

அதனால் 70 வயது மூதாட்டியான விமலாவை மனநலம் பாதித்த மகனே கொலை செய்தாரா அல்லது வேறு யாரேனும் வந்து கொலை செய்தார்களா என போலீஸார் விசாரித்துவருகிறார்கள்.

சண்டையின்போது, ஆத்திரத்தில் அகிலனே தாயைக் கொலை செய்துவிட்டு ’ராம்’ படப்பாணியில் அருகிலேயே அமர்ந்திருந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு