Published:Updated:

`ஈரோட்டில் கொள்ளை; நெல்லையில் பதுங்கல்! -துப்பாக்கி முனையில் வளைக்கப்பட்ட ’நீராவி’ முருகன்

நீராவி முருகன்
நீராவி முருகன்

மதுரை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய முக்கிய நபரான நீராவி முருகன், போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே உள்ள நீராவிமேடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர், முருகன். தொடக்கத்தில் வழிப்பறி, திருட்டு போன்ற பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட இவர், தனக்கென ஒரு குழுவை அமைத்து கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டார். நீராவிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் போலீஸார் பிடியில் சிக்காமல் நீராவி போல மறைவதில் வல்லவர் என்பதாலும் நீராவி என்ற அடைமொழியுடன் வலம் வந்தார். 

Vikatan
வசதி படைத்தவர்களின் வீட்டை நோட்டமிட்டு, தகுந்த சமயத்துக்காகக் காத்திருந்து கொள்ளையடிப்பது, நீராவி முருகனின் வழக்கம்.
நெல்லை மாவட்ட போலீஸார்

கொள்ளையடிப்பதில் நீராவி முருகன் கில்லாடி என்கிறார்கள், போலீஸார். வசதி படைத்த நபர்களின் வீட்டை நோட்டமிட்டு, தகுந்த சமயத்துக்காகக் காத்திருந்து மிகவும் நிதானமாக நீராவி முருகனின் கும்பல் கொள்ளையடித்துச் செல்லும். கொள்ளையடிக்கும்போது எந்தத் தடயத்தையும் விடாமல் செல்வதிலும் இந்தக் கும்பல் அனுபவம் வாய்ந்தது என்கிறார்கள்.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இந்தக் கும்பல் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்துள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு, ஈரோடு மாவட்டத்தில் இரு தொழிலதிபர்களின் வீட்டை உடைத்து உள்ளே நுழைந்து, 150 சவரன் நகையைக் கொள்ளையடித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் நீராவி முருகன் கும்பலுக்குத் தொடர்பு இருப்பதை ஈரோடு போலீஸார் கண்டுபிடித்துவிட்டனர். 

நீராவி முருகனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கார்
நீராவி முருகனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கார்

அதனால் அவரையும் அவரது கும்பலையும் பிடிக்கத் தீவிரம் காட்டிவந்தனர். ஆனால், நீராவி முருகனின் இருப்பிடம் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், ஈரோட்டில் கொள்ளையடித்ததும் அங்கிருந்து நெல்லை மாவட்டம் வள்ளியூர் வந்த அந்தக் கும்பல், அங்குள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருந்துள்ளது.

`13 வயதிலேயே தொடங்கிவிட்டேன்; திறந்து கிடக்கும் வீடுதான் டார்கெட்!'- கதிகலக்கிய `கண்மூடி' முருகன்

வள்ளியூரில், ஒதுக்குப்புறமான ஒரு வீட்டில் ஆயுதங்களுடன் ஒரு கும்பல் தங்கியிருப்பது பற்றி காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்ததால், அந்த வீட்டைக் கண்காணித்தனர். அப்போது, அந்தக் கும்பலில் நீராவி முருகனும் இருப்பது தெரியவந்தது. இதற்கிடையே, ஈரோடு போலீஸாரும் அவரைத் தேடி அங்கு வந்து சேர்ந்தார்கள். 

கைது செய்யப்பட்ட நீராவி முருகன்
கைது செய்யப்பட்ட நீராவி முருகன்

அதனால் நீராவி முருகனையும் அவரது கூட்டத்தினரையும் வீட்டைச் சுற்றி வளைத்துப் பிடிக்க போலீஸார் தீவிரம் காட்டினார்கள். அதற்குள் அந்தக் கும்பல், இரு கார்களில் ஏறி தப்பிச்செல்ல முயன்றது. போலீஸார், அந்த காரை விரட்டிச் சென்று துப்பாக்கியால் சுட்டனர். கார் பழுதடைய, காரில் இருந்த மூவர் ஓடி தப்பிவிட்டனர். மற்றொரு காரிலிருந்த நீராவி முருகன், அவரது கூட்டாளி ரஞ்சித் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்துவருகிறது.

அடுத்த கட்டுரைக்கு