Published:Updated:

2000 பேரில் சந்தேகம் 150 பேர், கைதானது 2 பேர்!- வீரத்தம்பதி வழக்கில் கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?

கொள்ளை முயற்சி நடந்து ஒன்றரை மாதங்களான நிலையில், இந்த வழக்கில் இரண்டு நாள்களில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

வீரத்தம்பதி
வீரத்தம்பதி

நெல்லை மாவட்டம் கடையத்தைச் சேர்ந்தவர், சண்முகவேல். தனியார் நூற்பாலையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற பின்னர், மனைவி செந்தாமரையுடன் தோட்டத்தில் வீடு கட்டிக் குடியிருந்துவருகிறார். அவரின் இரு மகன்கள், வெளிமாவட்டங்களில் பணியாற்றிவருகிறார்கள். மகள், வெளிநாட்டில் வசித்துவருகிறார். கடையத்தில் இயற்கை விவசாயம் செய்துவரும் அவர்கள், தனியாக வசித்துவருவதால் வீட்டைச் சுற்றிலும் 14 சிசிடிவி கேமராக்கள் வைத்திருந்தனர். இந்த நிலையில், ஆகஸ்ட் 11-ம் தேதி வீட்டுக்குள் நுழைந்த இரு மர்ம நபர்கள், அரிவாளைக் காட்டி மிரட்டிக் கொள்ளையடிக்க முயன்றனர்.

வீரத்தம்பதி
வீரத்தம்பதி

வீட்டுக்குள் நுழைந்த இரு மர்ம நபர்கள், அரிவாளால் மிரட்டியபோதிலும் அச்சமடையாத இருவரும் சேர்ந்து கொள்ளையரை அடித்து விரட்டினார்கள். அது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வைரலாகப் பரவியதால், சுதந்திர தினத்தன்று இந்த வீரத்தம்பதிக்கு முதல்வரின் வீரதீர விருது வழங்கப்பட்டது. முதியவர்களின் வீட்டுக்குள் நுழைந்த நபர்கள் யார் என்பது தொடர்பாகக் கடையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சண்முகவேல் வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலமாகக் கொள்ளையர்களைக் கண்டுபிடிக்க தனிப்படை போலீஸார் முயன்றனர்.

கொள்ளையர்களைக் கண்டுபிடிப்பதில் காவல்துறைக்குச் சிரமம் ஏற்பட்டதுடன், சிறு க்ளூ கூட கிடைக்கவில்லை. கொள்ளை முயற்சி நடந்து ஒன்றரை மாதங்களான நிலையில், இந்த வழக்கில் இரண்டு நாள்களில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். அதன்படி, கொள்ளையர்களை நெருங்கிவிட்டோம் என காவல்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் இன்று பாலமுருகன் (30), பெருமாள் (54) ஆகிய இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

police
police

கொள்ளையர்கள் சிக்கியது எப்படி என்பது பற்றிப் பேசிய நெல்லைச் சரக டிஐஜி பிரவீன்குமார் அபினவ், ``பிடிபட்ட இருவரில் ஒருவர், சின்ன கடையம் பகுதியைச் சேர்ந்தவர். இன்னொருவர், தூத்துக்குடி மாவட்டம். இவர்கள் இருவர்தான் செந்தாமரையின் தாலி செயினைப் பறித்துச்சென்றுள்ளனர். இந்தக் கொள்ளைக்குக் காரணம் பாலமுருகன்தான். அவரும் இந்தப் பகுதி என்பதால், இவர்கள் தனிமையில் இருப்பதை அறிந்து கொள்ளைக்குத் திட்டமிட்டுள்ளார். சம்பவம் நடப்பதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பாகவே இந்தப் பகுதியில் நோட்டமிட்டுள்ளனர்.

வீரத் தம்பதி வீட்டை நோட்டமிட்டனர்; இரவில் நடந்த போலீஸ் சேஸிங்!- பைக்கில் தப்பிய மர்ம நபர்கள்

சரியாக மூன்றாவது நாள், திட்டமிட்டு கொள்ளையடித்துள்ளனர். இந்தக் கொள்ளைக்குப் பிறகு, பொன்மலை நகர் பகுதியில் ஒரு தொழிலாளியிடமும் செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதற்குப் பிறகு, இவர்கள் கொள்ளையடித்த காட்சிகள் வாட்ஸ்அப்பில் அதிகமாகப் பகிரப்படவும், இருவரும் தலைமறைவாக இருந்துள்ளனர். தலைமறைவுக்குப் பிறகு, இருவரும் கீழக்கடையம் ரயில் நிலையம் வரும்போது கைதுசெய்தோம். ஏற்கெனவே நடந்த கொள்ளையை வைத்தே, அவர்களைப் பிடிக்க முயன்றோம். பாலமுருகன் மீது 38 வழக்குகளும், பெருமாள் மீது 8 வழக்குகளும் உள்ளன. பெருமாள், தூத்துக்குடி, நெல்லையில் தான் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். ஆனால் பாலமுருகன், அனைத்து மாவட்டங்களிலும் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்" என்றார்.

கொள்ளையர்கள்
கொள்ளையர்கள்
கொள்ளையர்கள்
கொள்ளையர்கள்

இந்த வழக்கில் முக்கியமாக உதவியது, சிசிடிவி காட்சிகள்தான். இருப்பினும், குற்றவாளிகள் முகமூடி அணிந்திருந்தது வழக்கில் மிகப்பெரிய சிரமத்தை ஏற்படுத்தியது. சம்பவம் நடைபெற்ற பிறகு, 2000 பேரை லிஸ்ட் எடுத்து, பின்னர் சந்தேகத்தின் அடிப்படையில் 150 பேரை சிசிடிவி காட்சிகளில் உள்ள உருவ ஒற்றுமையைச் சரிபார்த்துள்ளனர். இதில்தான் இருவரும் சிக்கியுள்ளனர். இவர்களின் நோக்கம் கொலைசெய்வது கிடையாது. கொள்ளை மட்டுமே குறிக்கோளாக இருந்ததால்தான் சண்டைக்குப் பிறகும் அமைதியாகச் சென்றுள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது. குற்றவாளிகள் பிடிபட்டதால், அந்தப் பகுதியினர் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

"தாக்குதலுக்கும் பசுமை விகடனுக்கும் சம்பந்தம் இல்லை!" - கொள்ளையர்களை விரட்டிய தம்பதி