Published:Updated:

`அப்பாவுக்கு வீடியோ கால்; கண்மூடித்தனமாக அடித்த தாயின் நண்பர்!' -நெல்லை சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்

சொரிமுத்து, தீபா
சொரிமுத்து, தீபா

நெல்லையில் 4 வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக சிறுவனின் தாயை போலீஸார் கைது செய்துள்ளனர் .

நெல்லை மாவட்டம் விக்ரமசிங்கபுரம் அருகே உள்ள டாணா பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி பிரகாஷ். இவர் எல்.பி.ஜி டேங்கர் லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும் பொள்ளாட்சியைச் சேர்ந்த தீபா என்ற இளம்பெண்ணுக்கும் செல்போன் மூலம் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். இரு குடும்பத்திலும் எதிர்ப்பு ஏற்பட்ட போதிலும், இருவரும் உறுதியுடன் இருந்து காதல் திருமணம் செய்துகொண்டனர். கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி அந்தோணி பிரகாஷுக்கும் தீபாவுக்கும் மணம் முடிந்தது. மனைவியை சொந்த ஊருக்கு அழைத்து வந்தார், அந்தோணி பிரகாஷ். இவர்களுக்கு நான்கு வயதில் லோகேஷ் என்ற மகன் இருந்தார்.

அந்தோணி பிரகாஷ், தீபா
அந்தோணி பிரகாஷ், தீபா

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீபா மகளிர் சுயஉதவிக் குழுவில் சேர்ந்தார். அந்தப் பகுதிப் பெண்களுடன் சுய உதவிக் குழுவில் இணைந்த அவர், அங்குள்ள தனியார் தொண்டு நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார். கடன் தொகையை மாதந்தோறும் வசூலிக்க அருணாசலபுரத்தைச் சேர்ந்த சொரிமுத்து என்பவர் தீபா வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

`கொலை வழக்கு... ஆயுள் தண்டனை!'- மருத்துவர் கனவுக்காக உழைத்த கைதியின் கதை

அந்தோணி பிரகாஷ், டேங்கர் லாரியின் டிரைவராக இருப்பதால் வேலை விஷயமாக அடிக்கடி வெளியூர் சென்றுவிடுதால் சொரிமுத்து அடிக்கடி தீபாவைச் சந்திக்க வந்துள்ளார். தன் 4 வயது மகனுடன் தனியாக இருக்கும் தீபாவுடன் ஏற்பட்ட நட்பு நாளடைவில் கூடா நட்பாக மாறியிருக்கிறது. இதுகுறித்து அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் மூலம் அந்தோணி பிரகாஷுக்குத் தெரியவந்துள்ளது. அவர் மகன் லோகேஷுடன் வீடியோ கால் மூலம் ஒருநாள் பேசியபோது, வீட்டில் சொரிமுத்து இருப்பதைப் பார்த்துவிட்டார்.

Representation image
Representation image

மனைவியின் மோசமான நடவடிக்கையை அந்தோணி பிரகாஷ் கண்டித்துள்ளார். அதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருநாள் தகராறு முற்றவே, தீபா விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதன் பின்னர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வீடு திரும்பியிருக்கிறார். அதன் பின்னரும் அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்படவில்லை. சொரிமுத்துவுடனான நட்பைத் துண்டிக்குமாறு அந்தோணி பிரகாஷ் பலமுறை வலியுறுத்தியும் அவர்களின் நட்பு தொடர்ந்ததாகச் சொல்கிறார்கள். இந்த நிலையில், அந்தோணிபிரகாஷ் பணியின் நிமித்தமாக வெளியூர் சென்ற நிலையில், கடந்த 20-ம் தேதி தீபா தன்னுடைய நான்கு வயது மகன் லோகேஷை அழைத்துக் கொண்டு, ஆண் நண்பர் சொரிமுத்துவுடன் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு விடுதியில் தங்கியுள்ளார். மறுநாள் சிவராத்திரியை முன்னிட்டு தீபா தன் மகன் மற்றும் சொரிமுத்துவுடன் நெல்லையப்பர் கோயிலுக்குச் சென்றுள்ளார்.

தீபா மட்டும் கோயிலுக்குள் சென்ற நிலையில் அவரின் கணவர் அந்தோணி பிரகாஷ், மனைவி தீபாவை வீடியோ காலில் அழைத்துள்ளார். அப்போது செல்போனை லோகேஷ் வைத்திருந்ததால், அவர் தந்தையுடன் பேசியிருக்கிறார். அப்போது, `எங்கே இருக்கிறாய்?' என தந்தை கேட்டதற்கு, 'அம்மா கோயிலுக்குப் போயிருக்காங்க. நான் கோயில் வாசலில் ஒரு மாமாவுடன் இருக்கிறேன்' என்று சொன்னதுடன் சொரிமுத்துவையும் தந்தையிடம் காட்டியிருக்கிறார்.

சொரிமுத்து
சொரிமுத்து

தன்னைப் பற்றிய விவரத்தை சிறுவன் லோகேஷ் காட்டிக் கொடித்து விட்டதால் ஆத்திரம் அடைந்த சொரிமுத்து, சிறுவன் லோகேஷை அடித்து உதைத்துள்ளார். கடுமையாகத் தாக்கப்பட்டதால் காயமடைந்த சிறுவன், பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார். கோயிலில் இருந்து வெளியே வந்த தீபா, மகனின் நிலையைப் பார்த்ததும் பதறியுள்ளார். பின்னர், இருவரும் லோகேஷை தூக்கிக்கொண்டு மீண்டும் ஹோட்டலுக்குச் சென்றுள்ளனர். சிறுவனின் உடல்நிலை மிகவும் மோசமானதால் அச்சம் அடைந்த இருவரும் உடனடியாக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிறுவன் லோகேஷை சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். அப்போது தன்னை சிறுவனின் தந்தை என்று சொரிமுத்து சொல்லியதுடன் கையொப்பமிட்டு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.

சிறுவன் லோகேஷுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். உடனடியாக தீபா தன் கணவருக்குத் தகவல் தெரிவித்துள்ளார் . மருத்துவமனைக்கு வந்த அந்தோணி பிரகாஷ், தன்னை சிறுவன் லோகேஷின் தந்தை என்று கூறியுள்ளார். அப்போது மருத்துவமனையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே சொரிமுத்து தானே தந்தை என்று கையொப்பமிட்டிருப்பதை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தீபா
தீபா

இது அந்தோணி பிரகாஷ் மற்றும் அவரது உறவினர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சமயத்தில் சொரிமுத்து அங்கு நின்றதால், அவரிடம் அந்தோணி பிரகாஷ் மற்றும் அவரது உறவினர்கள் தகராறு செய்துள்ளனர். வாக்குவாதம் முற்றியதால் சொரிமுத்து அங்கிருந்து தப்பியோடிவிட்டார். சிறுவனின் சந்தேக மரணம் தொடர்பாக அந்தோணி பிரகாஷ் உறவினர்கள் மேலப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீஸார் விசாரணை நடத்தியதில் தீபாவுக்கும் சொரிமுத்துக்கும் இடையே பழக்கம் இருந்தது தெரியவந்தது, அதற்கு இடையூறாக லோகேஷ் இருந்துள்ளதால் அடித்துக் கொலை செய்ததும் தெரியவந்தது. சொரிமுத்து தாக்கியதால் சிறுவன் லோகேஷுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையும் தீபா ஒப்புக்கொண்டதால், அவரை போலீஸார் கைது செய்தனர். இந்தச் சம்பவத்தில் தேடப்பட்டு வந்த சொரிமுத்து, போலீஸாரிடம் சரண் அடைந்துள்ளார். அவரிடம் மேலப்பாளையம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கூடா நட்பால் குடும்பமே சிதைந்ததுடன், குழந்தையும் பலியான சம்பவம் அப்பகுதில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு