Published:Updated:

`நான் குண்டக்க மண்டக்க மாட்டிக்கொண்டேன்!' -புகாரளித்த பெண்ணின் வீடியோவால் சிக்கலில் நெல்லை எஸ்.ஐ

பத்திரகாளி
பத்திரகாளி

எனக்கும் தி.மு.க பிரமுகருக்கும் தொழில்போட்டி இருந்துவருகிறது. அதனால்தான் தி.மு.க பிரமுகரின் செங்கல்சூளையில் வேலைபார்க்கும் பத்திரகாளி என்பவர் மூலம் என் மீது பொய்ப் புகார் கொடுத்துள்ளனர்.

நெல்லை மாவட்டம், நாங்குநேரி தாலுகா, மாவடியைச் சேர்ந்தவர் பிராங்ளின் பாலசிங் (41). இவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில், ``நான் மேற்படி விலாசத்தில் என் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் குடியிருந்துவருகிறேன். சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு கௌரவமான முறையில் வாழ்ந்துவருகிறேன். எனக்கும் எங்கள் ஊரைச் சேர்ந்த தி.மு.க பிரமுகர் ஒருவருக்கும் குளத்தில் மண் எடுப்பதற்கு அரசிடம் அனுமதி பெறுவது தொடர்பாக தொழில் போட்டி இருந்தது. அந்தப் பிரமுகரை மீறி நான் மண் எடுப்பதற்கு அனுமதி பெற்றேன். இதிலிருந்து தி.மு.க பிரமுகருக்கு என் மீது காழ்ப்புணர்ச்சி ஏற்பட்டது. மேலும், எனது தொழில் வளர்ச்சியைக் கண்டு தி.மு.க பிரமுகர் மற்றும் அவரின் மகன் என்னை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று செயல்பட்டுவருகின்றனர்.

பிராங்ளின் பாலசிங்
பிராங்ளின் பாலசிங்
`போலீஸ் எப்போது எப்படியிருப்பார்கள் எனக் கூற முடியாது!'- மாணவர்களின் சிஏஏ போராட்டம் குறித்து ரஜினி

இந்தச் சூழ்நிலையில் 1.2.2020- ம் தேதி அன்று காலை 8 மணியளவில் நடக்காத சம்பவத்தை நடந்தாகக் கூறி பத்திரகாளி என்பவரின் மூலம் பொய்யாகப் புகார் மனுவைப் பெற்று சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமாரின் ஏற்பாட்டில் முதல்நிலைக் காவலர் சுடலைக்கண்ணு என் மீது 294 பி 323 506 (11) தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமைச் சட்டம் 2002ன் கீழ் வழக்கு பதிந்தார். தொடர்ந்து, சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார், தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து 1.2.2020 மதியம் 12.30 மணியளவில் எனது வீட்டுக்கு வந்து வாசலில் வைத்து என் மனைவி சுவிட்லின் சோபியா மற்றம் எனது குழந்தைகள் முன்னிலையில் அவதூறாகப் பேசினார். பின்னர் வலது கையில் வைத்திருந்த கம்பால் என் வலது கால் மூட்டுக்குக் கீழே தாக்கினார். இதனால் எனது காலில் காயம் ஏற்பட்டது. மேற்படி சம்பவத்தை எனது மனைவி மற்றும் குழந்தைகள் பார்த்தனர். உடை மற்றும் செருப்பு அணிவிக்க நேரம் கொடுக்காமல் மனிதாபிமானமற்ற முறையில் என்னைக் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

பின்னர் எனது மகள் மீதும் என் அண்ணன் மகன் மீதும் செல்போனில் ஆபாச படம் அனுப்பியதாகச் சொல்லி பொய் வழக்கு போட்டு கைது செய்து அவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்குவேன் என்று மிரட்டினார். பின்னர் காவல் நிலையத்தில் வைத்து எஸ்.ஐ. சிவக்குமார் எனது மகனின் கண் முன்னால் மீண்டும் என்னை அடித்தும் பூட்ஸ் காலால் மிதித்தும் உள்காயம் ஏற்படுத்தியும் சித்ரவதை செய்தார். மேற்படி தி.மு.க பிரமுகர் மற்றும் அவரின் அப்பா ஆகியோரின் தூண்டுதலின்பேரில் எஸ்.ஐ.யும் போலீஸ்காரர் சுடலைமணியும் என்னை சித்ரவதை செய்தனர். என்னை மேற்படி வழக்கில் சட்டவிரோதமாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது எஸ்.ஐ தாக்கியதைக் கூறினேன். இந்த வழக்கில் வள்ளியூர் நீதிமன்றம் எனக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.

காலில் காயத்தைக் காட்டும் பிராங்ளின்
காலில் காயத்தைக் காட்டும் பிராங்ளின்

நான் சிறையிலிருந்து 6.1.2020-ம் தேதி காலையில் வெளியில் வந்தேன். எஸ்.ஐ தாக்கியதால் எனக்கு ஏற்பட்ட காயத்துக்கு நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். எதிர்மனுதார்களான சுடலைக்கண்ணு, எஸ்.ஐ சிவக்குமார் ஆகியோரின் செயல் மனித உரிமையை மீறியதாகும். அதனால் நான் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்பட்டுள்ளேன். புகார் கொடுத்த பத்திரகாளி என்பவரை, என்மீது அக்கறை கொண்டவர்கள் மற்றும் உறவினர்கள் நேரில் சந்தித்து விசாரித்தனர். அப்போது அவர், யார் மீது புகார் கொடுக்கிறேன் என்று தெரியாது என்றும் தன்னை தி.மு.க பிரமுகர் மற்றும் அவரின் உறவினர்தான் புகார் கொடுக்கக் கூறியதாகவும் தெரிவித்தார்.

மேலும், அவர்கள் கடன் பிரச்னைக்கு உதவுவதாகக் கூறி என்னை மருத்துவமனையில் தங்க வைத்துள்ளனர் என்று கூறியுள்ளார். பத்திரகாளி கூறிய வாக்குமூலத்தை செல்போனில் வீடியோவாக எடுத்து புகாரோடு இணைத்துள்ளேன். தி.மு.க பிரமுகர் மற்றும் அவரின் குடும்பத்தினர் தூண்டுதலின்பேரில் காவலர் சுடலைக்கண்ணு, எஸ்.ஐ சிவக்குமார் ஆகியோர் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து மனித உரிமை மீறிய செயல்களைச் செய்துள்ளனர். எனவே, மனித உரிமை ஆணையம் சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் எனக்குத் தகுந்த நிவாரணம் வழங்கவும் நஷ்ட ஈடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து பிராங்ளின் பாலசிங்கிடம் பேசினோம். ``நான் சமத்துவ மக்கள் கட்சியில் ஒன்றிய இளைஞரணிச் செயலாளராக உள்ளேன். எனக்கும் தி.மு.க பிரமுகருக்கும் தொழில்போட்டி இருந்துவருகிறது. அதனால்தான் தி.மு.க பிரமுகரின் செங்கல்சூளையில் வேலைபார்க்கும் பத்திரகாளி என்பவர் மூலம் என் மீது பொய்ப் புகார் கொடுத்துள்ளனர். பத்திரகாளியின் பின்னணியில் தி.மு.க பிரமுகரும் அவரின் குடும்பமும் உள்ளது. என் மீது புகார் கொடுத்த பத்திரகாளிக்கும் எனக்கும் எந்தவித முன்விரோதமும் கிடையாது. மேலும், மருத்துவமனையில் உள்ள பத்திரகாளி, வீடியோவில் யார் மீது புகார் கொடுக்கிறோம் என்றுகூட தெரியாது என்று சொல்கிறார். எனவே, என்மீது பொய் வழக்குபதிந்த எஸ்.ஐ. சிவக்குமார், காவலர் சுடலைக்கண்ணு மற்றும் சம்பந்தப்பட்ட தி.மு.க பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாநில மனித உரிமை ஆணையம், மாவட்ட கலெக்டர், மாவட்ட எஸ்.பி ஆகியோரிடம் மனு கொடுத்துள்ளேன்.

பிராங்ளின் எக்ஸ்ரே
பிராங்ளின் எக்ஸ்ரே

என்னுடைய உறவினர் ஒருவர் அ.தி.மு.கவில் முக்கியப் பதவியில் இருக்கிறார். அவரின் மகளின் திருமணத்துக்கு நான் செல்வதைத் தடுக்க 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் என் மீது தி.மு.க பிரமுகர் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டது. கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போதே எனக்கும் தி.மு.க பிரமுகருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது. அதற்கு பழிவாங்கத்தான் தொடர்ச்சியாக என் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்படுகிறது" என்றார்.

பிராங்ளின் பாலசிங் மீது புகார் கொடுத்த பத்திரகாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவில், ``சில மாதங்களுக்கு முன் இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு மனு கொடுத்திருந்தேன். ஆனால், எனக்கு பட்டா கிடைக்கவிடாமல் ஊரில் சிலர் தடுப்பதாக தி.மு.க பிரமுகர் தெரிவித்தார். அதனால்தான் கையெழுத்து போட்டுக் கொடுத்தேன். எனக்கு வீடு வாங்கித் தருவதாகக் கூறியுள்ளனர். நான் இப்போது குண்டக்க மண்டக்க மாட்டிக்கொண்டேன்" என்று கூறியுள்ளார். அந்த வீடியோவைத்தான் மாநில மனித உரிமை ஆணையத்தில் ஆதாரமாக பிராங்ளின் பாலசிங் கொடுத்துள்ளார்.

எப்ஐஆர் நகல்
எப்ஐஆர் நகல்

பிராங்ளின் மீது பதிவு செய்துள்ள எப்ஐஆரில், ``நான் (பத்திரகாளி) கூலி வேலை செய்துவருகிறேன். எனக்கு மாவடியைச் சேர்ந்த நடேசன் என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக பிரச்னை இருந்துவருகிறது. இதைக் காரணமாக வைத்து அவரது உறவினர் பிராங்ளின் என்பவர் என்னைத் தெருவில் காணும்போதெல்லாம் அவதூறாகப் பேசிவந்தார். 1.2.2020-ம் தேதி நான் பனங்கிழங்கு விற்றுக் கொண்டிருக்கும்போது அங்கு வந்த பிராங்ளின் என்னை அவதூறாகப் பேசிபடி காலால் எட்டி உதைத்தார். அதில் எனக்கு முதுகில் ஊமைக்காயம் ஏற்பட்டது. வலிதாங்காமல் நான் சத்தம் போடவும் அங்கு நின்றுகொண்டிருந்த பிராங்ளினுடன் வந்தவர்கள் எனக்குக் கொலை மிரட்டல் விடுத்தனர். எனக்கு உயிர்பயமாக உள்ளது. எனவே பிராங்ளின் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிராங்ளினின் குற்றச்சாட்டு குறித்து எஸ்.ஜ சிவக்குமாரிடம் கேட்டதற்கு,``பத்திரகாளி என்பவர் கொடுத்த புகாரின்பேரில் பிராங்ளின் மீது எஃப்.ஐ.ஆர் பதிந்து கைது செய்துள்ளோம். மாநில மனித உரிமை ஆணையத்தில் என் மீதும் காவலர் சுடலைக்கண்ணு மீதும் புகார் கொடுத்த தகவல் எதுவும் எனக்குத் தெரியாது" என்றதோடு முடித்துக் கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு