Published:Updated:

`பல வருடப் பகை; விளையாட்டுப் போட்டியில் தகராறு!'- பொங்கல் அன்று களக்காடு இளைஞருக்கு நேர்ந்த சோகம்

கொலை செய்யப்பட்ட சுரேஷ்
கொலை செய்யப்பட்ட சுரேஷ்

இரண்டு கிராமங்களுக்கிடையே ஏற்கெனவே முன்பகை இருந்திருக்கிறது. இந்தச் சூழலில், பொங்கல் விளையாட்டுப் போட்டியின்போது வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம், பூலம் ஆகிய இரண்டு கிராமங்களைச் சேர்ந்த மக்களிடையே, கடந்த சில வருடங்களாகப் பகை இருந்துள்ளது. இரண்டு கிராமத்தினரும் அவ்வப்போது மோதலில் ஈடுபடுவதும் பெரியவர்கள் வந்து சமாதானப்படுத்தி அனுப்பி வைப்பதுமாக இருந்து வந்துள்ளது.

Vikatan

இந்த நிலையில், பொங்கல் விழாவையொட்டி சிங்கிகுளம் கிராமத்தில் நேற்று மாலை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. அதில், அருகில் உள்ள பூலம் கிராமத்தைச் சேர்ந்தவர்களும் ஆர்வத்துடன் வந்து பங்கேற்றிருக்கிறார்கள்.

விளையாட்டுப் போட்டிகள் நடந்துகொண்டிருக்கும்போதே, வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது தொடர்பாக இரண்டு கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே மோதல் எழுந்திருக்கிறது. இரு தரப்பைச் சேர்ந்த பெரியவர்களின் முயற்சியால் அனைவரும் கலைந்து சென்றிருக்கிறார்கள்.

மாதிரி படம்
மாதிரி படம்

இரண்டு கிராமங்களும் அருகருகே இருப்பதால், பூலம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்ற 23 வயது இளைஞர், சிங்கிகுளம் கிராமத்தில் உள்ள டீக்கடை அருகே நின்று நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது, சிங்கிகுளம் இளைஞர்கள் சிலர் அரிவாளுடன் வந்து அவரை சரமாரியாக வெட்டியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தங்கள் கிராமத்து இளைஞரை சிங்கிகுளம் கிராமத்து இளைஞர்கள் வெட்டிக் கொன்றதை அறிந்த பூலம் கிராமத்தினர், சிங்கிகுளம் கிராமத்துக்குள் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்து தாக்குதல் நடத்தி, வீடுகளை அடித்துநொறுக்கி, பொருள்களைச் சூறையாடியதோடு, நான்கு வீடுகளுக்கு தீவைத்துள்ளனர்.

சடலமாக சுரேஷ்
சடலமாக சுரேஷ்

சம்பவம் பற்றி அறிந்ததும் விரைந்து வந்த களக்காடு காவல்துறையினர், சுரேஷின் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அத்துடன், கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டதால் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. சுரேஷைக் கொலை செய்த குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

பின் செல்ல