Published:Updated:

`திருமணம் முடிந்து ஒருமாதம் கூட ஆகவில்லை!' - நெல்லை புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த கொடூரம்

நெல்லையில் காதல் திருமணம் செய்த வாலிபரைக் கொலை செய்து உடலைத் தண்டவாளத்தில் வீசிச் சென்ற உறவினர்கள் 5 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலையான நம்பிராஜன்
கொலையான நம்பிராஜன்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் அருணாசலம். கூலித் தொழிலாளி. இவரின் மனைவி சண்முகத்தாய். சத்துணவு மையத்தில் வேலை செய்து வருகிறார். இந்தத் தம்பதியின் இரண்டாவது மகனான நம்பிராஜன் என்ற 21 வயது இளைஞர், அங்குள்ள பால் பண்ணையில் வேலை செய்து வந்தார்.

Vikatan

நம்பிராஜனுக்கு அதே ஊரைச் சேர்ந்த தங்கப்பாண்டி என்பவரின் மகள் வான்மதிக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், இரு குடும்பத்துக்கும் இடையே ஏற்கெனவே தகராறு இருந்து வந்துள்ளது. அதனால் இரு குடும்பத்திலும் காதலுக்கு எதிர்ப்பு இருந்திருக்கிறது. குறிப்பாக வான்மதியின் குடும்பத்தினரிடம் கடுமையான எதிர்ப்பு இருந்திருக்கிறது.

பெற்றோரின் எதிர்ப்புகளை எல்லாம் மீறி நம்பிராஜனும் வான்மதியும் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். சொந்த ஊரிலிருந்தால் பிரச்னை ஏற்படும் என்பதால் இருவரும் நெல்லை டவுன் பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்திருக்கிறார்கள். இரு மாதங்களாக மணமக்கள் தனி வீட்டில் குடியிருந்துள்ளனர்.

நம்பிராஜன்
நம்பிராஜன்

இனி மேல் தங்களுக்கு எந்தவிதமான ஆபத்தும் இருக்காது எனக் காதல் தம்பதியர் நம்பியிருந்தனர். இந்த நிலையில், சொந்த ஊரில் மேடைப் பாடகர் கானா சங்கர் என்பவர் மரணமடைந்தார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற வான்மதியின் சகோதரர் செல்லச்சாமி என்பவரிடம் நண்பர்கள் சிலர், `உன் தங்கச்சிய ஒருத்தன் காதலித்து கல்யாணம் செஞ்சுட்டானாமே?’ எனக் கேட்டுள்ளனர்.

தங்கையின் காதல் திருமணத்தால் தனக்கு அவமானம் ஏற்பட்டதாக செல்லச்சாமி கருதியிருக்கிறார். அதனால் காதல் திருமணத்தின் மூலம் தன் குடும்பத்தை அவமானப்படுத்திய நம்பிராஜனைத் தீர்த்துக்கட்ட வேண்டும் என முடிவு செய்திருக்கிறார். அதற்கு நண்பர்கள் உதவியைக் கேட்டுள்ளார். நண்பர்கள் உதவியுடன் 10 பேர் நெல்லைக்கு வந்திருக்கிறார்கள்.

தங்கையைக் காதல் திருமணம் செய்தவரை அழைத்துச் சென்று மது விருந்தளித்து கொலை செய்து ரயில்வே தண்டவாளத்தில் வீசியுள்ளனர்.
காவல்துறையினர்.

சந்தேகம் ஏற்படாத வகையில் நம்பிராஜனிடம் பேசி வரவழைத்திருக்கிறார்கள். அங்கு வந்த நம்பிராஜனுக்கு மது விருந்தளித்திருக்கிறார்கள். அளவுக்கு அதிகமாக நம்பிராஜனை மதுகுடிக்க வைத்த செல்லச்சாமியும் அவரது நண்பர்களும் திடீரென கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறார்கள். பின்னர் சந்தேகம் ஏற்படாத வகையில் ரயில்வே தண்டவாளத்தில் உடலைக் கிடத்திவிட்டனர். அந்த சமயத்தில் வந்த பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது.

சந்தேகத்துக்கு இடமான வகையில் ரயில்வே தண்டவாளத்தில் உடல் கிடந்ததால் போலீஸார் விசாரணை நடத்தினார்கள். அப்போது இரவு 9 மணியளவில் நண்பர் ஒருவர் வந்து நம்பிராஜனை அழைத்துச் சென்றதை அவரது மனைவி வான்மதி தெரிவித்துள்ளார். அதனால் போலீஸார் நண்பர்கள் வட்டாரத்தினரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

உருட்டுக்கட்டை, இரும்புக்கம்பி, அரிவாள்...நெல்லையில் கொடூரம்!

போலீஸ் விசாரணையில் வான்மதியின் அண்ணன் செல்லச்சாமியும் அவரது நண்பர்களும் சேர்ந்து நம்பிராஜனை கொலை செய்ததும் அதை மறைக்கும் வகையில் ரயில்வே தண்டவாளத்தில் உடலைக் கிடத்தியதும் தெரியவந்தது. இது தொடர்பாக செல்லச்சாமி, மது குடிக்க அழைத்துச்சென்ற முத்துப்பாண்டி, செல்லதுரை, லெஃப்ட் முருகன் உள்ளிட்ட 5 பேரைப் பிடித்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள். அவர்கள் விரைவில் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது.