Published:Updated:

` மூக்குக்கண்ணாடியில் ரகசிய கேமரா; அதிகாலை அழைப்பு!' - சின்மயானந்த் விவகாரத்தில் குமுறிய மாணவி

முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தாவால் பாலியல் வன்கொடுமைக்குள்ளான மாணவி, தனக்கு நேர்ந்த கொடுமைகளைப் பற்றிப் பேசியிருக்கிறார்.

Chinmayanand
Chinmayanand

உத்தரப்பிரேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் உள்ள எஸ்.எஸ் சட்டக்கல்லூரியின் நிறுவனராக இருப்பவர் சுவாமி சின்மயானந்த். பா.ஜ.க மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான இவர், அந்தக் கல்லூரியில் படித்த ஒரு மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட அந்தப் பெண் ஃபேஸ்புக்கில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டார்.

Chinmayanand's College
Chinmayanand's College

சின்மயானந்த் விவகாரம் பெரும் சர்ச்சையானதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக ஸ்பெஷல் டீம் ஒன்று அமைக்கப்பட்டது. ஆனாலும், சின்மயானந்த் மீது பாலியல் குற்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. அவரைக் கைது செய்யவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டினார் பாதிக்கப்பட்ட மாணவி. இதனால் கடந்த 20-ம் தேதி சின்மயானந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் தற்போது லக்னோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், சின்மயானந்த்தால் தனக்கு நேர்ந்த அனைத்துக் கொடுமைகளையும் போலீஸாருக்கு வாக்குமூலமாகக் கொடுத்திருக்கிறார் பாதிக்கப்பட்ட மாணவி. இதை `தி பிரின்ட்’ ஊடகம் வெளியிட்டுள்ளது.

போலீஸிடம் மாணவி அளித்த வாக்குமூலம் பின்வருமாறு:

``கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில், முதன்முறையாக என்னிடம் தனியாகப் பேச வேண்டும் என சின்மயானந்த் அவரது அறைக்கு அழைத்தார். அப்போதெல்லாம் அவர் மீது எனக்கு நிறைய மரியாதை இருந்தது. அவரைப் பார்த்து நான் பயந்தது இல்லை. என் படிப்புக்காக நிறைய முறை பாராட்டியுள்ளார்.

Chinmayanand
Chinmayanand

அப்படி ஒரு விஷயத்துக்காகப் பாராட்டவே அழைக்கிறார் என்று நினைத்துதான் சென்றேன். அவர் என்னை `மகளே’ என்றுதான் அழைப்பார். அன்றும் என்னை அழைத்து அருகில் அமரச்சொல்லி அவரது செல்போனைக் காட்டினார். அதைப் பார்த்ததும் நான் அதிர்ந்துபோனேன். அதில் நான் குளிக்கும் வீடியோ இருந்தது. வீடியோவைப் பார்த்து நான் கதறி அழத் தொடங்கினேன். அவர் சிரிக்கத் தொடங்கிவிட்டார். அன்று முதல் என்னை மிரட்டித் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்தார். என் பேச்சை மீறினால் வீடியோவை வெளியில் கசிய விட்டுவிடுவேன் என மிரட்டினார்.

`43 வீடியோக்கள், 20 பக்க புகார், கொலை மிரட்டல்..!’ - பாலியல் வழக்கில் கைதான சுவாமி சின்மயானந்த்

என்னால் வெளியில் யாரிடமும் சொல்ல முடியவில்லை. நான் சொல்வதைக் கேட்க யாரும் தயாராகவும் இல்லை. சின்மயானந்த் ஆசிரமத்தில் இருந்தால் நான் பயத்திலேயே இருப்பேன். தினமும் காலை 6 மணிக்கு என்னை அழைத்து மசாஜ் செய்யச் சொல்வார். மதியம் 2.30 மணியானால் ஆயுதம் ஏந்திய காவலர்கள் என்னுடைய விடுதிக்கு வந்து என்னைப் பாதுகாப்பாக அவரது அறைக்கு அழைத்துச் செல்வார்கள். பின் அவர் என்னைக் கொடுமைப்படுத்தத் தொடங்குவார்.

Victim
Victim

எனக்கு அதிகம் நண்பர்கள் கிடையாது. யாரிடமும் பெரிதாகப் பேச மாட்டேன். அதை அறிந்துகொண்டுதான் அவர் என்னைத் துன்புறுத்தினார். சின்மயானந்தின் பாதுகாவலர்கள் இரண்டு பேர் எப்போதும் என்னைக் கண்காணித்துக்கொண்டே இருப்பார்கள். யாரேனும் கேட்டால் நான் சுவாமியின் பிள்ளை, அவருக்குச் சேவை செய்கிறேன் எனக் கூறுவார்கள். அப்படிக் கூறினால் யாரும் என் அருகில்கூட வரமாட்டார்கள். சின்மயானந்த் ஆசிரமத்தில் இல்லையென்றாலும் என்னைக் கண்காணிப்பது தொடரும்.

ஒரு வழியாக, எனக்கு நேர்ந்தவற்றை விடுதியில் இருப்பவர்களிடம் கூறினேன், ஆதாரம் உள்ளதா என அவர்கள் கேட்டனர். பின்னர்தான் எனக்கு யோசனை வந்தது. அவரை சிக்கவைக்க ஆதாரமே சிறந்த வழி எனக் கருதி ஆன்லைனில் அதற்கான வழிகளைத் தேடினேன். அப்போது பட்டன் கேமரா, மூக்குக்கண்ணாடியில் கேமரா, பேனாவில் கேமரா போன்ற நிறைய விஷயங்களைப் பார்த்தேன். அவர் அறைக்கு எதையும் எடுத்துச் செல்ல முடியாது, அதனால் மூக்குக்கண்ணாடியில் இருக்கும் கேமராவை எடுத்துச் சென்று அவர் நடவடிக்கை மற்றும் பேசிய அனைத்தையும் வீடியோவாக எடுத்துக்கொண்டு விடுதியிலிருந்து தப்பி ஓடிவிட்டேன்.

Chinmayanand
Chinmayanand

அதன் பிறகுதான் ஃபேஸ்புக்கில் வீடியோ வெளியிட்டேன். இங்கு இருந்தால் என்னையும் என் குடும்பத்தினரையும் சின்மயானந்த்தின் ஆட்கள் கொன்று விடுவார்கள் எனத் தெரிந்துதான் ராஜஸ்தானுக்கு தப்பிச் சென்றேன். இந்த வழக்கில் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. காவலர்கள் இந்த வழக்கைத் திசை திருப்ப முயற்சி செய்கிறார்கள். சின்மயானந்த்துக்கு எதிராகப் பல ஆதாரங்களை நான் காவலர்களிடம் அளித்துள்ளேன். ஆனால், இதுவரை அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கைத் தொடரவில்லை. நான் மீண்டும் மீண்டும் ஒன்றை மட்டுமே கூறுகிறேன். அவரால் பாதிக்கப்பட்டது நான் மட்டும் கிடையாது, என்னைப்போல் பல பெண்கள் அவரால் துன்புறுத்தப்பட்டுள்ளனர்.

சின்மயானந்த்துக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளதால் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது” எனக் கூறியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

News Credits : The Print