Published:Updated:

`தொப்புள்கொடியைகூட அறுக்கல..!' - பச்சிளம் குழந்தையால் அதிகாலையில் பதறிய தொழிலாளர்கள்

புதைக்கப்பட்ட ஆண் குழந்தை
புதைக்கப்பட்ட ஆண் குழந்தை

சிறிய குழியைத் தோண்டி குழந்தையைப் புதைத்துள்ளனர். இறந்து பிறந்ததா அல்லது குழந்தை பிறந்தை மறைப்பதற்காக யாரேனும் கொன்று புதைத்தனரா என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள கெட்டிகம்பை, குண்டுபெட்டு கிராமம் பகுதியைச் சேர்ந்த பெண்கள் சிலர் வழக்கம்போல் தேயிலைப் பறிக்க இன்று காலையும் சென்றுகொண்டிருந்தனர்.

ஊர் மக்கள்
ஊர் மக்கள்

அப்போது ஒரு தேயிலைத் தோட்டத்தில் தேயிலைச் செடியின் அருகில் கை கால்கள் வெளியில் தெரியும்படி பாதிக்கப்பட்ட குழந்தையின் சடலம் ஒன்று தென்பட்டது பதறிப்போன தோட்டத் தொழிலாள பெண்கள் அருகிலிருந்தவர்களை வந்து பார்க்கும்படி சத்தமிட்டனர்.

புதைத்து விலங்குகளால் தோண்டப்பட்ட நிலையில் கிடந்த குழந்தையின் சடலத்தைப் பார்த்து மற்றவர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். போலீஸார் வந்து மண்ணில் புதைக்கப்பட்ட, இறந்த நிலையில் காணப்பட்ட குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

புதைக்கப்பட்ட குழந்தை
புதைக்கப்பட்ட குழந்தை

புதைக்கப்பட்ட நிலையில் குழந்தையைப் பார்த்த ஊர்மக்கள் பேசுகையில், "இந்தக் குழந்தை பிறந்து சில மணி நேரமே இருக்கும். தொப்புள் கொடிகூட அறுக்கப்படாத நிலையில் இருந்தது. கை, கால்கள் வெளியில் தெரியும்படி இருந்தது. பார்த்த அனைவரும் பதறிப்போனோம்" என்றனர்.

இது குறித்து போலீஸார், "இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது பச்சிளம் ஆண் குழந்தை. இதுதொடர்பாக நடுஹட்டி கிராம நிர்வாக அலுவலர் மீனாட்சிசுந்தரம் அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். சிறிய குழியைத் தோண்டி குழந்தையைப் புதைத்துள்ளனர். இறந்து பிறந்ததா அல்லது குழந்தை பிறந்தை மறைப்பதற்காக யாரேனும் கொன்று புதைத்தனரா என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றனர்.

ஊர் மக்கள்
ஊர் மக்கள்

கடந்த மூன்று மாதத்தில் மஞ்சனக்கொரை மற்றும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா ஆகிய பகுதிகளில் வீசி செல்லப்பட்ட இரண்டு ஆண் குழந்தைகளை மீட்டு பராமரித்து வருகின்றனர். இந்த சம்பவங்கள் தொடர்வதால், நீலகிரி மாவட்ட ஆட்சியர் தொட்டில் குழந்தை பாதுகாப்புக்காக ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா சாலை அருகில் தொட்டிலையும் அமைத்துள்ளார். இருப்பினும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வது வேதனை அளிப்பதாக உள்ளூர் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு