Published:Updated:

`தொப்புள்கொடி ஈரம்கூட காயல..!’ - பிறந்த குழந்தையை ஊட்டி குளிரில் வனத்தில் வீசிய கொடூரம்

ரா.சதீஸ்குமார்
கே.அருண்

தொப்புள்கொடிகூட காயாத பிறந்து ஒருநாளே ஆன ஆண் குழந்தை ஒன்றை வாட்டும் குளிரில் ஊட்டி அருகே காட்டில் வீசிச் சென்ற கொடூர சம்பவம் மக்களை அதிர்ச்சியில் உறையச் செய்துள்ளது.

New born baby
New born baby

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகேயுள்ள மஞ்சனக்கொரை பகுதியைச் சேர்ந்தவர்கள் சகாயமேரி, கீர்த்தி ஆகியோர். இவர்கள் இருவரும் நேற்று மாலை அருகில் உள்ள ரேஷன் கடைக்குப் பொருள்களை வாங்குவதற்காக நடந்துசென்று கொண்டிருந்தனர். அப்போது, அருகில் இருந்த வனப்பகுதியில் திடீரென குழந்தை அழும் சத்தம் கேட்டு, அதே இடத்தில் நின்றனர். இருவரும் நின்று கூர்ந்து கேட்டபோது மீண்டும் அதே பகுதியில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது. அந்த இடத்தை நோக்கி இருவரும் சென்றனர். வனத்தில் இருந்த ஒரு புதருக்குள் சத்தம் வருவதை உறுதி செய்து புதரை விலக்கிப் பார்த்தனர். அப்போது பிறந்து ஒருநாளே ஆன தொப்புள்கொடிகூட காயாத நிலையில் ஆண் குழந்தை ஒன்று துணியில் சுருட்டப்பட்ட நிலையில் கிடந்தது.

New born baby
New born baby

வாட்டும் குளிராலும் பசியாலும் கதறி அழும் பச்சிளம் குழந்தையைப் பதறிப்போய் தூக்கி அணைத்தனர். இதையடுத்து, ஊட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குக் குழந்தையோடு சென்று நடந்ததைத் தெரிவித்தனர். காவல்துறையினர் குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து, இருவரும் உடனடியாக ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு குழந்தையைக் கொண்டு சென்றனர். அங்கு பச்சிளம் குழந்தைகள் பராமரிப்புப் பிரிவில் உள்ள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து அந்தக் குழந்தையை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஊட்டி லவ்டேல் போலீஸார் கூறுகையில், " ஊட்டி மஞ்சனக்கொரை பகுதி வனத்தில் பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டதாகத் தகவல் வந்தது. சம்பவ இடத்தை ஆய்வு செய்தோம். இது குறித்து விசாரித்துவருகிறோம்" என்றனர்.

ஊட்டி அரசு மருத்துவமனை மருத்துவர் கூறுகையில், "பசி மற்றும் குளிரால் நீண்டநேரம் குழந்தை அழுதுள்ளது. குழந்தை பிறந்து ஒருநாள்கூட ஆகாத நிலையில், குழந்தையின் தொப்புள் கொடிகூட முழுமையாக அகற்றப்படாமல் இருந்துள்ளது. சிகிச்சை நிறைவடைந்தவுடன் குழந்தைகள் நல அலுவலர்களிடம் ஒப்படைக்கப்படும்" என்றார்.

New born baby
New born baby

மஞ்சனக்கொரை பகுதியைச் சேர்ந்தவர்களோ, " குழந்தை இல்லாமல் பலரும் தவம் இருக்கின்றனர். ஆனால், கொஞ்சம்கூட இரக்கம் இல்லாமல் பிறந்த குழந்தையை வன விலங்குகள் உலவும் காட்டில் வீசிச் சென்ற கொடூர மனம் படைத்தவர்கள் யார் என்றே தெரியவில்லை. இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கின்றனர் கொதிப்புடன்.