மகாராஷ்டிரா மாநிலம், சாங்கிலி மாவட்டத்தில் மைசல் என்ற கிராமத்தில் கடந்த 20-ம் தேதி அண்ணன், தம்பி குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் வீட்டில் இறந்து கிடந்தனர். அவர்கள் தற்கொலை செய்துகொண்டதாக கருதப்பட்டது. ஒன்பது பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கவேண்டும் என்று மாவட்ட போலீஸ் அதிகாரி தீக்ஷித் தெரிவித்திருந்தார். வட்டிக்குப் பணம் கொடுத்தவர்கள் சித்ரவதை செய்ததால் அவர்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்டதாக கருதப்பட்டது. இது தொடர்பாக அவர்களுக்கு வட்டிக்குப் பணம் கொடுத்திருந்த 25 பேர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதோடு தற்கொலை செய்தவர்களின் வீடுகளிலிருந்து கடிதம் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் வட்டிக்குப் பணம் கொடுத்த சிலர் தொடர்ந்து சித்ரவதை செய்து வருவதாக குறிப்பிட்டிருந்தனர்.
இந்த நிலையில், வழக்கில் புதிய திருப்பமாக 9 பேரும் உணவில் விஷம் வைத்து கொலைசெய்யப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. இது தொடர்பாக போலீஸ் அதிகாரி தீட்ஷித் அளித்த பேட்டியில், ``9 பேர் தற்கொலை வழக்கு விசாரணையில் முக்கிய தகவல் கிடைத்திருக்கிறது. 9 பேரின் உணவில் ரசாயான பொருள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதனால் இது தற்கொலை கிடையாது, கொலை என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கொலை தொடர்பாக இரண்டு பேர் சோலாபூரில் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்" என்று தெரிவித்தார்.

மொகமத் பகவான், சூரஜ் ஆகிய இரண்டு பேரும் கொலைசெய்யப்பட்ட இரண்டு சகோதரர்களிடமும் புதையல் இருக்கும் இடத்தை காட்டுவதாகக் கூறி ஒரு கோடி ரூபாய் வரை பணம் வாங்கியிருக்கின்றனர். சகோதரர்கள் இரண்டு பேரும் கடன் வாங்கி புதையல் ஆசையில் ஒரு கோடிக்கும் அதிகமாக கொடுத்திருக்கின்றனர். ஆனால், புதையல் பற்றிய தகவல் எதுவும் இல்லாததால் கொடுத்தப் பணத்தை சகோதரர்கள் இரண்டு பேரும் திரும்பக் கேட்டிருக்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதனால் பில்லி-சூனியம் செய்யக்கூடிய மொகமத், சூரஜ் ஆகியோர் இரண்டு சகோதரர்களையும் திட்டமிட்டு குடும்பத்தோடு கொலைசெய்திருக்கின்றனர். 19-ம் தேதி இரவு இருவரும் இரு சகோதரர்களின் வீட்டு சாப்பாட்டில் விஷத்தை கலந்துவிட்டு சென்றிருக்கின்றனர்.