Published:Updated:

ஃபேக் அக்கவுன்ட்டை நம்பி குழந்தையைக் கைவிட்ட தாய், பறிபோன 3 உயிர்கள்; அதிர்ச்சியில் கேரளா!

ரேஷ்மா
ரேஷ்மா

குழந்தையைப் பெற்றெடுத்து, யாருக்கும் தெரியாமல் உலர்ந்த இலைக் குவியலில் வீசியதாகவும், பின்னர் வலி நிவாரணி மாத்திரை சப்பிட்டுவிட்டு கணவனின் அருகில் சென்று தூங்கியதாகவும் விசாரணையில் ரேஷ்மா தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் கொல்லம் கல்லுவாதக்கல் பகுதியில் உலர்ந்த இலைகளுக்கிடையே பிறந்து ஒரு நாளே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று கடந்த ஜனவரி மாதம் 5-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் குழந்தையின் சத்தத்தைக் கேட்டு அதை மீட்டனர். பின்னர் அதுபற்றி காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். குழந்தையை பாரிப்பள்ளி மருத்துவக் கல்லூரிக்கும், பின்னர் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரிக்கும் கொண்டு சென்றனர். ஆனால், குழந்தையின் மூச்சுக்குழாயில் சருகுத் தூசிகள் சிக்கியதால் அதை காப்பாற்ற முடியவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.

அது யாருடைய குழந்தை, அங்கு வீசிச் சென்றது யார் என்று போலீஸார் விசாரணை நடத்தினர். மோப்பநாயைக் கொண்டு வந்தும் எந்த பலனும் இல்லை. இதையடுத்து அந்த பகுதியைச் சேர்ந்த பெண்களின் டி.என்.ஏ-வையும், குழந்தையின் டி.என்.ஏ-வையும் பரிசோதனை செய்தனர். சில மாதங்கள் விசாரணை நடத்தியதில், அது கல்லுவாதக்கல் பகுதியைச் சேர்ந்த விஷ்ணுவின் மனைவி ரேஷ்மாவின் (22) குழந்தை எனக் கடந்த மாதம்தான் தெரியவந்தது. இதையடுத்து கடந்த மாதம் 22-ம் தேதி ரேஷ்மாவை போலீஸார் கைது செய்தனர்.

ரேஷ்மாவிடம் நடத்திய விசாரணையில், ``ஃபேஸ்புக்கில் அறிமுகமான அனந்து என்பவரை காதலிக்கிறேன். அவரை இதுவரை நேரில் பார்த்ததில்லை. ஆனால் அவருடன் வாழ மிகவும் விரும்பினேன். அதற்குக் குழந்தை தடையாக இருக்கும் என்பதால் கர்ப்பம் ஆனது குறித்து யாரிடமும் கூறவில்லை. எனக்கு மெலிந்த உடல் என்பதால் கர்ப்பத்தை மறைக்க பெரிய ஆடைகளை அணிந்தேன். வயிற்றில் இறுக்கமாக பெல்ட் அணிந்தேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

குழந்தையைக் கொன்றதாக கைது செய்யப்பட்ட ரேஷ்மா
குழந்தையைக் கொன்றதாக கைது செய்யப்பட்ட ரேஷ்மா
கேரளா: வரதட்சணையாகக் கொடுத்த காரின் மதிப்பு குறைவு; இறந்துகிடந்த மனைவி; 
நடந்தது என்ன?

மேலும், ``கர்ப்பகாலத்தில் ஒருமுறை கூட மருத்துவமனைக்குச் செல்லவில்லை. கணவருக்கு சந்தேகம் வராதபடி அவர் தன்னை நெருங்காமல் பார்த்துக்கொண்டேன். கடந்த ஜனவரி மாதம் 4-ம் தேதி இரவு வீட்டுக் கழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்து யாருக்கும் தெரியாமல் உலர்ந்த இலைக் குவியலில் வீசினேன். பின்னர் வலி நிவாரணி மாத்திரை சப்பிட்டுவிட்டு கணவரின் அருகில் சென்று தூங்தினேன்" என்று விசாரணையில் ரேஷ்மா தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, அனந்து என்ற ஃபேஸ்புக் ஐ.டி யாருடையது என போலீஸார் விசாரணை நடத்தினர். ரேஷ்மாவின் சாட்டிங் குறித்த தகவல்களை ஃபேஸ்புக் நிறுவனத்திடம் போலீஸார் கேட்டிருந்தனர். மேலும் ரேஷ்மாவின் உறவினரான ஆர்யாவிடம் விசாரணைக்காக காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என பாரிப்பள்ளி போலீஸார் கூறியிருந்தனர். இதைத் தொடர்ந்து ஆர்யாவும், அவரின் உறவினர் பெண்ணான கிரீஷ்மாவும் கடந்த 24-ம் தேதி திடீரென காணாமல் போய்விட்டனர். அவர்கள் இத்திக்கரை ஆற்றோரம் நடந்து செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாயின. இதைத் தொடர்ந்து இத்திக்கரை ஆற்றில் இருந்து கடந்த மாதம் 25-ம் தேதி இருவரது உடல்களும் மீட்கப்பட்டன. அவர்கள் விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டது.

போலி ஃபேஸ்புக் ஐ.டி-யில் சாட் செய்த ஆர்யா
போலி ஃபேஸ்புக் ஐ.டி-யில் சாட் செய்த ஆர்யா

போலீஸார் உறவினர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் இருவரும் அனந்து என்ற போலி ஃபேஸ்புக் கணக்கை தொடங்கி ரேஷ்மாவை காதலிப்பது போன்று சாட் செய்த தகவல் தெரியவந்தது. ஆர்யாவும், கிரீஷ்மாவும் ரேஷ்மாவை ஏமாற்றுவதற்காகவும், மெசேஜுக்கு என்ன பதிலளிக்கிறார் எனப் பார்ப்பதற்காகவும் விளையாட்டாகத்தான் போலி ஃபேஸ்புக் அக்கவுன்ட்டை தொடங்கி சாட் செய்திருக்கிறார்கள். ஆனால் அதை சீரியஸாக எடுத்த ரேஷ்மா, தன் குழந்தையைக் கொன்றது வரை செல்ல, அந்த ஃபேஸ்புக் அக்கவுன்ட் குறித்து போலீஸார் விசாரணை நடத்தியதால் பயந்துபோன இருவரும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டிருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

தற்கொலைக்கு முன் ஆர்யா எழுதிய ஒரு கடிதம் போலீஸாருக்குக் கிடைத்தது. அந்தக் கடிதத்தில், ``தெரிந்தே யாருக்கும் சதி செய்ய வேண்டும் என நினைக்கவில்லை. அவள் இவ்வளவு வஞ்சகியாக இருப்பாள் எனத் தெரியாது. அவளது வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என நினைத்தேன். என் மகனை நன்றாக கவனித்துக்கொள்ளுங்கள். ஆனால், ஒரு பச்சிளம் குழந்தையைக் கொலை செய்த வழக்கில் போலீஸ் என்னை கைது செய்வதை சகிக்க முடியவில்லை. எங்களை எல்லோரும் மன்னியுங்கள்" என எழுதப்பட்டிருந்தது.

தற்கொலை செய்துகொண்ட கிரீஷ்மா
தற்கொலை செய்துகொண்ட கிரீஷ்மா
`திருமணத்தை வியாபார ஒப்பந்தமாகத் தரம் தாழ்த்தாதீர்கள்!' - இளம்பெண்ணின் மரணம் குறித்து பினராயி விஜயன்

ஆர்யாவும், கிரீஷ்மாவும் சேர்ந்து டிக் டாக்கில் வீடியோ எடுப்பது வழக்கம். அதன் பிறகு அவர்கள் அனந்து என்ற போலி ஃபேஸ்புக் ஐ.டி-யில் வங்கியில் அதிகாரியாக இருப்பதாகக் கூறி ஒன்றரை ஆண்டுகள் சாட் செய்துள்ளனர். ஆனால் ஒருமுறை கூட போனில் பேசியதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. விளையாட்டாக சாட் செய்யத் தொடங்கியது கடைசியில் வினையாகி மூன்று உயிர்களை பறித்துவிட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பாதித்த ரேஷ்மா, இப்போது அட்டகுளங்கர பெண்கள் சிறையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார். அவரை கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தினால் கூடுதல் விபரம் தெரியவரும் என்கின்றனர் போலீஸார்.

அடுத்த கட்டுரைக்கு