Published:Updated:

கைவிடப்பட்ட குழந்தைகளின் தொட்டிலாக மாறும் ஊட்டி முட்புதர்கள்! #TamilnaduCrimeDiary

#TamilnaduCrimeDiary
#TamilnaduCrimeDiary

சுற்றுலாப் பயணிகளின் போர்வையில் சிலர் ஊட்டியில் நுழைந்து, வன விலங்குகள் உலவும் காடுகளில் இரவோடு இரவாகப் பச்சிளம் குழந்தைகளை வீசிச்செல்லும் துயரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மலைகளின் அரசி, காட்டுயிர்கள் கடைசிப்புகலிடம், பழங்குடிகளின் சொர்க்கம், சர்வதேச சுற்றுலா நகரம் எனப் பல்வேறு சிறப்புகளைப் பெற்ற நீலகிரியில் மற்ற இடங்களை ஒப்பிடுகையில் குற்றச் சம்பவங்கள் மிக குறைந்த அளவே பதிவாகி அமைதியான வாழ்க்கைச் சூழல் நிலவுகிறது. அதேசமயம், இந்த மலைகளின் அரசியின் மடியில், பிறந்து சில நாள்களே ஆன பல பச்சிளம் தளிர்களை சிலர் விட்டுச்செல்வது பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது.

ஊட்டி
ஊட்டி

கடந்த மாத இறுதியில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள கெட்டிகம்பை, குண்டுபெட்டு கிராமம் பகுதியைச் சேர்ந்த பெண்கள் சிலர் வழக்கம்போல் தேயிலை பறிக்க காலையில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது ஒரு தேயிலைத் தோட்டத்தில் தேயிலைச் செடியின் அருகில் கை கால்கள் வெளியில் தெரியும்படி மண்ணில் பாதி புதுக்கப்பட்ட நிலையில் குழந்தையின் சடலம் ஒன்று தென்பட்டது. பதறிப்போன தோட்டப் பெண் தொழிலாளர்கள் அருகிலிருந்தவர்களை வந்து பார்க்கும்படி சத்தமிட்டனர்.

`4 மாதங்களாகக் காணவில்லை!'  -சிறுமிக்காக பொங்கலைப் புறக்கணித்த கோவை கிராமம்

மண்ணில் புதைத்து விலங்குகளால் தோண்டப்பட்ட நிலையில் கிடந்த குழந்தையின் சடலத்தைப் பார்த்து மற்றவர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். போலீஸார் வந்து மண்ணில் புதைக்கப்பட்டு இறந்துபோன குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில் இதே கிராமத்தைச் சேர்ந்த கணவனை இழந்து வாழ்ந்து வரும் பெண் ஒருவர் மற்றொரு ஆணுடன் ஏற்பட்ட பழக்கத்தால் பிறந்த குழந்தையை ஊருக்குத் தெரியாமல் கொன்று புதைத்ததை உறுதி செய்து, காவல்துறையினர் கைது செய்தனர்.

நீலகிரி பெண் தொழிலாளர்கள்
நீலகிரி பெண் தொழிலாளர்கள்

இதே போல் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஊட்டி மஞ்சனக்கொரை கிராமம் அருகில் காட்டுமாடு, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் உலவும் வனத்தில், தொப்புள் கொடிகூட காயாத பச்சிளம் ஆண் குழந்தையை யாரோ வீசிச் சென்றுள்ளனர். இரவு நேரத்தில் குழந்தையின் அழுகுரலைக் கேட்ட இரண்டு பெண்கள், பத்திரமாக அதை மீட்டு, மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.

அண்மையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா அருகில் உள்ள வனத்தில், பிறந்து ஒருநாளே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை அதிகாலை வாட்டும் குளிரில் அடையாளம் தெரியாதவர்கள் வீசிச் சென்றுள்ளனர். இந்தக் குழந்தையையும் மீட்டு, மாவட்ட நிர்வாகம் பராமரித்து தத்துக் கொடுக்கும் மையத்திற்குப் பொதுமக்கள் அனுப்பி வைத்தனர். நீலகிரியில், பச்சிளம் குழந்தைகளைச் சாலையோரங்களிலும் வனவிலங்குகள் நடமாடும் பகுதிகளிலும் வீசிச் செல்லும் துயர நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுவது மாவட்ட மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிள்ளது.

ஊட்டி தாவரவியல் பூங்கா
ஊட்டி தாவரவியல் பூங்கா

இதைத் தடுக்கும் வகையில், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் சார்பில், ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா சாலையில் தொட்டில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தொட்டில் அமைக்கப்பட்டுள்ள பகுதிளில் கண்காணிப்பு கேமராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை.

`குழந்தையை வளர்க்க இயலாத நிலையில் உள்ள பெற்றோர்கள், தயவுசெய்து குழந்தைகளைச் சாலையோரங்களில், குப்பைத் தொட்டிகளில், வன விலங்குகள் நடமாடும் பகுதிகள் மற்றும் முட்புதர்களில் வீசிச் செல்லாமல், இந்தத் தொட்டிலில் போட்டு விட்டுச் செல்லலாம்' என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அரசு அதிகாரிகள், ``இந்தத் தொட்டிலில் அலுவலக முகவரி மற்றும் தொடர்புகொள்ளவேண்டிய தொலைபேசி எண்களும் அச்சிடப்பட்டுள்ளன. எனவே, குழந்தையை விட்டுச் சென்றதும், தொட்டிலில் காணப்படும் தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களைப் பற்றிய ரகசியம் காக்கப்படும். குழந்தை உடனடியாக மீட்கப்பட்டு, பராமரிப்பும் பாதுகாப்பும் வழங்கப்படும்" என்று தெரிவித்தனர் .

`தாயைக் கொல்ல கூலிப்படை; பணத்துக்காக அடுத்த கொலை!' - 3 ஆண்டுகளுக்குப் பின் சிக்கிய கேரள ஆசாமி

இது குறித்து நீலகிரி மாவட்ட சமூக ஆர்வலர்கள் சிலரிடம் பேசினோம். ``குழந்தை இல்லாமல் பலரும் ஏங்கி வரும் நிலையில் சிலர் குழந்தைகளை இப்படி வீசிச் செல்கின்றனர். சுற்றுலாப் பயணி என்கிற போர்வையில் ஊட்டிக்குள் நுழைந்து, இரவோடு இரவாக குழந்தைகளை வீசிச் செல்வது அதிகரித்துள்ளது. குழந்தையை வளர்க்க முடியாதவர்கள், இருதயமற்று அக்குழந்தைகளை வீசிச் செல்வதற்குப் பதிலாக அரசிடம் வழங்கலாம்" என்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு