Published:Updated:

`பிறந்தது ஆண்; எங்களிடம் காட்டியது பெண் குழந்தை!' - பெற்றோரை அதிரவைத்த ஹரியானா மருத்துவமனை

கலிலுல்லா.ச

ஒரு மணி நேரத்துக்குப் பின், நர்ஸ் ஒருவர் பெண் குழந்தை ஒன்றைக் கொண்டுவந்து, `இதுதான் உங்கள் குழந்தை’ என்று கொடுத்துள்ளார்.

baby
baby

மருத்துவமனைகளில் குழந்தைகள் கடத்தல் மற்றும் பிறந்த பச்சிளம் குழந்தைகளை அடையாளம் தெரியாமல் மாற்றிவிடுவது எனப் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. அப்படியொரு சம்பவம் ஹரியானாவில் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் தீக்லி கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி மாதம் 7-ம் தேதி குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

`பிறந்தது ஆண்; எங்களிடம் காட்டியது பெண் குழந்தை!' - பெற்றோரை அதிரவைத்த ஹரியானா மருத்துவமனை

குழந்தை பிறந்த ஒரு மணி நேரம் வரை, தாயிடம் குழந்தையைக் காட்டவேயில்லை. ஆணா, பெண்ணா என்பது குறித்து கேட்டபோதும் அவர்கள் சரியான பதிலளிக்கவில்லை. `குழந்தையைப் பார்க்க வேண்டும்’ என்று கூறிய தந்தையை மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை. ஒரு மணிநேரத்துக்குப் பின், நர்ஸ் ஒருவர் பெண் குழந்தை ஒன்றைக் கொண்டுவந்து, `இதுதான் உங்கள் குழந்தை’ என்று கொடுத்துள்ளார். அதைப் பார்த்த தாய்க்கு, சந்தேகம் ஏற்பட்டுள்ளது. `அந்தக் குழந்தை பார்ப்பதற்கு 7 நாள் கைக்குழந்தையாக இருந்தது’ என்கிறார் அந்தத் தாய். ``பிப்ரவரி 7-ம் தேதி, எனக்கு பிரசவம் நடைபெற்றது. எனக்குப் பிறந்த குழந்தை என் கணவர் பார்ப்பதற்குக்கூட அவர்கள் அனுமதிக்கவில்லை.

பின்னர், பெண் குழந்தை ஒன்றை எடுத்து வந்தனர். ஆனால், அந்தக் குழந்தையைப் பார்க்கும்போது எனக்கு சந்தேகம் இருந்தது. நான் மூத்த மருத்துவர்களிடம் இது தொடர்பாகப் புகார் அளித்தேன். ஆனால், அவர்கள் நான் சொன்னதைக் காதுகொடுத்துக்கூட கேட்கவில்லை. நாங்கள் ஏழைகள், எங்களுக்கு வேறு வழியில்லை. ஆகவே, அந்தக் குழந்தையை எடுத்துக்கொண்டோம். அந்தக் குழந்தை பிறந்து எப்படியும் 7 நாள் இருக்கலாம்” என்கிறார் அந்தப் பெண். பெண்ணின் கணவர் கூறும்போது, ``அந்தக் குழந்தை எங்கள் இருவரில் ஒருவரின் ஜாடையைக்கூட ஒத்திருக்கவில்லை. நான் இது தொடர்பாக மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்டபோது, என் மனைவிக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.

Vikatan
Lady
Lady

பின்னர் மருத்துவமனையைச்சுற்றிப் பார்த்தபோது, அங்கு ஒரு ஆண் குழந்தை மட்டும் தனியாக இருப்பதைப் பார்த்தேன். ஆனால், அந்தக் குழந்தையைப் பெற்ற தாய் யாரும் அங்கில்லை” என்கிறார். சந்தேகம் வலுவடைந்ததையடுத்து, குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர், அதுமட்டுமல்லாமல், முதல்வர் தனிப்பிரிவிலும் மனு ஒன்றை கொடுத்திருந்தனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. `முதல்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. மருத்துவமனைக்குச் சென்று ஆவணங்களைப் பரிசீலித்தபோது, பிப்ரவரி 7-ம் தேதி அன்று ஒரேயொரு பிரசவம் மட்டும் நடந்துள்ளதாகத் தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக யாரும் இதுவரை கைது செய்யபடவில்லை” என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கிறார்கள்.