Published:Updated:

`வயதான மாப்பிள்ளை; அவசரத் திருமணம்!’ -பெற்றோரின் செயலால் விபரீத முடிவெடுத்த இளம்பெண்?

Representational Image
Representational Image

திருமணமான மூன்றாவது நாளில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பத்தை அடுத்த வடுகன்தாங்கல் அஞ்சுகம் நகரைச் சேர்ந்தவர் கண்ணப்பன் மகன் சங்கர் (45), பெட்டிக்கடை வைத்துள்ளார். சங்கருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சாந்தகுமார் என்பவரின் மகள் மகாலட்சுமிக்கும் (20) திருமணம் செய்துவைக்க பெற்றோர் கலந்துபேசியுள்ளனர். சங்கரை விட மகாலட்சுமி 25 வயது இளையவர். இப்படியிருக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும், விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில் கடந்த மாதம் 29-ம் தேதி திருமணத்தை அவசர அவசரமாக நடத்தியுள்ளனர்.

கொரோனா
கொரோனா

திருமணம் முடிந்த பிறகு கடந்த இரண்டு நாள்களாகக் கணவரின் வீட்டிலிருந்த மகாலட்சுமி திடீரென அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். மனைவி சடலமாக தொங்கியதைக் கண்டு சங்கரும் அவரின் குடும்பத்தினரும் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர், பைக்கில் சடலத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு உயிர் இருக்குமோ என்ற சந்தேகத்தில் வடுகந்தாங்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்றுள்ளனர்.

அங்கு மகாலட்சுமியைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர். இதையடுத்து, பிரேதப் பரிசோதனைக்காக உடல் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து, மகாலட்சுமியின் தங்கை விஜயலட்சுமி கொடுத்த புகாரின்பேரில், கே.வி.குப்பம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

மணக்கோலத்தில்...
மணக்கோலத்தில்...

தன்னை விட அதிக வயது மூத்தவரைத் திருமணம் செய்துகொள்ள மகாலட்சுமியைப் பெற்றோர் கட்டாயப்படுத்தினரா... அதனால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்துகொண்டரா என்பது குறித்து போலீஸாரும் வருவாய் கோட்டாட்சியரும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். திருமணமான மூன்றாவது நாளிலேயே புதுப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு