Published:Updated:

`நள்ளிரவில் எழுப்பி வரதட்சணை கேட்பார்கள்; குடும்பமே கொடுமைப்படுத்தும்' - குஜராத் இளம்பெண் கண்ணீர்

ராம் பிரசாத்

குஜராத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் தன் கணவர் குறித்து காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார்.

குஜராத் இளம்பெண்
குஜராத் இளம்பெண்

குஜராத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு நான்கு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. திருமணமான நாள் முதல் மனதளவிலும், உடல் அளவிலும் கடுமையாக தாக்குதலுக்கு உள்ளானதாக Gomtipur காவல்நிலையத்தில் புகார் கூறியுள்ளார். ஒவ்வோர் இரவு நரமாக நகர்வதாகவும் எந்த நேரத்தில் கணவரின் குடும்பத்தினர் என்னைத் தொந்தரவு செய்வார்கள் எனத் தெரியாமல் நாள்களைக் கடந்துவந்துள்ளார். ஒரு கட்டத்தில் கணவரின் வீட்டாரின் கொடுமைகளைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தன் தாய் வீட்டுக்கு வந்துள்ளார்.

காவல்நிலையம்
காவல்நிலையம்

இதையடுத்து, அவர்களின்மீது அந்தப்பெண் புகார் தெரிவித்துள்ளார். `வரதட்சணை கேட்டு என் கணவர் வீட்டில் தொடர்ந்து தொல்லை கொடுத்துவந்தனர். இதை என் கணவரும் கேட்கவில்லை. சில சமயங்களில் அவர்களால் உடல்ரீதியான தாக்குதலுக்கும் உள்ளானேன். நள்ளிரவில் நான் உறங்கிக்கொண்டிருக்கும்போது எழுப்பி வரதட்சணைக் கேட்டு கொடுமை செய்வார்கள். கொஞ்சம்கூட இரக்கத்துடன் நடந்துகொள்ள மாட்டார்கள். கணவரின் உறவுக்காரப் பெண்ணும் அவர் கணவரும்கூட என்னைத் தாக்கினர். குடும்பத்தினரின் இந்தச் செயலை என் கணவர்கூட தட்டிக் கேட்கவில்லை. அவரும் தன்னால் முடிந்தவரை எனக்குத் தொல்லைகளைக் கொடுத்தார்.

என் கணவரால் பாலியல் ரீதியிலான தொல்லைகளுக்கு உள்ளானேன். விரும்பத்தகாத வகையில் உறவுகொள்ள வற்புறுத்தப்பட்டேன். நான் மறுப்பு தெரிவித்ததால் என்னை கடுமையாகத் தாக்கினார். இதற்குமேல் அங்கிருக்க முடியாது என்ற காரணத்தால் அங்கிருந்து வெளியேறிவிட்டேன்’ என அந்தப் புகாரில் தெரிவித்துள்ளார்.

இளம்பெண்
இளம்பெண்

அந்தப் பெண்ணின் புகாரை ஏற்ற காவல்துறையினர் இதுதொடர்பாக கணவரின் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். துன்புறுத்துதல், உள்நோக்கத்துடன் காயப்படுத்துதல், கடுமையான சொற்களைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.