Published:Updated:

`பணத்துக்காக நடந்த கொலை இது' -திருமணமான 7 மாதத்தில் பட்டதாரி பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

கார்த்திக், சுனிதா
News
கார்த்திக், சுனிதா

தன் மகளை வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்திய கணவர் குடும்பத்தினர், கொலை செய்துவிட்டதாக பட்டதாரி பெண்ணின் அப்பா புகாரளித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வாய் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். விவசாயியான இவரின் இளைய மகள் சுனிதா (29). பி.எஸ்ஸி பட்டதாரி. சுனிதாவும் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக்கும் (34) காதலித்தனர். பின்னர் பெற்றோரின் சம்மதத்துடன் 8.9.2019-ல் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

கும்மிடிப்பூண்டி காவல் நிலையம்
கும்மிடிப்பூண்டி காவல் நிலையம்

இந்த நிலையில் சுனிதா, கடந்த 22.4.2020-ல் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக அவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சுனிதா வீட்டுக்கு அவரின் குடும்பத்தினர் வந்தனர். அப்போது அவரின் பின்பக்க தலையில் காயமும் ரத்தக்கசிவும், கழுத்தில் தழும்பும் இருந்தது. அதனால் சந்தேகமடைந்த சுனிதாவின் அப்பா சேகர், பாதிரிவேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதில் கூறியிருப்பதாவது, `என் மகள் சுனிதாவை தேர்வாய் கிராமம், அன்னை இந்திராகாந்தி தெருவில் குடியிருக்கும் தர்மனின் மகன் கார்த்திக்குக்குத் திருமணம் செய்து வைத்தோம். மணமகன் வீட்டாருக்குத் தேவையான சீர்வரிசையைக் கொடுத்தோம். ஆனால், திருமணமான ஒரு மாதத்தில் வரதட்சணைக் கேட்டு சுனிதாவை அவரின் கணவர் குடும்பத்தினர் துன்புறுத்திவந்தனர். பணம் கேட்டு சுனிதாவை என்னுடைய வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். அப்போது சுனிதாவையும் அவரின் குடும்பத்தினரையும் சமாதானப்படுத்தி கணவர் வீட்டுக்கு அனுப்பி வைப்போம்.

எப்.ஐ.ஆர் நகல்
எப்.ஐ.ஆர் நகல்

22.4.2020-ல் சுனிதா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக எனக்குத் தகவல் கிடைத்தது. உடனே குடும்பத்தினருடன் சுனிதா வீட்டுக்குச் சென்றோம். அங்கு அவரின் பின்தலையில் காயமும் ரத்தக் கசிவும், கழுத்தில் தழும்பும் இருந்தது. எனவே, என் மகள் சுனிதா தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை. பணத்துக்காக என் மகளை அடித்துக் கொலை செய்துவிட்டு அவரின் கணவர் குடும்பத்தினர் தற்கொலை என நாடகமாடுகின்றனர். அதனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

புகாரின் பேரில் பாதிரிவேடு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ, வழக்கு பதிந்து விசாரித்துவருகிறார். திருமணமாகி 7 மாதங்கள் ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணையும் நடந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து பாதிரி வேடு போலீஸார் கூறுகையில் ``கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சுனிதா வீட்டில் தகராறு ஏற்பட்டு வந்த சூழலில் ஊரடங்கால் அனைவரும் வீட்டில் இருந்துள்ளனர். அதனால் சம்பவத்தன்று வழக்கம் போல சுனிதாவுக்கும் அவரின் கணவர் குடும்பத்தினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

அதன்பிறகுதான் சுனிதா மரணமடைந்துள்ளார். சுனிதாவின் சடலத்தை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளோம். பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் ஆர்.டி.ஓ விசாரணைக்குப் பிறகுதான் சுனிதாவின் மரணத்துக்கான காரணம் தெரியவரும்" என்றனர்.

இந்தச் சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.