Published:Updated:

காஞ்சிபுரம்: `காதல் திருமணம்; தனிக்குடித்தனம்' - 45-வது நாளில் பெண் இன்ஜினீயருக்கு நடந்த சோகம்

காதல் திருமண தம்பதி அலெக்ஸ், கற்பகம்
காதல் திருமண தம்பதி அலெக்ஸ், கற்பகம்

படித்தபோது காதலித்து, பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து தம்பதியர் தனிக்குடித்தனம் நடத்திவந்தனர். திருமணமான 45-வது நாளில் இன்ஜினீயரிங் படித்த பெண், தூக்குப் போட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், குருவிக்கொண்டாளபட்டி அஞ்சல், தீரணிப்பட்டி காலனியைச் சேர்ந்தவர் ரவி. இவரின் மனைவி மீனாள் (47). இவர், காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது, ``நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்துவருகிறேன். எனக்கு ஒரு மகனும் கற்பகம் (22) என்ற மகளும் இருக்கிறார்கள். மகன், வெளிநாட்டில் வேலை செய்துவருகிறான். கற்பகம், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இன்ஜினீயரிங் கல்லூரியில் படித்தார். அங்கு படித்தபோது அதே கல்லூரியில் படித்த கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் என்பவரைக் காதலித்தார்.

கற்பகம்
கற்பகம்

இந்தநிலையில் அலெக்ஸ் என்னிடம் `நான் உங்கள் மகளை திருமணம் செய்துகொள்ளப் போகிறேன்’ என்று போனில் கூறினார். அதற்கு என் குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை. இந்தநிலையில் 1.11.2020-ல் என் மகள் கற்பகத்தைக் காணவில்லை. அதனால் திருப்பத்தூர் வட்டம் காவல் நிலையத்தில் புகாரளித்தோம். அதில் அலெக்ஸ் என்பவர், கற்பகத்தை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றார் என்று எங்களுக்குச் சந்தேகம் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தோம்.

போலீஸார் விசாரித்தபோது அலெக்ஸை கற்பகம் காதல் திருமணம் செய்த தகவல் தெரியவந்தது. அலெக்ஸும் நாங்களும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அதனால் என் மகளை அலெக்ஸ் விரும்பி ஏற்றுக்கொண்டாரா அல்லது வேறு எதுவும் காரணங்களுக்காகத் திருமணம் செய்துகொண்டாரா என்ற சந்தேகம் எங்களுக்கு இருந்தது. இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு என் மகள் என்னிடம் போனில் பேசினார். அப்போது அவர் சில தகவல்களைக் கூறினார். அதில் முக்கியமாக `என் பெற்றோர், உன்னை எக்காலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனால் எங்கள் கிராமத்துக்கு நாம் செல்ல முடியாது. எனவே உன் அண்ணன் வெளிநாட்டில் வேலை செய்வதால், 10 லட்சம் ரூபாயைத் தரச் சொல். வசதியான பெண் என்று என் பெற்றோர் உன்னை ஏற்றுக்கொள்வார்கள்’ என்று அலெக்ஸ் கூறியதாக கற்பகம் என்னிடம் போனில் கூறினார்.

குமரி: காதல் திருமணம்; 20 நாளில் கருத்து வேறுபாடு! - கணவன் தற்கொலையால் விபரீத முடிவெடுத்த மனைவி
கற்பகம், அலெக்ஸ்
கற்பகம், அலெக்ஸ்

14.12.2020-ல் என் மகள் என்னிடம் போனில் பேசிக்கொண்டிருந்தாள். அப்போது அவர் அலெக்ஸின் ஆசைவார்த்தையை நம்பி வந்தது பெரிய தவறென்று உணர்கிறேன். என்னை அவரிடமிருந்தும், அவரின் குடும்பத்தினரிடமிருந்தும் காப்பாற்றுங்கள் என்று கூறினாள். அவள் பேசிக்கொண்டிருந்தபோது அலெக்ஸ் போனைப் பறித்துவிட்டார். அன்றைய தினம் பிற்பகலில் அலெக்ஸ் வேலை செய்துவரும் முதலாளி என்னிடம், `உங்கள் மகள் கற்பகம் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டாள்’ என்று கூறி இணைப்பைத் துண்டித்துவிட்டார்.

உடனே நானும் என் குடும்பத்தினரும் ஊரிலிருந்து சென்னைக்கு வந்தோம். குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் கற்பகத்தின் சடலத்தைப் பார்த்து காவல் நிலையத்தில் புகாரளிக்கிறேன். என் மகள் என்னிடம் பேசிய தகவலை வைத்துப் பார்க்கும்போது வன்கொடுமை மற்றும் வரதட்சணைக் கொடுமை நடந்ததாகத் தெரிகிறது. எனவே, வரதட்சணை மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக மணிமங்கலம் போலீஸார் அலெக்ஸ் மற்றும் அவரின் குடும்பத்தினரிடம் விசாரித்துவருகின்றனர். திருமணமாகி 45 நாள்களுக்குள் கற்பகம் இறந்ததால் ஆர்.டி.ஓ விசாரணையும் நடத்தப்பட்டுவருகிறது.

அலெக்ஸ்
அலெக்ஸ்

இது குறித்து மணிமங்கலம் போலீஸார் கூறுகையில், ``பெற்றோரின் எதிர்ப்பை மீறி கற்பகம், அலெக்ஸை காதலித்து 45 நாள்களுக்கு முன் திருமணம் செய்திருக்கிறார். அவர்கள் இருவரும் காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தனர். இன்ஜினீயரிங் படித்த அலெக்ஸ், டிரைவராக வேலைபார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று, காலையில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. வேலைக்குச் சென்றுவிட்டு மதியம் சாப்பிட அலெக்ஸ் வீடு திரும்பினார். அப்போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. நீண்டநேரமாகத் தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. பிறகு கதவை உடைத்து உள்ளே சென்றபோதுதான் கற்பகம், தூக்கில் தொங்கியதைப் பார்த்து அலெக்ஸ் அதிர்ச்சியடைந்திருக்கிறார்.

பிரேத பரிசோதனைக்குப் பிறகு கற்பகத்தின் சடலத்தை, அவரின் பெற்றோரிடம் ஒப்படைத்திருக்கிறோம். வரதட்சணைக் கொடுமை என கற்பகத்தின் பெற்றோர் புகாரளித்திருப்பதால், அது தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது. ஆர்.டி.ஓ விசாரணையின் அறிக்கைக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

திருமணமான 45-வது நாளில் இன்ஜினீயரிங் படித்த பெண், தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு