Published:Updated:

சென்னை: `கணவருடன் சந்தோஷமாக வாழ முடியவில்லை!’ - திருமணமான இரண்டே மாதங்களில் இளம்பெண் தற்கொலை

தூக்கு
தூக்கு

சென்னை ஆவடியில் திருமணமான இரண்டே மாதங்களில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். விசாரணையில் கணவருடன் சந்தோஷமாக வாழ முடியாததால் இந்த விபரீத முடிவை அவர் எடுத்தது தெரியவந்தது.

வேலூர் மாவட்டம், அல்லாபுரம், சாஸ்திரிநகரைச் சேர்ந்தவர் செண்பகவல்லி . இவரின் கணவர் சரவணன். இவர் கடந்த 2019-ல் இறந்துவிட்டார். இந்தத் தம்பதியரின் ஒரே மகள் நாகேஸ்வரி என்கிற நிவேதா (21). பத்தாம் வகுப்பு வரை படித்த நாகேஸ்வரி, வேலூர் பகுதியிலுள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்துவந்தார். நாகேஸ்வரிக்கு திருமணம் செய்ய அவரின் தாய் செண்பகவல்லி முடிவு செய்தார். அதனால் சென்னை திருநின்றவூரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்க்கும் மணிகண்டனுக்கு நாகேஸ்வரியைத் திருமணம் செய்துவைக்க ஏற்பாடு நடந்தது.

தற்கொலை செய்துகொண்ட நாகேஸ்வரி
தற்கொலை செய்துகொண்ட நாகேஸ்வரி

இரு வீட்டினரின் சம்மதத்துடன் கடந்த 17.5.2021-ம் தேதி ஆரணி அருகேயுள்ள வலையம்மன் கோயிலில் மணிகண்டனுக்கும் நாகேஸ்வரிக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு ஒரு மாதமாக நாகேஸ்வரி,வேலூரிலுள்ள அம்மா வீட்டில் இருந்தார். பின்னர் 16.7.2021-ம் தேதி ஆவடி, நந்தவன்மேடு காந்தி தெருவிலுள்ள ஒரு வீட்டுக்கு புதுமணத் தம்பதியர் குடிவந்தனர். 18.7.2021-ம் தேதி மணிகண்டன் வேலைக்குச் சென்றுவிட்டார். வீட்டில் தனியாக இருந்த நாகேஸ்வரி, தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

நாகேஸ்வரியின் வீட்டுக்கு வீட்டின் உரிமையாளர் வந்தபோது அவர் தூக்கில் தொங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் மணிகண்டனுக்கு அவர் போனில் தகவல் தெரிவித்தார். பின்னர் இது குறித்து ஆவடி காவல் நிலையத்துக்கும் வீட்டின் உரிமையாளர் தகவல் தெரிவித்தார். அதனால் சம்பவ இடத்துக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான போலீஸார் வந்தனர். நாகேஸ்வரியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதற்கிடையில் நாகேஸ்வரி தற்கொலை செய்துகொண்ட தகவல், வேலூரிலிருக்கும் அவரின் அம்மா செண்பகவல்லிக்கு போனில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரும் ஆவடிக்கு வந்தார்.

வேலூர்: `அன்புள்ள அப்பாவுக்கு செல்ல மகள் எழுதுவது!’-விபரீத முடிவெடுத்த புதுப்பெண்
தூக்கு
தூக்கு

மகளின் சடலத்தைப் பார்த்து கதறி அழுத செண்பகவல்லி, ஆவடி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதில், ``என்னுடைய மகள் நாகேஸ்வரிக்கு மருமகன் மணிகண்டனுடன் பெரிதாக வாழ விருப்பம் இல்லை. மேலும் தன்னால் கணவருடன் சந்தோஷமாக வாழ முடியவில்லை என போனில் நாகேஸ்வரி என்னிடம் கூறுவாள். எனவே, நாகேஸ்வரி இறப்பின் மீது தக்க நடவடிக்கை எடுத்து நல்லடக்கம் செய்ய சடலத்தை ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

` கண்முன் மனைவி தற்கொலை; தடுக்க முடியாத தலைக்கேறிய போதையில் கணவன்! - கரூரில் அதிர்ச்சிகர சம்பவம்'

புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் கோபிநாத் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார். மணிகண்டனிடம் விசாரித்தபோது, திருமணம் முடிந்தவுடன் நாகேஸ்வரியின் அம்மாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அவரை கவனித்துக்கொள்ள வேலூரில் தங்கியிருந்தார். ஆவடியில் வீடு எடுத்து தங்கிய அடுத்த நாளே அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று போலீஸாரிடம் கூறியிருக்கிறார். நாகேஸ்வரியின் அம்மா அளித்த புகாரையடுத்து மணிகண்டனிடம் போலீஸார் மேற்கொண்டு விசாரணை நடத்தவில்லை. இருப்பினும், திருமணமாகி ஒரு சில மாதங்களிலேயே நாகேஸ்வரி தற்கொலை செய்துகொண்டதால் திருவள்ளூர் ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு