Published:Updated:

`நிலக்கடலையை ஏன் மிதித்தாய்?' - 5 வயதுச் சிறுமியை அடித்துக்கொன்ற நெய்வேலி பெண்

நெய்வேலி அருகே 5 வயதுச் சிறுமியை அடித்துக் கொலை செய்து விவசாய நிலத்தில் புதைக்கப்பட்ட வழக்கில் இரண்டு பெண்கள் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

குழந்தை புதைக்கப்பட்ட இடம்.
குழந்தை புதைக்கப்பட்ட இடம்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள மேலக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம் மனைவி கமலம் (55). இவர் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இவரிடம் உத்தண்டி (45), அவரின்மனைவி ராஜேஸ்வரி (40) ஆகியோர் கடந்த இரண்டு வருடங்களாக அங்கேயே தங்கி கொத்தடிமைபோல் வேலை செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு அம்சவள்ளி (7), மீனா (5), கனகவள்ளி (3) ஆகிய 3 குழந்தைகள் உள்ளன.

உடல் தோண்டப்படுகிறது
உடல் தோண்டப்படுகிறது
5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை! - திண்டுக்கல் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

கடந்த அக்டோபர் 26-ம் தேதி மூன்றாவது குழந்தை கனகவள்ளிக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு கணவன், மனைவி ஆகிய இருவரும் அழைத்துச் சென்றுள்ளனர். மற்ற இரண்டு மகள்கள் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். கமலம் வீட்டு மாடியில் நிலக்கடலை காயவைத்துள்ளார். அப்போது அங்கு சென்ற மீனா நிலக்கடலையை மிதித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கமலம், குழந்தையின் தலைமுடியைப் பிடித்து சுவரில் மோதியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மீனா, சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.

குழந்தை உடல் மீட்பு
குழந்தை உடல் மீட்பு

இதனால்,பதற்றமடைந்த கமலம், தன் மகன் அருள்முருகன், மகள் அஞ்சலை மற்றும் கீழ்பாதி கிராமத்தைச் சேர்ந்த அய்யப்பன் (32) ஆகியோர் உதவியுடன் தனது காரில் விருத்தாசலம் அருகே உள்ள முதனை கிராமத்தில் உள்ள விவசாய விளைநிலத்தில் மீனாவைப் புதைத்துள்ளனர்.

ராஜேஸ்வரி, மகளைக் காணாமல் பல இடங்களிலும் தேடியுள்ளார். ஆனால், கமலம் அவரை வெளியே எங்கும் சென்றுவிடாமல் வீட்டுக்குள்ளேயே வைத்து சித்ரவதை செய்துள்ளார்.

விபரீதத்தில் முடிந்த காதல்; இளம்பெண் வாழ்க்கையில் விளையாடிய உறவினர்! - தாயைக் கொலை செய்த கொடூரம்

ஒருகட்டத்தில், ராஜேஸ்வரிக்கு தன் குழந்தையைக் கமலம் கொலை செய்துவிட்டது தெரியவந்து அதிர்ச்சியடைந்தார். உடனே தன் இரண்டு குழந்தைகளுடன் அங்கிருந்து தப்பி நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து மேலக்குப்பம் சென்ற போலீஸார் கமலத்திடம் நடத்திய விசாரணையில், அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து விருத்தாசலம் வட்டாட்சியர் முன்னிலையில் சிறுமியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, அங்கேயே பிரேத பரிசோதனையும் செய்யப்பட்டது.

குழந்தை உடல் மீட்பு
குழந்தை உடல் மீட்பு

இதுகுறித்து நெய்வேலி தெர்மல் போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து கமலம், அவரின் மகள் அஞ்சலை, அய்யப்பன் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான அருள்முருகனை தேடி வருகின்றனர்.