Published:Updated:

கடனுக்கு சிக்கன் தராததால் கோபம்!- நெய்வேலியில் கொரோனா வைரஸ் வதந்தி பரப்பியவர் கைது

தெர்மல் காவல்நிலையம்
தெர்மல் காவல்நிலையம்

கடனுக்கு சிக்கன் தர மறுத்த கடையில் இருக்கும் கோழிகளில் கொரோனா வைரஸ் இருப்பதாக வதந்தியைப் பரப்பியவரை கைது செய்திருக்கிறது நெய்வேலி காவல்துறை.

சீனாவில் பரவியிருக்கும் கொரோனா வைரஸ் உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் கோழி உள்ளிட்ட பறவைகள் மூலம் பரவுவதாக வெளியாகும் செய்திகளும் வீடியோ காட்சிகளும் இந்தியா முழுவதிலும் பீதியைக் கிளப்பியிருக்கின்றன. அதன் விளைவாக தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கோழிக் கறியின் விலை அதிரடியாகக் குறைந்திருக்கிறது.

நெய்வேலி என்.எல்.சி
நெய்வேலி என்.எல்.சி

இந்நிலையில், ``கடலூர் மாவட்டத்திலுள்ள நெய்வேலியில் வட்டம் 21 வாசகர் தெருவில் வசிக்கும் பாண்டு மகன் பாண்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் சூப்பர் பஜாரிலுள்ள (கடையின் பெயரைக் குறிப்பிட்டு) சிக்கன் கடையில் 1 கிலோ சிக்கன் வாங்கியுள்ளார்.

`27 நாள்களுக்குப் பின்னரே கொரோனா அறிகுறி!' - தகர்ந்த 14 நாள்கள் நம்பிக்கை; அதிர்ச்சியில் சீனா

அதை வீட்டில் சமைத்துச் சாப்பிட்டபோது மதியம் 12 மணிக்குக் கடும் வயிற்று வலி ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை பெற என்.எல்.சி அரசு பொது மருத்துவமனைக்குச் சென்றபோது அவருக்கு கொரோனோ வைரஸ் இருப்பதாகவும் அதற்கான மருந்துகள் தங்களிடம் இல்லாததால் கடலூர் அரசு மருத்துவனைக்குச் செல்லும்படி அந்த மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

கைது செய்யப்பட்டவர்
கைது செய்யப்பட்டவர்

தற்போது, அவர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது பாண்டு மகன் பாண்டிக்கு மருத்துவர்கள் 48 மணி நேரம் கெடு விதித்திருக்கிறார்கள். அவரது உடல் கவலைக்கிடமாக இருக்கிறது” என்பதான ஒரு தகவல் கடந்த சில தினங்களாக கடலூர், நெய்வேலி உள்ளிட்ட பகுதிகளின் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.

நெய்வேலியில் கொரோனா வைரஸ் பாதிப்பு என்ற தகவலால் அதிர்ச்சியில் உறைந்தனர் கடலூர் மாவட்ட மக்கள். அத்துடன் சம்பந்தப்பட்ட சிக்கன் கடைக்கு சிக்கன் வாங்க யாரும் செல்லாததால், அந்தக் கடை வெறிச்சோடியது. அதையடுத்து அந்தக் கடையின் உரிமையாளர் பக்ருதீன் அலி முகம்மது என்பவர் நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், “நான் நெய்வேலி சூப்பர் பஜாரில் கடந்த 20 வருடங்களாக சிக்கன் கடை வைத்திருக்கிறேன்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

21-வது வட்டத்தில் வசிக்கும் 18 வயது நிரம்பாத சிறுவர் என் கடையில் பலமுறை சிக்கன் வாங்கிக்கொண்டு அதற்கான பணத்தைத் தராமல் தகராறு செய்து வந்தார். இந்நிலையில் மீண்டும் அவர் என்னிடம் கடனுக்கு சிக்கன் கேட்டார். அவர் பழைய பாக்கித் தொகையைத் தராததால் கடனுக்கு சிக்கன் கொடுக்க மறுத்துவிட்டேன்.

அப்போது மீண்டும், `எனக்கே சிக்கன் இல்லையா? உன் கடையை என்ன செய்கிறேன் பார்… என்று என்னிடம் தகராறு செய்துவிட்டுச் சென்ற அவர், என் கடையில் கொரோனா வைரஸ் இருப்பதாகப் பொய்யான தகவலை வாட்ஸ்அப்பில் பரப்பி வருகிறார். அதனால் எனது வாடிக்கையாளர்கள், நான் மற்றும் எனது குடும்ப உறுப்பினர்களும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறோம். எனது வியாபாரத்திலும் கடும் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. அதனால் சம்பந்தப்பட்ட சிறுவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த நெய்வேலி தெர்மல் காவல்துறையினர், அவர் மீது தவறான தகவலைப் பரப்புவது மற்றும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். மேலும் அவருக்கு 18 வயது நிறைவு பெறவில்லை என்பதால் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

நெய்வேலி தெர்மல் காவல் நிலைய ஆய்வாளர் லதா
நெய்வேலி தெர்மல் காவல் நிலைய ஆய்வாளர் லதா

இதுகுறித்து நம்மிடம் பேசிய தெர்மல் காவல் நிலைய ஆய்வாளர் லதா, “புகார்தாரரின் அடிப்படையில் வாட்ஸ்அப்பில் வந்த தகவலை ஆய்வு செய்தோம். அதில் குறிப்பிட்டிருப்பது போல கடலூர் அரசு மருத்துவமனையில் யாரும் சிகிச்சை பெறவும் இல்லை. அதேபோல குறிப்பிட்ட அந்த நண்பரான பாண்டிக்கும் எந்த உடல் பிரச்னையும் இல்லை. கடனுக்கு சிக்கன் தராததாலும் தனது நண்பர் பாண்டியைக் கலாய்ப்பதற்காகவும் தவறான தகவலை பரப்பிய அச்சிறுவனைக் கடந்த 25- தேதி கைது செய்துவிட்டோம். அறிவியல் வளர்ச்சியான சமூக வலைதளங்களை ஆக்கபூர்வமாக மட்டுமே பயன்படுத்த வேண்டும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு