Published:Updated:

`மனைவியுடன் சேர்த்து வையுங்கள்!'- நாட்டு வெடி, பெட்ரோல் கேனுடன் அதிரவைத்த இளைஞர்

நெய்வேலியில் குடும்பப் பிரச்னையில் கழுத்தில் நாட்டு சணல் வெடியுடனும், கையில் பெட்ரோல் கேனுடன் வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

Manikandan
Manikandan

நெய்வேலி இந்திரா நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (30). நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 5-ல் வசிக்கும் என்எல்சி ஊழியர் மரியதாஸின் மகள் ஜெயமேரி. மணிகண்டனும், ஜெயமேரியும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஜெயமேரி, தனது தந்தை மரியதாஸின் வீட்டில் குழந்தையுடன் வசித்து வருகிறார். மணிகண்டன் மாமனார் வீட்டிற்குச் சென்று தனது மனைவியைத் தன்னுடன் அனுப்பக்கோரி அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

Manikandan
Manikandan

இந்நிலையில் மாமனார் வீட்டிற்கு நேற்று மாலை நேரத்தில் மணிகண்டன் சென்றிருக்கிறார். அப்போது, தனது கழுத்தில் நாட்டு சணல் வெடிகளை கட்டிக்கொண்டு, உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டும், கையில் பெட்ரோல் கேனுடன் தனது மனைவியை அனுப்பாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் எனக் கூறி கையில் தீப்பெட்டியை வைத்துக்கொண்டு மிரட்டியுள்ளார்.

Vikatan

அப்போது, அந்த வழியாகச் சென்ற நெய்வேலி டவுன்ஷிப் தலைமைக் காவலர் பாலச்சந்திரன் அருகில் சென்று மணிகண்டனை சமாதானம் செய்ய முயற்சி செய்திருக்கிறார். ஆனால், மணிகண்டன் சமாதானம் ஆகாமல் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகத் தொடர்ந்து மிரட்டியுள்ளார். இதையடுத்து, நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்திற்கு பாலசந்திரன் தகவல் கொடுத்திருக்கிறார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு மேலும் இரண்டு காவலர்கள் வந்துள்ளனர்.

Manikandan
Manikandan

அவர்கள் எவ்வளவு முயன்றும் சமாதானமாகாத மணிகண்டன், மனைவியைத் தன்னுடன் சேர்த்துவைக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் எனக் கூறி தனது மாமானார், மாமியாரையெல்லாம் திட்டியிருக்கிறார். பின்னர் போலீஸார் மணிகண்டனின் இரண்டு வயது குழந்தையைத் தூக்கிகொண்டு அவரிடம் கொண்டு சென்றபோது குழந்தை அழுதுள்ளது.

இதைப் பார்த்து மனம்மாறிய மணிகண்டன், தனது உடலில் உள்ள நாட்டு வெடியை அகற்றிவிட்டு குழந்தையிடம் சென்றுள்ளார். உடனே அவரை சமாதானப்படுத்திய போலீஸார், உடலில் தண்ணீர் ஊற்றி என்.எல்.சி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர்.

Manikandan.
Manikandan.

கழுத்தில் நாட்டு வெடியுடனும், கையில் பெட்ரோல் கேனுடன் போலீஸாரிடம் தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் வீடியே சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.