Published:Updated:

`தமிழகம், கர்நாடகா டார்கெட்; ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு மொபைல் அப்ளிகேஷன்!’ - பெங்களூரு கண் மருத்துவர் கைது

பெங்களூரு கண் மருத்துவர் அப்துர் ரஹ்மான்
பெங்களூரு கண் மருத்துவர் அப்துர் ரஹ்மான்

தமிழகம், கர்நாடகாவில் நடைபெறும் சி.ஏ.ஏ தொடர்பான நிகழ்வுகள் குறித்து ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துக்குத் தகவல் அளித்துவந்த கர்நாடகாவைச் சேர்ந்த கண் மருத்துவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய பல்வேறு நபர்கள் தொடர்பாக, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். இந்தியாவில் அந்த இயக்கம் காலூன்றுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன.

என்.ஐ.ஏ.
என்.ஐ.ஏ.

அந்த வகையில், டெல்லி ஜாமியா நகரின் ஓக்லா விஹாரைச் சேர்ந்த ஜஹன்சைப் சமி வானி மற்றும் அவரது மனைவி ஹினா பஷீர் பெய்க் ஆகியோர் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் துணை அமைப்பான இஸ்லாமிக் ஸ்டேட் கொரோஷன் பிராவினன்ஸ்-உடன் (ISKP) தொடர்பில் இருந்ததாக, கடந்த மார்ச் மாதத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையின் பலனாக மகாராஷ்டிரா மாநிலம், புனேவைச் சேர்ந்த இதழியல் மாணவி நாடியா அன்வர் ஷேக் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த ஜிம் உரிமையாளர் நபீல் சித்திக் காட்ரி ஆகியோரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். நாடியா மற்றும் சித்திக் ஆகியோர் டெல்லியில் கைது செய்யப்பட்ட ஜஹன்சைப்புடன் பணியாற்றிவந்தது விசாரணையில் தெரியவந்தது.

ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்க ஏஜென்ட்டுகள் பதுங்குவதற்குத் தமிழகத்தைத் தேர்ந்தெடுத்தது ஏன்?

நாடியாவுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியமான அசைன்மென்ட் தேசிய அளவில் நடக்கும் சி.ஏ.ஏ-வுக்கு எதிரான போராட்டங்கள், அவற்றுக்கு எதிராக போலீஸார் எடுத்த நடவடிக்கைகள், கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை போன்றவை குறித்த தகவல்களைத் திரட்டி டெல்லியிலிருந்த ஜஹன்சைப்பிடம் அளிப்பதுதான். அதேபோல், இவை குறித்த தகவல்களை சிரியாவிலிருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் இரண்டாம்கட்டத் தலைவர்களிடமும் தொடர்ந்து அளித்து வந்ததாகச் சொல்கிறார்கள் என்.ஐ.ஏ அதிகாரிகள். அந்தவகையில், தமிழகம் மற்றும் கர்நாடகாவில் நடைபெறும் சி.ஏ.ஏ தொடர்பான நிகழ்வுகளை நாடியாவுக்கு கர்நாடகக் கண் மருத்துவர் அப்துர் ரஹ்மான் அளித்துவந்திருப்பதாக விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

ஜஹன்சைப் சமி வானி, ஹினா பஷீர் பெய்க்
ஜஹன்சைப் சமி வானி, ஹினா பஷீர் பெய்க்

கண் மருத்துவர் அப்துர் ரகுமான்

நாடியா மற்றும் சித்திக்கிடம் நடத்திய விசாரணையில் அப்துர் ரஹ்மான் குறித்த தகவல் கிடைத்ததும், அவரைத் தொடர் கண்காணிப்பில் என்.ஐ.ஏ வைத்தது என்கிறார்கள். இந்தநிலையில், பெங்களூரு தெற்கு பகுதியிலுள்ள பசவனக்குடி பகுதியில்வைத்து அப்துர் ரஹ்மானை என்.ஐ.ஏ அதிகாரிகள் நேற்றிரவு கைது செய்திருக்கிறார்கள். இது தொடர்பாக என்.ஐ.ஏ தரப்பில், `அப்துர் ரஹ்மானிடம் நடத்திய விசாரணையில், ஜாஹன்சைப் மற்றும் சிரியாவிலிருந்து இயங்கிவரும் மற்ற தீவிரவாதிகளுடன் இணைந்து பணியாற்றியதை ஒப்புக்கொண்டார். போர் நடைபெறும் பகுதிகளில் காயமடைந்திருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு உதவும் வகையில் மருத்துவரீதியான செல்போன் செயலி மற்றும் ஆயுதப் பரிமாற்றம் தொடர்பான செல்போன் செயலி போன்றவற்றை உருவாக்கிக் கொடுக்கும் பொறுப்பு அப்துர் ரஹ்மானுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அவற்றை உருவாக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுவந்திருக்கிறார்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பினராயி Vs அஜித் தோவல்... கேரள அரசியல் ஆட்டத்துக்குள் என்.ஐ.ஏ!

28 வயதான கண் மருத்துவர் அப்துர் ரஹ்மான், முன்னணி மருத்துவக் கல்லூரியான பெங்களூரு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கடந்த 2014-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றிருக்கிறார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பெங்களூரின் முக்கிய தனியார் மருத்துவக் கல்லூரியான ராமையா மருத்துவக் கல்லூரியில், கண் மருத்துவப் பிரிவில் முதுகலைப் பிரிவில் சேர்ந்திருக்கிறார். அங்கு பணியாற்றிக் கொண்டே படிப்பைத் தொடர்ந்த அவர், கடந்த ஜூலையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார்.

பெங்களூரு கண் மருத்துவர் அப்துர் ரகுமான்
பெங்களூரு கண் மருத்துவர் அப்துர் ரகுமான்

எம்.பி.பி.எஸ் முடித்த பின்னர், கடந்த 2014-ம் ஆண்டில் சிரியா சென்ற அப்துர் ரஹ்மான், அங்கு சில நாள்கள் தங்கியிருந்து காயமடைந்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்குச் சிகிச்சை அளித்ததாகவும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அப்துர் ரஹ்மானிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் மெசேஜிங் அப்ளிகேஷன்கள் மூலம் சிரியாவில் இருந்த ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத் தலைவர்களுடன் பல்வேறு தகவல்களைப் பரிமாறி வந்ததும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து, அவரிடமிருந்து லேப்டாப் மற்றும் செல்போன்கள் போன்றவற்றை என்.ஐ.ஏ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு