Published:Updated:

`போதைப்பொருள் டு ஹிஸ்புல் முஜாகிதீன் தொடர்பு வரை!' - தாவீந்தர் சிங் விவகாரத்தில் மிரண்ட என்.ஐ.ஏ

தாவீந்தர் சிங்
தாவீந்தர் சிங்

`நான் பெரிய தவறு செய்துவிட்டேன்’ என விசாரணை அதிகாரிகளிடம் தாவீந்தர் சிங் கூறியுள்ளார்.

இந்தியாவில் அதிக பதற்றமான பகுதியாக ஜம்மு - காஷ்மீர் கருதப்படுகிறது. தீவிரவாதிகளின் ஊடுருவல், எல்லைப்பிரச்னை என ஜம்மு எப்போது போர்க்களம் போல்தான் காட்சியளிக்கும். இதன்காரணமாக ஜம்முவில் அதிகப்படியான கெடுபிடிகள் இருக்கும். இந்த நிலையில் ஸ்ரீநகர் விமானநிலையத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த டி.எஸ்.பி தாவீந்தர் சிங் ஜம்மு- ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு தீவிரவாதிகளுடன் ஜனவரி 11-ம் தேதி பிடிபட்டார். கைதான தீவிரவாதிகள் டெல்லிக்குச் செல்வதாக போலீஸாரிடம் கூறியுள்ளார்.

கைது
கைது

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவற்றுக்கு எதிராக டெல்லியில் போராட்டங்கள் நடந்துவரும் நிலையில் தீவிரவாதிகளின் டெல்லி பயணத்துக்கு பின்னால் இருக்கும் சதித்திட்டம் குறித்து விசாரணையில் இறங்கியுள்ளது என்.ஐ.ஏ. உயர்பதவியில் இருக்கும் போலீஸ் அதிகாரி ஒருவர் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகளுடன் கைதானது பரபரப்பை ஏற்படுத்தியது.

என்.ஐ.ஏ (தேசிய புலனாய்வு முகமை) விசாரணையில் ஸ்ரீநகரை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவரின் பெயரை தாவீந்தர் சிங் கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. `நான் பெரிய தவறு செய்துவிட்டேன்’ என விசாரணை அதிகாரிகளிடம் தாவீந்தர் சிங் கூறியுள்ளார். விசாரணையைத் திசை திருப்புவதற்கு தாவீந்தர் முயற்சி செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. இதன்காரணமாக அந்த உயர் அதிகாரியின் பெயரை இதுவரை வெளியிடவில்லை.

தாவீந்தர் சிங்கின் பின்னணி!

ஸ்ரீநகரில் உள்ள அமர்சிங் கல்லூரியில் பட்டம் பெற்ற தாவீந்தர் சிங் 1990-ம் வருடம் ஜம்மு காஷ்மீர் காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியில் சேர்ந்துள்ளார். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் புல்வாமாவில்தான். 1987-ல் காஷ்மீரில் நடந்த தேர்தல் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் அங்கு போராட்டம் வெடித்தது. 1990-களில்தான் இந்தப் போராட்டத்தின் தீவிரம் சற்று குறைந்தது. இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஜம்மு காவல்துறையில் சிறப்புக் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இளம் போலீஸ் அதிகாரியான தாவீந்தர் அந்தக் காலகட்டத்தில் தைரியமாகச் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஜம்மு- காஷ்மீர்
ஜம்மு- காஷ்மீர்

காஷ்மீரில் சிறப்பாகப் பணியாற்றியதால் அவருக்குப் பதவி உயர்வும் கிடைத்துள்ளது. இவர் பணியில் சேர்ந்த இரண்டு ஆண்டுகளில் போதை பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக சர்ச்சையும் எழுந்தது. உயர் அதிகாரி ஒருவருடன் தாவீந்தர் சிக்கியுள்ளார். இதையடுத்து அவர் சஸ்பெண்டும் செய்யப்பட்டார். மீண்டும் பணிக்குத் திரும்பியபோது தீவிரவாத தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 1998-ம் ஆண்டு ஜம்மு போலீஸாரால் ஏற்படுத்தப்பட்ட தீவிரவாதத் தடுப்பு பிரிவில் முக்கிய பொறுப்பில் பணியமர்த்தப்பட்டார்.

`அப்சல் குருவின் கடிதங்கள் காட்டும் உண்மை முகம்?!'- டிஎஸ்பி தாவீந்தரின் அதிர்ச்சிப் பின்னணி

பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் சிறப்பாகப் பணிபுரிந்ததாகப் பாராட்டும் பெற்றுள்ளார். அதேநேரத்தில் மிரட்டி பணம் பறித்தல் மற்றும் ஒழுங்கீனமான நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருள்களை விற்பனை செய்தது, லாரியில் இருந்து மரக்கட்டைகளை கொள்ளையடுத்தது, மிரட்டி பணம் பறித்தது என இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும் உள்ளன. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் எல்லாம் தாவீந்தரின் வளர்ச்சிக்குத் தடையாக இல்லை, அடுத்தடுத்து பணி உயர்வு பெற்றார்.

தாவீந்தர் சிங், அப்சல் குரு
தாவீந்தர் சிங், அப்சல் குரு

2001-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவம் தொடர்பான அப்சல் குரு கடிதத்தில் தாவீந்தர் சிங் பெயர் இடம்பெற்றது. அதேபோல் ஜம்முவில் நடந்த லாக்அப் டெத்திலும் இவர் பெயர் அடிபட்டது. இதன்காரணமான 2003-ம் ஆண்டு தண்டனைப் பணியாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். ஆயுதப்படையில் 5 ஆண்டுகள் காலம் இருக்க வேண்டியிருந்தது. இந்த நிலையில் 2007-ம் ஆண்டு தொழிலதிபர் ஒருவரை மிரட்டி பணம் பறித்தாக எழுந்த புகாரையடுத்து மீண்டும் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

அதன் பின்னர், 2008-ம் ஆண்டு க்ரைமில் இருந்து டிராஃபிக்குக்கு மாற்றப்பட்டார். 2013-ம் ஆண்டு அப்சல் குருவைத் தூக்கிலிடும் வரை டிராஃபிக்கில்தான் இருந்தார். இதன்பின்னர், சனத் நகரில் உள்ள தன்னுடைய வீடு மற்றும் நிலத்தை விற்பனை செய்துவிட்டு இந்திரா நகர் பகுதியில் உள்ள ராணுவத் தளவாட கிடங்குக்கு அருகில் குடிபெயர்ந்தார். தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக உயர்போலீஸ் அதிகாரிகளிடம் கூறியுள்ளார். தாவீந்தருக்குத் திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவரின் மகள் வங்கதேசத்தில் எம்.பி.பி.எஸ் படித்து வருகிறார். மகன் ஸ்ரீநகரில் படித்து வருகிறார்.

என்.ஐ.ஏ  அலுவலகம்
என்.ஐ.ஏ அலுவலகம்

ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகளை டெல்லிக்கு பத்திரமாக அழைத்துச் சென்றால் ரூ.12 லட்சம் தருவதாகப் பயங்கரவாத அமைப்புகள் கூறியதாகவும் அவர்களிடம் 12 லட்சம் பெற்றுக்கொண்டு அழைத்துச் சென்றதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார். தாவீந்தரின் வங்கதேசப் பயணங்கள் குறித்தும் தொடர் விசாரணையில் இறங்கியுள்ளது என்.ஐ.ஏ. கடந்தாண்டு மார்ச், மே மற்றும் ஜூலை மாதங்களில் வங்கதேச தலைநகர் டாக்காவுக்குப் பயணமாகியுள்ளார்.

தாவீந்தரின் மகள் டாக்காவில்தான் மருத்துவம் பயின்று வருகிறார். ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதியான நவீத் பாபா மட்டுமல்லாமல் அந்த அமைப்பில் உள்ள பெருந்தலைகளுடனும் தாவீந்தருக்குத் தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ சந்தேகிக்கிறது.

டாக்கா சென்றபோது ஏதேனும் பணப்பரிமாற்றம் நடந்ததா என விசாரித்து வருகின்றனர். குடியரசு தினத்துக்கு முன்பாக தாவீந்தர் சிங் மற்றும் அவருடன் கைதான மூவரையும் விசாரணைக்காக டெல்லியில் உள்ள என்.ஐ.ஏ தலைமையிடத்துக்கு அழைத்து வர ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

அடுத்த கட்டுரைக்கு