Published:Updated:

ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பு முதல் வில்சன் கொலை வரை! - குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்த என்.ஐ.ஏ

 போலீஸ் எஸ்.எஸ்.ஐ வில்சன்
போலீஸ் எஸ்.எஸ்.ஐ வில்சன்

எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கில் அப்துல் சமீம், தெளஃபிக் உட்பட ஆறுபேர் மீது சென்னை புழலில் உள்ள என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக - கேரள எல்லையான கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை மார்க்கெட் ரோடு செக்போஸ்ட்டில் பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ வில்சன் கடந்த ஜனவரி மாதம் 8-ம் தேதி சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோட்டைச் சேர்ந்த அப்துல் சமீம், நாகர்கோவில் மாலிக் தீனார் நகரைச் சேர்ந்த தெளஃபீக் ஆகியோர் உடுப்பியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

இலங்கை தேவாலயத்தில் நடந்தது போன்று தமிழகத்தில் தொடர் குண்டுவெடிப்பு நடத்த திட்டமிட்ட பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதால், காவல்துறைக்கு பயத்தை ஏற்படுத்த போலீஸை கொலை செய்ய முடிவு செய்ததாகவும் இருமாநில எல்லை என்றால் எளிதில் தப்பிவிடலாம் என்பதற்காக அவர்கள் களியக்காவிளை செக்போஸ்ட்டை தேர்ந்தெடுத்ததாகவும் கூறப்பட்டது. எஸ்.எஸ்.ஐ வில்சனை துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் குத்தியும் கொலை செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலர் கைது செய்யப்பட்டனர். கன்னியாகுமரி எஸ்.பி ஸ்ரீநாத் தலைமையில் நடந்த இந்த வழக்கை பின்னர் என்.ஐ.ஏ விசாரணை நடத்தியது.

தௌஃபீக் - அப்துல் சமீம்
தௌஃபீக் - அப்துல் சமீம்

என்.ஐ.ஏ விசாரணையின் ஒருபகுதியாகக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு குமரி மாவட்டத்தில் முகாமிட்டு என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். குமரி எஸ்.பி, எஸ்.எஸ்.ஐ வில்சனின் உடலை பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் என விசாரணை நீண்டது. இந்த நிலையில் எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கில் அப்துல் சமீம், தெளஃபிக் உட்பட 6 பேர் மீது சென்னை புழலில் உள்ள என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.ஐ வில்சனை கொலை செய்த அப்துல் சமீம், தெளஃபீக் ஆகியோர் முதல் மற்றும் இரண்டாம் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், கடலூரைச் சேர்ந்த காஜா முகைதீன், பெங்களூரைச் சேர்ந்த மெகபூப் பாஷா, இஜாஸ் பாஷா, கடலூரைச் சேர்ந்த ஜாபர் அலி ஆகியோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது குற்றப்பத்திரிகை மூலம் தெரியவந்துள்ளது.

`மேட் இன் இத்தாலி; 5 தோட்டாக்கள்!’- சிக்கியது வில்சன் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி

இதுகுறித்து என்.ஐ.ஏ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கடலூர் காஜா முகைதீன் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் உறுப்பினர் ஆவார். இவர் கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் அப்துல் சமீம், தெளபீக் ஆகியோரிடம் தமிழக போலீஸை தாக்க வேண்டும் எனத் திட்டம் தீட்டியுள்ளார். இதற்காகக் கடந்த டிசம்பர் மாதம் அப்துல் சமீம், தெளஃபீக் ஆகியோர் மஹாராஷ்டிரா சென்று மெகபூப் பாஷாவிடம் இருந்து துப்பாக்கியை வாங்கியுள்ளனர். இதற்கிடையில் கடந்த ஜனவரியில் மெஹபூப் பாஷா, காஜா முகைதீன் ஆகியோரை தமிழக போலீஸார் பெங்களூரில் வைத்து கைது செய்தனர்.

அப்துல் சமீம், தெளஃபீக் ஆகியோரிடம் நடைபெற்ற விசாரணை
அப்துல் சமீம், தெளஃபீக் ஆகியோரிடம் நடைபெற்ற விசாரணை
பைல் படம்

எளிதில் தப்பிச் சென்றுவிடலாம் என்பதற்காகக் கேரள எல்லையில் உள்ள களியக்காவிளையைத் தேர்ந்தெடுத்துள்ளனர். களியக்காவிளை செக்போஸ்ட்டில் பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ வில்சனை கொலை செய்துவிட்டு அப்துல் சமீம், தெளபீக் ஆகியோர் கே.எஸ்.ஆர்.டி.சி பஸ்ஸில் தப்பிச் சென்றுள்ளனர். திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து எர்ணாகுளம் சென்றனர். பின்னர், கர்நாடக மாநிலம் சென்றவர்கள் அங்கிருந்து மஹாராஷ்டிரா மாநிலத்துக்கு தப்பிச் செல்ல முயன்றபோது உடுப்பியில் வைத்து கடந்த ஜனவரி மாதம் 15-ம் தேதி போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்துவருகிறது.

இவ்வாறு என்.ஐ.ஏ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு