Published:Updated:

தேனியில் நக்சல் அமைப்பினரின் நடமாட்டம் உள்ளதா?! - என்.ஐ.ஏ தீவிர சோதனை

தேனி மாவட்டம் பெரியகுளம், பண்ணைபுரம் ஆகிய பகுதிகளில் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் நக்சல் அமைப்பினர் உள்ளனரா எனச் சோதனையில் ஈடுபட்டனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கடந்த 2007 -ம் ஆண்டு பெரியகுளம் அருகே உள்ள முருகமலை வனப்பகுதியில் நக்சல் அமைப்பினர் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் வேல்முருகன், ஈஸ்வரன் முத்துச்செல்வம், பழனிவேல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் 2010ஆம் ஆண்டு வேல்முருகன் நீதிமன்ற பிணையில் வெளிவந்து பின்னர் தலைமறைவானார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 3 -ம் தேதி கேரளா வயநாடு பகுதியில் கேரள தண்டர்போல்ட் காவல்துறையினருக்கும் நக்சல் அமைப்பினருக்கும் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் வேல்முருகன் பலியானார்.

பெரியகுளம் அருகே உள்ள எண்டபுளி ஊராட்சிக்குட்பட்ட அண்ணாநகரில் உள்ள வேல்முருகன், பண்ணைப்புரம் பகுதியில் உள்ள ஈஸ்வரன் என்பவர் வீடுகளிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

தேனி: பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பா?! - என்.ஐ.ஏ அதிகாரிகள் 5 மணி நேரம் தொடர் விசாரணை

தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரி சசிரேகா தலைமையில் 2 மணி நேரம் ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்வின்போது பெரியகுளம் வருவாய் துறை அதிகாரிகள், நக்சல் தடுப்பு பிரிவு காவலர்கள் மற்றும் பெரியகுளம் காவல்துறையினர் உடனிருந்தனர்.

இந்த ஆய்வானது நக்சல் அமைப்பினரின் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தனர்.

ஆய்வு
ஆய்வு

இதேபோல தேனி மாவட்டம் கோம்பை அருகே உள்ள பண்ணைப்புரம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் வீட்டிலும் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதற்காக கேரள மாநிலத்தைச் சார்ந்த மாவட்ட கண்காணிப்பாளர் தர்மராஜ் காவல் ஆய்வாளர் ஸ்ரீகாந்த் ஆகியோர் கொண்ட குழுவினர் பண்ணைப்புரம் பாவலர் தெருவிலுள்ள கார்த்திக்கின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

சட்டக்கல்லூரியில் படிக்கும் கார்த்திக்குக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே தொடர்புகள் உள்ளனவா எனவும், வேறு ஏதேனும் தடைசெய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பு உள்ளதா எனவும், கார்த்திக்கின் உறவினர்கள் பெற்றோர்கள் உள்ளிட்டவர்களின் செல்போன் மற்றும் வீட்டில் ஏதேனும் தடயங்கள் இருக்கிறதா என்பது குறித்து ஆவணங்கள் சேகரித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. கார்த்திக் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனது வீட்டிற்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.

தேனி மாவட்டத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீரென நடத்திய சோதனையால் பெரியகுளம், பண்ணைபுரம் ஆகிய பகுதியில் பரபரப்பு நிலவியது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு