தஞ்சாவூரில், இந்து மதத்தைப் பற்றி சமூக வலைதளங்களில் தவறாக கருத்துகளைப் பதிவிட்டதாகவும், கிலாபத் இயக்கத்தில் தொடர்புடையதாகவும் கூறி இஸ்லாமியர்களான மூன்று பேரின் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் மூன்று பேரின் செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிலாபத் இயக்கத்தைச் சேர்ந்த அப்துல்காதர் என்பவரை ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகவும், இந்துக்களைப் பற்றி சமூக வலைதளங்களில் தவறான கருத்துகளைப் பரப்பிவருவதாகவும் கூறி, என்.ஐ.ஏ அதிகாரிகள் கடந்த ஓராண்டுக்கு முன்பு கைதுசெய்து சிறையில் அடைத்தனர். மேலும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த பாபா பக்ருதீன் என்பவரும் கைதுசெய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அவர்களிடம் நடத்திய விசாரணையில் தஞ்சை, கீழவாசல் மகர் நோன்புசாவடி தைக்கால் தெருவைச் சேர்ந்த மெக்கானிக் அப்துல் காதர், முகமது யாசின், புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள காவேரி நகரைச் சேர்ந்த அகமது ஆகியோருக்கு கிலாபத் இயக்கத்தில் தொடர்பிருப்பதாகச் சிறையில் இருப்பவர்கள் கூறியதாகச் சொல்லப்படுகிறது.

இதைத் தொடர்ந்து தஞ்சாவூர் வந்த என்.ஐ.ஏ அதிகாரிகள் தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்து சென்று இன்று காலை 5 மணியிலிருந்து மூன்று பேரின் வீடுகளிலும் சோதனை நடத்தினர். திடீரென நடத்தப்பட்ட சோதனையைக் கண்டித்து மகர்நோன்பு சாவடியிலுள்ள அப்துல்காதர் வீடு அமைந்திருக்கும் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்களும், அவரின் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆதாரம் இன்றி சோதனை நடந்துவருவதாகவும், மூன்று பேருக்கும் இதில் தொடர்பு இல்லை எனவும் கோஷமிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அப்பகுதியிலும், மூன்று பேர் வீடுகளுக்கும் முன்பும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
சோதனையின்போது வீட்டில் இருந்தவர்கள் யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. வீட்டைப் பூட்டிக்கொண்டு உள்ளே இருந்தபடி என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் குறிப்பிட்ட அந்த மூன்று பேரிடமும் விசாரணை செய்தனர். அவர்களுக்கு கிலாபத் இயக்கத்துடன் தொடர்பு இருக்கிறதா, மன்னை பாபா கூறியது உண்மையா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

முடிவில், அப்துல்காதர், முகமது யாசின், அகமது ஆகியோரின் செல்போன்களைப் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர். மேலும் அப்துல்காதரின் ஆதார் கார்டு, பேன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றையும் என்.ஐ.ஏ அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து அப்துல்காதர் கூறுகையில், ``சுமார் 2,000 பேர் வசிக்கும் பகுதியில் திடீரென காலை 5:30 மணிக்கு என்.ஐ.ஏ-விலிருந்து வருவதாகக் கூறி, அதற்கான பேப்பரைக் காட்டி சோதனை மேற்கொண்டனர். சரி என்னுடைய வக்கீலைத் தொடர்புகொள்வதாக தெரிவித்தேன். ஆனால் சோதனை முடியும் வரை யாரையும் தொடர்புகொள்ள முடியாது எனக் கூறிவிட்டனர். அதன் பிறகும் என்னுடைய வக்கீலிடம் பேசவிடாமல் மிரட்டும்விதமாக `கையெழுத்து போடுங்க’ என்றனர்.

என்னுடைய ஆண்ட்ராய்டு அல்லாத பட்டன் செல், ஆதார் அட்டை, பேன் கார்டு, வோட்டர் ஐடி ஆகியவற்றை எடுத்துச் சென்றனர். `செல்லைக் கொடுத்துடுங்க’ என்றதற்கு, `தர முடியாது’ என்று சொன்னதுடன், விவரம் கேட்டதற்கு எதுவாக இருந்தாலும் சென்னையிலுள்ள என்.ஐ.ஏ அலுவலகத்துக்கு வந்து பேசிக்கங்க” என கூறிவிட்டுச் சென்றனர்’’ என்றார்.