Published:Updated:

ராத்திரி ரவுண்ட் அப் - திருச்சி: நள்ளிரவு... மயானத்தில் பெண்கள் ரகசிய பூஜை!

ராத்திரி ரவுண்ட் அப் - திருச்சி
பிரீமியம் ஸ்டோரி
ராத்திரி ரவுண்ட் அப் - திருச்சி

- நைட் ரைடர்

ராத்திரி ரவுண்ட் அப் - திருச்சி: நள்ளிரவு... மயானத்தில் பெண்கள் ரகசிய பூஜை!

- நைட் ரைடர்

Published:Updated:
ராத்திரி ரவுண்ட் அப் - திருச்சி
பிரீமியம் ஸ்டோரி
ராத்திரி ரவுண்ட் அப் - திருச்சி
திருச்சியில் புகழ்பெற்ற இடங்கள் ஸ்ரீரங்கம் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், மலைக்கோட்டை. இரவுப் பயணம் கிளம்பலாம் என்று வரிசையாக வலம்வந்தோம். அங்கெல்லாம் சுவாரஸ்யமான நிகழ்வுகள் எதுவும் கிடைக்கவில்லை. மணி 12-ஐ நெருங்கிக்கொண்டிருந்தது. “அண்ணே சுடுகாட்டுக்குப் போகலாமா?” என்றான் போட்டோகிராபர் தம்பி. தூக்கிவாரிப்போட்டது. “டேய்... நான் எதுக்குடா, நடுராத்திரி பன்னண்டு மணிக்குச் சுடுகாட்டுக்குப் போகணும்!” அண்ணன் வடிவேலுவின் கேள்வியை அப்படியே அவனிடம் பாஸ் செய்தேன். டூ வீலரை அவன்தான் ஓட்டிக்கொண்டிருந்தான்... “சும்மா வாங்கண்ணே...” என்று பதிலேதும் எதிர்பாராமல் வண்டியைச் செலுத்தினான்.
ராத்திரி ரவுண்ட் அப் - திருச்சி: நள்ளிரவு... மயானத்தில் பெண்கள் ரகசிய பூஜை!

காவிரிக் கரைக்கு மறுபுறம் இருக்கிறது ஓயாமாரி சுடுகாடு. இதோ வந்துவிட்டது மயானம். காவிரி சலசலக்கும் ஓசை கேட்டது. வண்டியை ஓரங்கட்டிவிட்டு, மயானத்தின் முன்பாக நின்றோம். மயானத்தின் முகப்பில் காட்சி தந்தார் அரிச்சந்திர சுவாமி. இப்படித்தான் காசி மயானத்திலும் கங்கையைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்கிறாராம் அரிச்சந்திரன். பெரியவர்கள் சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அங்கே கங்கை. இங்கே காவிரி. “உள்ளே போலாம்ண்ணே” முதுகில் கைவைத்துத் தள்ளினான் தம்பி. அப்போது பார்த்து, “ஊஊஊஊஊ”வென உள்ளேயிருந்து நரியொன்று ஊளையிடும் சத்தம் கேட்டது. “அண்ணே, பயப்படாம சும்மா வாங்கண்ணே..!” உசுப்பேத்தினான் தம்பி.

உள்ளே நுழைந்தோம். மரத்தடியில் முதியவர்கள் சிலர் அமர்ந்து புகைத்துக்கொண்டிருந்தார்கள்... நெருங்கிச் சென்று பார்த்தோம். “பொட்டலம்லாம் இங்க விக்குறதில்லை...” என்றார்கள் முனகலாக. கஞ்சா வாசம் தூக்கியது. “பெரியவரே அதுக்கு வரலை... சும்மா சுடுகாட்டைப் பார்க்க வந்தோம்” என்றோம். ஒரு பெரியவர் மட்டும், “ஓ பூஜைக்கு வீட்டுல விசாரிச்சுட்டு வரச் சொன்னாங்களா தம்பி. தூரத்துல பாருங்க... லேடீஸ் கொஞ்சம் பேர் நின்னுருக்காங்களா?” என்றார். உற்றுப் பார்த்தோம். இருட்டில் பெண்கள் சிலர் விளக்கேற்றிக்கொண்டிருப்பது மசமசவெனத் தெரிந்தது.

ராத்திரி ரவுண்ட் அப் - திருச்சி: நள்ளிரவு... மயானத்தில் பெண்கள் ரகசிய பூஜை!

பெரியவர் தொடர்ந்தார்... “இந்தியாவுலயே காசிக்கு அப்புறம் அரிச்சந்திரன் சுவாமி இருக்கிற ஒரே மயானம் இதுதான்னு சொல்லுவாங்க. இங்க குறிப்பிட்ட நாள்கள்ல சுடுகாட்டு பைரவரை வழிபட்டால் அதிக பலம் கிடைக்குமாம். ஒருபக்கம், பிணம் எரிஞ்சுக்கிட்டே இருக்கும். இன்னொரு பக்கம், பெண்கள் வழிபாடு செய்வாங்க. குடும்பத்துல வெளியே சொல்ல முடியாத கஷ்டங்கள், துரோகங்கள், கணவன் - மனைவி பிரச்னை இதெல்லாம் இருந்தா, ரகசியமா இங்க வந்து வேண்டிக்கிட்டா எல்லா கஷ்டமும் தீர்ந்துடும்கிறது நம்பிக்கை. இதை ரஜோ குண வாமாசார வழிபாடு அப்படீன்னும் சொல்லுவாங்க. அதே மாதிரி எல்லாப் பெண்களும் இங்க வந்துட முடியாது. கடவுளோட அழைப்பு இருந்தாத்தான் வர முடியும். என் அனுபவத்துல இங்க வந்த பெண்கள் நிறைய பேர் சாமி வந்தது மாதிரி ஆடிட்டுப் போயிருக்காங்க” என்றவர், “தம்பி பீடி இருக்குமா?” என்றார்.

“தாத்தா அந்தப் பழக்கமே இல்லைங்க” என்றோம். “அடப் போப்பா” என்றவர், “சூனியம் வெக்குறவங்கல்லாம் வந்தா எனக்கு நாலு கட்டு பீடி கொடுப்பாங்க தெரியுமா?” என்றார். ஆச்சர்யமாகப் பார்த்தோம். “பில்லி, சூனியம், மாந்திரீகம் மாதிரியான காரியங்களுக்காகவும் நைட்டு 12 மணிக்கு சிலர் வருவாங்க. குழந்தைகளோட மண்டை எலும்புதான் அவங்களுக்கு வேணும். பல சமயம் கிடைக்காது. நாய், நரிங்க பிறாண்டிப் போட்டிருக்குற சில எலும்புகளை மட்டும் பொறுக்கிட்டு, அதுக்கு குங்குமம் பூசி, விடியக்காலை 4 மணி வரைக்கும் மந்திரிப்பாங்க. 4 மணிக்கு ஒரு நொடி கடக்குறதுக்கு முன்னாடி அதை ஒரு பையிலவெச்சு மூடிடுவாங்க. பிரம்ம முகூர்த்த நேரத்துல அது வெளிப்படக் கூடாது. அப்புறம் கிளம்பிடுவாங்க” என்றார்.

ராத்திரி ரவுண்ட் அப் - திருச்சி: நள்ளிரவு... மயானத்தில் பெண்கள் ரகசிய பூஜை!

“சரி, சரி... ரொம்ப நேரம் நிக்காதீங்க... முதல்ல கிளம்புங்க” என்றார். நாம் இருப்பதை கவனித்த பெண்கள் சிலர் தூரத்தில் தயங்கி நிற்பது தெரிந்தது. அவர்களுக்குச் சங்கடம் தர விரும்பாமல் இடத்தைவிட்டுக் கிளம்பினோம். வண்டியைக் கிளப்பிக்கொண்டு சிறிது தூரம் வந்தோம். ஆட்டோ ஸ்டாண்ட் ஒன்று கண்ணில் பட்டது. தூங்காமல் காத்திருந்த ஆட்டோ டிரைவரிடம் அந்த முதியவர் சொன்னது பற்றிக் கேட்டோம்... “ரகசிய பூஜையெல்லாம் ஒண்ணும் கிடையாதுப்பா... மயானத்துக்கு எதிர்ல அங்காள பரமேஸ்வரி மேடை இருக்குது. வருஷம்தோறும் மகா சிவராத்திரி அன்னிக்கு நைட்டு அங்கதான் மயான பூஜை நடக்கும். மூலவர் அரிச்சந்திரனுக்கு வியாழக்கிழமை பூஜை பண்ணுவாங்க. ஞாயித்துக்கிழமை ராகுகால பூஜை ஃபேமஸ். சிலர் நடுராத்திரி மயானத்துக்கு வந்து வழிபட்டா சிவன் அருள் கிடைக்கும்னு நம்புறாங்க. வேறொண்ணுமில்லை” என்றார். “சரிண்ணே தாங்க்ஸ்” என்றபடி கிளம்பினோம்.

“எப்படிண்ணே... சூப்பர் அனுபவமா?” என்றான் போட்டோகிராபர் தம்பி... “டேய் உன்னை ஜூனியர் விகடன் அசைன்மென்ட்டுக்கு கூப்பிட்டா, சக்தி விகடனுக்குக் கட்டுரை ரெடி பண்ணவெச்சிடுவ போலிருக்கேடா...” என்றபோது மணி நான்கைத் தொட்டிருந்தது. பிரம்ம முகூர்த்தத்திலாவது தூங்கலாம் என்று நினைத்தபடி கிளம்பினோம்!