Published:Updated:

ராத்திரி ரவுண்ட் அப்: குகைக்குள் புகை மனிதர்கள்!

ராத்திரி ரவுண்ட் அப்
பிரீமியம் ஸ்டோரி
ராத்திரி ரவுண்ட் அப்

- நைட் ரைடர்

ராத்திரி ரவுண்ட் அப்: குகைக்குள் புகை மனிதர்கள்!

- நைட் ரைடர்

Published:Updated:
ராத்திரி ரவுண்ட் அப்
பிரீமியம் ஸ்டோரி
ராத்திரி ரவுண்ட் அப்
நமது சோர்ஸ் ஒருவர் விதவிதமான போதை உலகில் சஞ்சரிக்கும் விநோத நபர் ஒருவரை அறிமுகப்படுத்தினார். ‘‘ஒரு நாள் கப்பு அடிக்கும் டாஸ்மாக் பாரில் மட்டரக குவார்ட்டரை ‘ரா’வாகச் சரிப்பவர், மறுநாள் ‘பப்’பில் ஸ்காட்ச் விஸ்கி ஆர்டர் செய்வார். இன்னொரு நாள் கடற்கரை ரிசார்ட்டில் இலக்கியவாதிகளுடன் உருண்டு புரண்டு சரக்கடித்துக்கொண்டிருப்பார். அடுத்தமுறை திரை ஆளுமைகளுடன் கைத்தாங்கலாக வலம்வருவார். மனிதர் புகையைப்போல எங்கும் ஊடுருவிவிடுவார். வாருங்கள்... அவருடன் ஓர் இரவுப் பயணம் மேற்கொள்ளலாம்’’ என அழைத்தவர், “ஷூ, ஜாக்கெட் அணிந்துகொண்டு வா. ஓரிடத்துக்குச் செல்வோம். அலாதியான அனுபவங்கள் கிடைக்கும்” என்றும் கூறினார்.

இரவு 10:30 மணி. அவர்கள் அழைத்துச் சென்றது ஓ.எம்.ஆர் சாலையிலிருக்கும் ஹூக்கா பார். வாயிலில் ஏராளமான சொகுசு கார்கள். டிரெஸ் கோட் சகிதம் பக்காவாக ஹூக்கா பாருக்குள் நுழைந்தோம். ஆங்காங்கே குகை செட்டப்பில் குடில்கள். குகைகளிலிருந்து வழிந்து கொண்டிருந்தது புகை. வடகிழக்கு யுவதி ஒருவர் நம்மை வரவேற்றார். காலியாக இருந்த ஒரு குடிலைக் காட்டி அமரச் சொன்னார்.

ராத்திரி ரவுண்ட் அப்: குகைக்குள் புகை மனிதர்கள்!

வயது வித்தியாசமின்றி, புகையில் திளைத்துக்கொண்டிருந்தார்கள் விதவிதமான மனிதர்கள். நடை, உடை, பாவனை, தோரணை அத்தனையும் அவர்களது செல்வச் செழிப்பை உணர்த்தின. 50 வயது மதிக்கத்தக்க ஒருவர், பேத்தி வயதுடைய பெண்ணை தோளில் கிடத்தி, அவளது இதழ்களை விரல்களால் விரித்து ஹூக்கா பைப்பை வைத்தார். கண்கள் சொருக ஆழமாக அதை இழுத்த பெண், வாயிலும் மூக்கிலுமாக மெதுவாகப் புகையை வெளியேற்றினார். தாள லயத்துக்குத் தலையாட்டியபடியே மாறி மாறிப் புகைத்தார்கள். ஏதோ மூச்சுப்பயிற்சி செய்வதுபோல இருந்தது அந்தக் காட்சி.

டேபிளுக்கு வந்த பணிப்பெண் ஒருவர், “வாட்டர் பைப், ஷிஷா, நர்கீலா, அர்கீலா... என்ன வேண்டும்?” என்று கேட்க, நமது சோர்ஸின் நண்பரோ, “சிலிக்கான் கன்டெய்னர் வித் பைப் வேண்டும். பட் ‘ஸ்டப்ஃப்டு’ என்ன இருக்கிறது... கலீல் மாமூன், டோம்பக், ஜூராக், மொய்சில் இதில் ஏதாவதொன்று கிடைக்குமா?” என்று கேட்டார். அந்தப் பெண்ணோ சற்றே தாழ்ந்த குரலில், “நீங்கள் கேட்பதெல்லாம் ஒரிஜினல் பிராண்ட் சார்... கல்ஃப் கன்ட்ரீஸ்லருந்து இம்போர்ட் ஆகுறது. ஆனா, அதையேதான் நாங்க லோக்கல் பிராண்டா வேற பெயர்கள்ல தர்றோம். லாவண்டர், வெனிலா, ஆரஞ்ச், கிரேப், ஸ்ட்ராபெர்ரி, ஆப்பிள் அல்லது நட்ஸ் இதெல்லாம் நீங்க கேட்ட காம்பினேஷன்லயே கிடைக்கும்” என்றார். சோர்ஸின் நண்பர், “ஜூராக் காம்பினேஷன் ப்ளீஸ்...” என்று சொல்ல சில நிமிடங்களில் சிலிக்கான் குடுவையுடன் இணைக்கப்பட்ட ஹூக்கா சாதனம் வந்தது.

“இங்க மட்டுமில்ல... ஈ.சி.ஆர் ரோட்டுல நிறைய ஹூக்கா பார் இருக்கு. சிட்டிக் குள்ளேயும் நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, அண்ணா நகர்னு இதுக்குன்னே பார் இருக்கு. எல்லாம் போலீஸ் மாமூல்ல ஓடுறது” என்றபடி ஹூக்காவை ஆழமாக இழுத்து புகையை வெளியேவிட்டார். இனம் புரியாத நறுமணம் சூழ்ந்தது.

“வாசனை ஆயில், டிரை ஃப்ரூட்ஸ், மதுவில் ஊறவைத்த புகையிலை... இதுதான் ஜூராக் காம்பினேஷன். இதோ பார்... இந்த சிலிக்கான் குடுவையின் அடியில் சூடான நிலக்கரித் துண்டுகளைப் போட்டிருப்பார்கள். மேலே அடுத்த லேயரில் தண்ணீர். அதில் கொஞ்சம் கஞ்சா இலைகள். அதற்கும் மேலே புகையிலை, நறுமண ஆயில், டிரை ஃபுருட்ஸ்... தண்ணீர்வழியாக இழுக்கும்போது குளிர்ச்சியான புகை தொண்டை வழியாக நுரையீரலை நிரப்பும். எனக்குப் பழகிவிட்டது. ஒருநாளும் இதை நீ இழுத்துவிடாதே. ‘45 நிமிடம் கெப்பாசிட்டி கொண்ட ஒரு ஹூக்காவை நான்கு முறை எடுத்தால்தான் ஒரு சிகரெட் பிடித்ததற்குச் சமம்’ என்று சும்மா அடித்து விடுவார்கள். அதெல்லாம் பிசினஸ் ட்ரிக்ஸ். 45 நிமிட ஒரு ஹூக்கா 50 சிகரெட்டுகளுக்குச் சமம். இதில் 70 பர்சன்டேஜ் புற்றுநோயை ஏற்படுத்தும் கார்சினோஜென்ஸ் இருக்கின்றன. பலரும் குழாயில் வாய் வைத்திருப்பதால், வாய் ஹெர்பஸ் நோய் வரலாம்” என்றபடி ஆழமாக ஹூக்காவை இழுக்கத் தொடங்கினார்.

ராத்திரி ரவுண்ட் அப்
ராத்திரி ரவுண்ட் அப்

மணி 11-ஐ நெருங்கிக்கொண்டிருந்தது... ஒவ்வொரு குடிலாகச் சென்ற பணியாளர்கள் சிலர், “சீக்கிரம் முடிங்க. 12 மணிக்கு போலீஸ் ரவுண்ட்ஸ் வரும்” என்று எச்சரித்தார்கள். புகைக்குப் போட்டியாக வழிந்து கொண்டிருந்தது மேற்கத்திய இசை. சிலர் மெதுவாக நடனமாடிக்கொண்டிருந்தார்கள்.

அந்தப் பெரிய ஹாலின் மூலையில் திரைச்சீலை போடப்பட்டிருந்த அறைக்குச் சிலரை மட்டும் அனுமதித்துக்கொண்டிருந்தனர். நாம் விசாரிக்க, “முன்பே புக் செய்ய வேண்டும். ஸ்பெஷல் ரேட்” என்றார்கள். நாம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இளம் ஜோடியொன்று இறுக்க அணைத்தபடியே ஹூக்காவுடன் உள்ளே நுழைந்தது. நம் தோளைத் தட்டினார் சோர்ஸின் நண்பர்... அவரது கண்கள் கிறங்கியிருந்தன... “தல... அது லிப் பார்ட்னர்ஸ் பார். உனக்கும் அப்படி ஆள் இருந்தா சொல்லு... உள்ளே அனுப்புறேன்” என்று கண்ணடித்தவர், “ஒருத்தர் ஹூக்காவை உறிஞ்சணும். அதை நல்லா இழுத்த பின்னாடி லிப் லாக் பண்ணணும். இப்போ புகையை இன்னொருத்தர் வாய்க்குள்ளே விடணும். அப்படியே மாறி மாறி... அரை மணி நேரத்துல கண்ணெல்லாம் சொருகிடும்...” என்று சொல்ல திகைப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

மணி 12 அடித்தது. “சார், ப்ளீஸ் கிளம்பலாம்” என்று வெளியே அனுப்பத் தொடங்கினார்கள். வெளியே வந்தோம். பார்க்கிங்கில் அரசியல் கட்சி ஒன்றின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட சொகுசு கார் ஒன்று நின்றிருந்தது. சோர்ஸிடம், “அந்தக் காரோட ஓனர் கிளம்பவில்லையா?” என்று கேட்டேன். “ஹா... ஹா... ஹா...” எனச் சிரித்தவர், “இந்த பாரே அவருடையதுதான்” என்றார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism