`உதவி கேட்டு நடித்த மூதாட்டி; காத்திருந்த ஆட்டோ ராணிகள்!' -கொடுங்கையூர் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

நகைகளை இழந்த பானு வீட்டுக்கு வந்தார். வீட்டில் உள்ளவர்களிடம் நடந்த சம்பவங்களைக் கண்ணீர்மல்கக் கூறினார். இதையடுத்து பானு, கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் முகமது யூசுப். இவரின் மனைவி பானு. இவர் வீட்டின் அருகே நேற்றிரவு நடந்து சென்றார். அப்போது சாலையைக் கடக்க முதாட்டி ஒருவர் காத்திருந்தார். பானுவைப் பார்த்த அந்த மூதாட்டி, சாலையைக் கடக்க உதவி செய்யும்படி கேட்டுள்ளார். அதனால் மனமிரங்கிய பானுவும் மூதாட்டியின் கையைப்பிடித்து சாலையைக் கடக்க உதவினார். சாலையைக் கடந்து எதிர்திசைக்குச் சென்றதும் அங்கு ஒரு ஆட்டோ நின்றுகொண்டிருந்தது.

ஆட்டோவின் அருகில் சென்றதும் மூதாட்டி, பானுவை வலுக்கட்டாயமாக ஆட்டோவுக்குள் ஏற்றினார். மூதாட்டியின் பிடியிலிருந்து தப்பிக்க பானு முயன்றார். ஆனால், அதற்குள் ஆட்டோவில் இருந்த பெண்கள், பானுவைப் பிடித்து ஆட்டோவுக்குள் இழுத்தனர். மூதாட்டி மற்றும் பெண்களிடம் சிக்கிய பானு, ஆட்டோவுக்குள் ஏற்றப்பட்டார். அடுத்த சில நிமிடங்களில் ஆட்டோ மின்னல் வேகத்தில் சென்றுவிட்டது.
அந்த ஆட்டோவையும் பெண் ஒருவர் ஓட்டினார். பானு சத்தம் போடாமலிருக்க, அவரின் வாயைப் பொத்தினார், ஒரு பெண். இன்னொரு பெண், கத்திமுனையில் பானு அணிந்திருந்த தங்கச் செயின்களைக் கழற்றினார். அடுத்து, ஆள்நடமாட்டம் இல்லாத இருட்டுப் பகுதியில் ஆட்டோவை அந்தப் பெண்கள் நிறுத்தினர். பின்னர் பானுவைக் கீழே இறக்கிவிட்டுவிட்டு அந்த ஆட்டோ ராணிகள் தப்பி விட்டனர்.
நகைகளை இழந்த பானு வீட்டுக்கு வந்தார். வீட்டில் உள்ளவர்களிடம் நடந்த சம்பவங்களைக் கண்ணீர்மல்கக் கூறினார். இதையடுத்து பானு, கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்துவருகின்றனர். பானுவிடம் நகைகளைப் பறித்த ஆட்டோ ராணிகள் குறித்து விசாரித்துவருகின்றனர்.
ஏற்கெனவே சென்னையில் ஆட்டோவில் வரும் பெண்கள், மூதாட்டிகளைக் குறி வைத்து நகைகளைப் பறித்துவந்தனர். இந்த வழக்கில் செம்பியம் போலீஸார், ஆந்திராவைச் சேர்ந்த அகிலாவை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் அகிலா, `எங்கள் ஊரே திருடும்' என அதிர்ச்சி தகவலைத் தெரிவித்தார். தற்போது உதவி கேட்பது போல நடித்த மூதாட்டி ஒருவர் இளம்பெண்ணிடமிருந்து 15 சவரன் தங்கச் செயின்களைப் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.