நீலகிரி: பெற்ற மகளிடம் அத்துமீறிய தந்தை - 3 ஆண்டுகளாக கொடுமையை அனுபவித்த சிறுமி

குற்றம் நிரூபிக்கப்பட்ட சிறுமியின் தந்தைக்கு ஆயுள் தண்டனையும்,10 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி அருணாச்சலம் தீர்ப்பளித்தார்.
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர்,கடந்த 2017 ஆம் ஆண்டு விடுமுறையின்போது, கேரளாவில் உள்ள தனது தாத்தா வீட்டிற்குச் சென்றுள்ளார்.

விடுமுறை முடிந்த நிலையில்,சொந்த ஊரான நீலகிரிக்கு திரும்ப மறுத்துள்ளார்.ஊருக்குச் செல்ல தயங்குவதற்கான காரணம் என்ன? என சிறுமியின் தாத்தா கேட்டுள்ளார்.
அப்போது சிறுமி கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிக்கு அவரது தந்தை கடந்த மூன்று ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும், வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என மிரட்டியதும் தெரியவந்துள்ளது. அதனால், தான் மீண்டும் வீட்டுக்கு செல்ல விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள்,கேரளாவில் உள்ள மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்துச் சென்று,பரிசோதனை செய்தனர். இதில் சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்திருப்பதும் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து சிறுமியின் உறவினர்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சிறுமியின் தந்தை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கு விசாரணை ஊட்டியில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. குற்றம் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிக்கு, ஆயுள் தண்டனையும் 10 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி அருணாச்சலம் தீர்ப்பளித்தார்.

இது குறித்து பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர் மாலினி " 44 வயதான துணி வியாபாரியான சிறுமியின் தந்தை,மனைவி இல்லாத சமயங்களில் 11 வயதான சொந்த மகளையே 3 ஆண்டுகளாக பலமுறை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் 10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது"என்றார்.