Published:Updated:

26% வட்டி... பெண்களை இலக்காக்கி அடாவடி செய்யும் நுண்கடன் நிறுவனங்கள்!

பல நுண்கடன் நிறுவனங்கள் பெண்களைக் குறிவைத்து வட்டிக்குக் கடன் வழங்கியுள்ளன. தற்போது இரண்டாவது பேரிடராக கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையிலும் பல தொல்லைகள் கொடுத்து பணம் வசூலிப்பதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

வனப்பகுதிகள் நிறைந்த, சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி மாவட்டத்தில் பெரிய அளவிலான தொழிற்சாலைகள் எதுவும் கிடையாது. அரசு சார்பில் இயங்கிவந்த தொழிற்சாலைகளும் நலிவடைந்து மூடப்பட்டு வருகின்றன.

Village near Ooty
Village near Ooty

சுற்றுலா, தோட்டப்பயிர்கள், மலைக்காய்கறிகள்... இவை மூன்றுமே இந்த மலை மாவட்டப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்துவந்தன.

தேயிலை விலை வீழ்ச்சிக்குப் பின்னர் பல லட்சம் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டது. கடந்த ஆண்டு நீலகிரியில் கொட்டித்தீர்த்த பெருமழை மேலும் பலரது வாழ்வைச் சூறையாடியது. இதனால் பலரும்‌ அன்றாட உணவிற்கே திண்டாடும் நிலை ஏற்பட்டது.

tea estate
tea estate

இதைச் சாதகமாக்கிக்கொண்ட பல நுண்கடன் நிறுவனங்கள் பெண்களைக் குறிவைத்து வட்டிக்குக் கடன் வழங்கியுள்ளன. தற்போது இரண்டாவது பேரிடராக கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையிலும் பல தொல்லைகள் கொடுத்து பணம் வசூலிப்பதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து ஊட்டியில் நடைபாதை வியாபாரம் செய்துவந்த பெண் ஒருவர் நம்மிடம் பேசுகையில், "ரோட்டோரம் பழம் வித்து கிடைக்கிற வருமானத்தை வச்சுக் குடும்பத்த நடத்திவந்தோம். இந்த வருசம் கார்டன் சீசனுக்குப் பழத்தோட, கூட சில பொருள்களையும் வாங்கி விக்கலாம்னு நெனச்சு நாங்க சில பேர் கூட்டா சேர்ந்து கடன் வாங்குனோம்.

workers
workers

எல்லாப் பணத்தையும் முதலுக்குப்போட்ட ஒரு வாரத்துல கொரோனா வருதுனு வியாபாரத்தைத் தடை பண்ணிட்டாங்க. போட்ட முதலும் போச்சு... சாப்பாட்டுக்கே கஷ்டம்... இதுல வட்டி எப்படி கட்டுறது? ஆனா இந்தப் பத்து நாளா பணம் கேட்டு தொந்தரவு பண்றாங்க. கொஞ்சம் அவகாசம் கொடுங்க... கட்டுறோம்னாலும் கேக்கல. ஊர்ல மரியாதை இல்லாம பண்ணிடுவோம்னு அவமானப்படுத்துறாங்க. என்ன செய்யப்போறோம்னு எங்களுக்கு தெரியல" எனக் கண்ணீர் வடிக்கிறார்.

’இந்த கூலியவச்சி குழந்தைங்க பசியாத்திவரோம். தெரியாம குழுவுல கடன வாங்கிட்டோம். வட்டியும் கட்டித்தான் வந்தோம். இப்ப கட்ட முடியல. கெஞ்சிப் பாத்தோம் ஒத்துக்கல’
tea estate
tea estate
`பாட்டிக்கு கொரோனா தொற்று; பேரக் குழந்தைகளுக்கும் பரவியது!’ -சீல் வைக்கப்பட்ட தென்காசி பகுதி சாலைகள்

வட்டி வசூலிக்கும் கும்பலிடம் சிக்கித் தவிக்கும் கோத்தகிரியைச் சேர்ந்த தேயிலை பறிக்கும் பெண், "கட்டட வேலை செஞ்சிவந்த எங்க வீட்டுக்காரர் கடந்த மூணு மாசமா வேலை இல்லாம இருக்கார். எனக்கு வாரத்துல ரெண்டு நாள் வேலை கிடைக்குது. இந்த கூலியவச்சி குழந்தைங்க பசியாத்திவரோம். தெரியாம குழுவுல கடன வாங்கிட்டோம். வட்டியும் கட்டித்தான் வந்தோம்... இப்ப கட்ட முடியல. கெஞ்சிப் பாத்தோம் ஒத்துக்கல" என்றார்.

நுண்கடன் நிறுவனங்கள் குறித்து குன்னூர் நகர நுகர்வோர் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் மனோகரன் நம்மிடம் பேசினார். "நீலகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரை நுண்கடன் நிறுவனங்கள் என்ற பெயரில் பல கந்துவட்டி கும்பல்கள் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வருகின்றன. இவர்கள் 26 சதவிகிதத்திற்கும் அதிகமாக வட்டி வசூலிக்கின்றனர். பெண்களைக் குழுவாக இணைத்து அவசரத் தேவைக்கு உதவுவதாகக்கூறி அதிக வட்டிக்குக் கடன் வழங்குகின்றனர்.

குன்னூர் நகர நுகர்வோர் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் மனோகரன்
குன்னூர் நகர நுகர்வோர் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் மனோகரன்

தற்போது ஊரடங்கால் அப்பாவி தொழிலாளர்கள் வேலையிழந்து தவிக்கும் நிலையில், கடன் வசூலிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் வீட்டு வாசலில் அமர்ந்து, 'பணத்தை வாங்காமல் நகர மாட்டோம்’ எனத் தொந்தரவில் ஈடுபடுவதோடு பெண்களை மிக மோசமாகப் பேசுகின்றனர். இதனால் பல பெண்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் இதனை ஆய்வு செய்து முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

ஊட்டியில் உள்ள ஒரு நுண்கடன் நிறுவனத்தில் பணியாற்றிவரும் ஊழியர் ஒருவர் நம்மிடம் பேசினார். "ஒரு மாதம் வரை கடன் எதுவும் வசூலிக்க வேண்டாம் என அலுவலகத்தில் கூறியிருந்தார்கள். ஆனால் தற்போது கடன் வசூலிக்க வற்புறுத்துகிறார்கள். மக்களிடம் பணம் இல்லாத நிலையில் வசூலிக்க எங்களுக்கு கஷ்டமாக உள்ளது என்றோம். புதிதாக கடன் தருகிறோம். இந்தத் தவணையைச் செலுத்துங்கள் எனச் சொல்லி வசூலிக்கக் கட்டாயப்படுத்துகிறார்கள்’’ என்று புலம்புகிறார் அவர்.

Ooty
Ooty
`கொரோனா பரவல்... தீவிரமடையும் போராட்டம்... கவலையில் ஆட்சியாளர்கள்!’ - சிக்கித் தவிக்கும் அமெரிக்கா

இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தோம் "நுண்கடன் நிறுவனங்களின் கடன் வசூல் மற்றும் அவர்களின் செயல்பாடுகள் குறித்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு