Published:Updated:

நீலகிரி: 'மரக்கடத்தல் விவகாரம்; அதிமுக நிர்வாகி உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு!'

வெட்டப்பட்ட காட்டு மரங்கள்
வெட்டப்பட்ட காட்டு மரங்கள்

அனுமதியின்றி ஏராளமான காட்டு மரங்களை வெட்டிய விவகாரத்தில் வனத்துறையின் 2 அதிகாரிகள் உட்பட 4 வனத்துறையினரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில்,இதில் தொடர்புடைய அதிமுக நிர்வாகி உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள நடுவட்டம் பகுதியில் தனியார் தோட்டம் ஒன்றில் சில்வர் ஓக் மரங்கள் வெட்டுவதற்காக அனுமதியைப் பெற்று, அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக மரங்களை வெட்டியதோடு பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரியவகை காட்டு மரங்களையும் வெட்டி கடத்தியுள்ளனர். இதுகுறித்து வனத்துறையின் உயர் அதிகாரிகளுக்கு கிடைத்த புகாரின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டதில், அதிமுக நிர்வாகி ஒருவர் இந்த மரக்கடத்தலில் ஈடுபட்டிருப்பதும், மேலும் இதற்கு வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சிலர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. கடமை தவறிய நடுவட்டம் வனச்சரகர் கூடுதல் பொறுப்பு வனச்சரகர்கள் சிவா, குமார், வனவர் தருமசக்தி, மற்றும் வன காவலர் நர்சீஸ் குட்டன் ஆகிய நான்கு பேரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.இதனைத் தொடர்ந்து அந்த தனியார் தோட்டத்தின் உரிமையாளர் கொய்லா என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையின் அடிப்படையில் அதிமுக நிர்வாகி உட்பட மொத்தம் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

வெட்டப்பட்ட காட்டு மரங்கள்
வெட்டப்பட்ட காட்டு மரங்கள்

மரக்கடத்தல் தொடர்பாக தகவல் தெரிவித்த நீலகிரி வனத்துறை அதிகாரிகள், "இந்த விவகாரத்தில் இரண்டு ரேஞ்சர்கள் உட்பட 4 வனத்துறை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். தற்போது தோட்டத்தின் உரிமையாளர் கொய்லா, கொய்லா குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். இது தவிர மர வியாபார காண்ட்ரக்டர்கள் சஜீவன்,மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த மருதுபாண்டியன், சுமேஷ் மற்றும் ஓட்டுநர் அனிபா ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளோம்.தொடந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்"என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு