Published:Updated:

`மொபைல் சுவிட்ச் ஆஃப், கிணற்றில் 9 சடலங்கள்' - வடமாநில தொழிலாளர்கள் மரணத்தில் நீடிக்கும் மர்மம்

இடம்பெயர்ந்த தொழிலாளர்கள்
இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் ( AP )

தெலங்கானா மாநிலம் வாராங்கலில் தனியார் மில்லில் பணியாற்றிய தொழிலாளர்கள் 9 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஆலம் மற்றும் அவரின் மனைவி நிஷா இருவரும் 20 வருடங்களுக்கு முன்பு பிழைப்பைத் தேடி வாரங்கல் வந்துள்ளனர். இரண்டு மகன்கள் மற்றும் மகளுடன் வாரங்கல் பகுதியில் வசித்து வந்துள்ளனர். மகளுக்குத் திருமணமாகி விவாகரத்து ஆன நிலையில் அவரின் குழந்தையும் இவர்களுடன் இருந்துள்ளது.

ஊரடங்கு காரணமாக மில் இயக்கப்படாததால் அந்தக் குடும்பம் சற்று சிரமத்தில் இருந்துள்ளது. வேலை இல்லாததால் வருமானம் இல்லை. இதனால் தாங்கள் வசித்து வந்த வீட்டுக்கு வாடகை கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மில் உரிமையாளரைச் சந்தித்து குடோனில் தங்கிக்கொள்ள அனுமதி கேட்டுள்ளனர். இவர்கள் குடோனின் தரைதளத்தில் தங்கியிருக்க, பீகாரைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் முதல் தளத்தில் தங்கியிருந்துள்ளனர்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இந்நிலையில் மில் உரிமையாளர் நேற்று மாலை குடோனுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு யாரும் இல்லை. உணவுகள் பாதி சாப்பிட்ட நிலையில் பாத்திரங்கள் அப்படியே இருந்துள்ளன. ஆலம் குடும்பத்தினர் மட்டுமல்லாது பீகாரைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களும் மாயமானதால் உடனடியாக இதுகுறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அந்தப் பகுதியில் இருந்த கிணறு ஒன்றில் ஆலம் அவரின் மனைவி நிஷா, மகள் மற்றும் பேரக்குழந்தைகள் சடலமாக மிதந்துள்ளனர். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் 4 பேரின் உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆலமின் இரண்டு மகன்கள் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அந்த மில்லில் குடியிருந்த பீகார் இளைஞர்கள் மீது போலீஸாரின் சந்தேகப்பார்வை விழுந்தது. ஆலம் குடும்பத்தினரின் உடல்களில் காயங்கள் ஏதும் இல்லாததால் ஒருவேளை தற்கொலை செய்துகொண்டார்களா அல்லது கொலை செய்யப்பட்டனரா என்றரீதியில் காவல்துறையினர் விசாரணையில் இறங்கினர். அதே கிணற்றில் ஆலம் மகன்களின் சடலங்கள் இருக்கிறதா என போலீஸார் தேடினர். மாயமான பீகார் இளைஞர்கள் குறித்த விவரங்களையும் சேகரித்தனர்.

சடலம்
சடலம்

இந்நிலையில் இன்று காலை அதேகிணற்றில் இருந்து மேலும் 5 ஆண் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதில் இரண்டு சடலங்கள் ஆலமின் மகன்கள் என்பது தெரியவந்தன. இவர்கள் இருவரும் அங்குள்ள ஐடிஐ-யில் படித்து வந்துள்ளனர். கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட மேலும் 3 சடலங்கள் பீகாரைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் மற்றும் திரிபுராவைச் சேர்ந்த ஒரு தொழிலாளியின் சடலம் என்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பேசிய போலீஸ் அதிகாரிகள், ``தனியார் மில்லில் தங்கியிருந்த தொழிலாளர் குடும்பத்தினர் மற்றும் சில வடமாநில ஊழியர்கள் மாயமானதாக நேற்று புகார் வந்தது. அவர்கள் தங்கியிருந்த இடத்தை ஆய்வு செய்தபோது உணவுகள் மீதமிருந்ததும் தெரியவந்தது. அவர்களின் மொபைல் போன் அனைத்தும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. உள்ளூர் மக்கள் அந்தப் பகுதியில் உள்ள கிணற்றில் சடலங்கள் இருப்பதாகக் கூறினர். இதையடுத்து சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம்.

மரணம்
மரணம்
மாதிரிப் படம்

முதலில் இந்த வழக்கில் வடமாநில இளைஞர்கள் மீது சந்தேகம் இருந்தது. ஆலமின் இரண்டு மகன்களைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்தினோம். கிணற்றில் இருந்த தண்ணீரை அப்புறப்படுத்தி தேடும் பணியை மேற்கொண்டோம். இந்நிலையில் இன்று 5 ஆண் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதில் வடமாநில தொழிலாளர்கள் மூன்று பேரின் சடலங்கள் இருந்தன. ஊரடங்கு காலத்தில் வேலை இல்லை என்றாலும் அவர்களுக்குத் தேவையான ரேஷன் பொருள்கள் மற்றும் பணம் இருந்துள்ளது.

தற்கொலை செய்துகொண்டிருந்தால் ஒரு குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மட்டுமே தற்கொலை செய்துகொண்டிருக்க வேண்டும். மேலும் மூன்று பேர் இறப்பதற்கு என்ன காரணங்கள் இருக்க வேண்டும். பிரதேப் பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே இந்த விவகாரத்தில் ஏதாவது தகவல் கிடைக்கும்” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு