Published:Updated:

பாகிஸ்தான் டு காஷ்மீர் டு மும்பை: ரூ.9 கோடி மதிப்பிலான போதைப்பொருள் சிக்கிய பின்னணி!

சபீர், நிஜாமுதின், நூர், அமித்
சபீர், நிஜாமுதின், நூர், அமித்

பாகிஸ்தானிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ.9 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை காஷ்மீர் வழியாக மும்பைக்கு பைக்கில் கடத்திக் கொண்டுவந்த 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மும்பையில் பார்ட்டிகள், விருந்துகளில் போதைப்பொருள் பயன்படுத்தப்படுவது அதிகரித்துவருகிறது. இரண்டு நாள்களுக்கு முன்புகூட பிறந்தநாள் பார்ட்டியில் போதைப்பொருள் பயன்படுத்திய ஒரு நடிகரும், நடிகையும் கைதுசெய்யப்பட்டனர். இந்த போதைப்பொருள் மும்பைக்கு நாடு முழுவதுமிருந்து கடத்தி ரப்படுகிறது. இதற்கு மிகப்பெரிய நெட்வொர்க் இருக்கிறது. அப்படி ஒரு போதைப்பொருள் கடத்தல் கும்பலை போதைப்பொருள் தடுப்பு புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் ஒரு வாரம் 'டார்க் நைட்' என்ற பெயரில் தேடுதல் வேட்டை நடத்தி கைதுசெய்துள்ளனர். பாகிஸ்தானிலிருந்து மும்பைக்கு 'சரஸ்' என்ற போதைப்பொருள் கடத்திவரப்பட்டிருப்பதாக போதைப்பொருள் தடுப்புப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தக் கும்பலைப் பிடிக்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மூன்று தனிப்படைகளை அமைத்தனர். அவர்களில் சிலர் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களாகவும், போதைப்பொருள் விற்பனை செய்பவர்களாகவும் வேடமிட்டு கடத்தல்காரர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

சபீர், நிஜாமுதின், நூர், அமித்
சபீர், நிஜாமுதின், நூர், அமித்

இந்தநிலையில், தாதரிலுள்ள கோயில் வளாகத்திலுள்ள தங்கும் விடுதியில் ஓர் அறை எடுத்து அங்கிருந்து போதைப்பொருள்களை விற்பனை செய்துகொண்டிருந்தனர். அந்த அறையைச் சோதனை செய்து 2 கிலோ சரஸ் போதைப்பொருளை பறிமுதல் செய்து கமலேஷ் குப்தா, அமித்பட்டேல், ராஜ்விந்தர் சிங், குர்மித் சிங் ஆகிய நான்கு பேரைக் கைதுசெய்தனர். இதில் ராஜ்விந்தர் சிங் மற்றும் குர்மித் சிங் ஆகியோர் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் கடத்திவரப்பட்ட போதைப்பொருளை காஷ்மீர் வழியாக பைக்கிலேயே மும்பைக்குக் கொண்டு வந்தனர். வேறு வாகனங்களில் கடத்திவந்தால் தெரிந்துவிடும் எனக் கருதி பைக்கிலேயே கடத்திவந்தது விசாரணையில் தெரியவந்தது.

கமலேஷ் குப்தாவிடம் நடத்திய விசாரணையில் சுன்னாப்பட்டியைச் சேர்ந்த நூர் மொகமத் என்பவரிடமிருந்து 3.3 கிலோ போதைப்பொருளும், 2 லட்சம் ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த போதைப்பொருள் கடத்தலில் தீவிரவாதிகளுக்குத் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரித்துவருவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குநர் சமீர் வாங்கடே தெரிவித்தார். பிவண்டி சுங்கச்சாவடியில்வைத்து சமீர் உஸ்மான், நிஜாமுதீன் அகமத் ஆகியோரைக் கைதுசெய்து அவர்களிடமிருந்து 12 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் இரண்டு பேரைப் பிடிக்க மட்டும் இரண்டு நாள் ஆனது. இருவரும் அடிக்கடி இடத்தை மாற்றிக்கொண்டே இருந்தனர். போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான ஏழு பேரும் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த ஆபரேஷனை முடிக்க எங்களுக்கு ஒரு வாரம் பிடித்ததாகவும், நாங்கள் நடத்திய ஆபரேஷனில் இது மிகப்பெரிய ஒன்று என்றும், குற்றவாளிகளைப் பிடிப்பதில் எங்களது குழுவினர் மிகப்பெரிய சவால்களைச் சந்தித்தனர் என்றும் சமீர் வாங்கடே தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு