Published:Updated:

`கடுமையான தண்டனை; கருணை மனு நிராகரிப்பு!' - நிர்பயா வழக்கில் கொதிக்கும் டெல்லி அரசு

இதுபோன்ற கொடுங்குற்றத்தை இழைத்தவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும். அவர்களின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்று மாநில அரசு சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

டெல்லி மாணவி
டெல்லி மாணவி

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்கு தண்டனையை நிறைவேற்றும்படி டெல்லி ஆளுநர் பரிந்துரைத்திருக்கிறார்.

டெல்லி மாணவி உயிரிழப்பு:
டெல்லி மாணவி உயிரிழப்பு:

2012 டெல்லி பிசியோதெரபி மாணவியான நிர்பயா ஓடும் பேருந்தில் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். ஓடும் பேருந்திலிருந்து டெல்லி சாலையில் தூக்கி வீசப்பட்ட அவர், உயிருக்குப் போராடிவந்த நிலையில் மருத்துவ சிகிச்சைகள் பலன் அளிக்காமல் இறந்தார். நிர்பயா மரணத்தின் அதிர்வலைகள் நாடெங்கிலும் இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

நிர்பயா மரணத்தை அடுத்து பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்பான பல சட்டத்திருத்தங்களை மத்திய அரசு கொண்டுவந்தது. குற்றம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட ஆறுபேரில் ராம் சிங் திகார் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். குற்றத்தில் ஈடுபட்ட மற்றொருவர் 18 வயதுக்குக் குறைவானவர்கள் என்பதால் அவருக்குச் சிறார் குற்றவியல் சட்டத்தின் கீழ் மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மீதமுள்ள நான்கு பேருக்குத் தூக்குத்தண்டனை விதித்து விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

டெல்லி மாணவி
டெல்லி மாணவி

இந்தத் தீர்ப்பின் மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் அந்த நீதிமன்றம் தண்டனையை உறுதிப்படுத்தி தீர்ப்பு வழங்கியது. இதை மறுஆய்வு செய்யக் கோரி 2017-ல் குற்றவாளிகளில் மூன்றுபேர் தரப்பிலிருந்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மறுஆய்வு மனுவை ஏற்றுக்கொள்ள மறுத்தது உச்சநீதிமன்றம். மற்றொரு குற்றவாளியான அக்‌ஷய் மறுஆய்வு மனு அளிக்க தனக்கு விருப்பமில்லை என்று அப்போதே பதிவு செய்துவிட்டார். மரணதண்டனை வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் டிசம்பர் 2018-ல் நிர்பயா தரப்பிலிருந்து மனு அளிக்கப்பட்டுவிட்டது.

இந்த நிலையில் மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்பாகக் குற்றவாளிகள் கருணை மனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், மூன்று குற்றவாளிகள் தரப்பும் கருணை மனு தாக்கல் செய்யாமல் இருக்கின்றனர். இதையடுத்து, கருணை மனு தாக்கல் செய்ய கடந்த அக்டோபர் 29-ல் ஒருவார கால அவகாசம் கொடுத்தது உச்சநீதிமன்றம்.

டெல்லி
டெல்லி

அதற்கான கால அவகாசம் தற்போது முடிவடைய இருக்கும் நிலையில், திருத்த மனு அளிக்க முடிவு செய்துள்ளது மூன்று குற்றவாளிகள் தரப்பு. இந்நிலையில், தங்களின் தூக்குத் தண்டனையைக் குறைக்கும்படி 4 பேரும் குடியரசுத் தலைவருக்குக் கருணை மனுவை அனுப்பி வைத்தனர். அவர்களின் கருணை மனு குறித்து டெல்லி துணைநிலை ஆளுநரின் பரிந்துரைக்குப் பின் உள்துறை அமைச்சகம் முடிவெடுக்கும் என்று தெரிகிறது. இதுதொடர்பாக டெல்லி மாநில அரசு சார்பில் உள்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், துணைநிலை ஆளுநர் அனில் பைஜானுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், இதுபோன்ற கொடுங்குற்றத்தை இழைத்தவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும். அவர்களின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்று மாநில அரசு சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.