Published:Updated:

நித்யானந்தா ஆசிரமம்: பெண் பக்தை மீட்பு விவகாரம்; இரு தரப்பிலும் வழக்கு பதிவு, கைது! - நடந்தது என்ன?

வாக்குவாதம்
வாக்குவாதம்

நித்யானந்தா தரப்பில், 'அத்தாயியின் உறவினர்கள் பெண் பக்தைகளைத் தாக்கினர் ' என்று புகாரளித்தனர். இன்னொருபக்கம், அத்தாயியின் கணவரும், நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் நித்யானந்தா பக்தைகள் மீது புகார் கொடுத்தார்.

ராசிபுத்தில், நித்யானந்தாவின் ஆசிரமத்திலிருந்த பெண் பக்தையை, கிராம மக்கள் மீட்ட சம்பவத்தில், நித்யானந்தா ஆசிரம பக்தைகள், மீட்கப்பட்ட பெண் பக்தையின் உறவினர்கள் என இரண்டு தரப்பிலும் போலீஸார் வழக்கு பதிவு செய்து, இரண்டு தரப்பிலும் கைது நடவடிக்கையை எடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வாக்குவாதம்
வாக்குவாதம்
நித்யானந்தா ஆசிரமம்: "இங்கிருந்து என்னை அழைத்துச் சென்றுவிடுங்கள்"-மகனிடம் கேட்ட  தாய்;பின்னணி என்ன?

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள பட்டணம் முனியப்பன்பாளையத்தில் வசிப்பவர் ராமசாமி (62). விவசாயி. இவர், அதே பகுதியில் மளிகைக் கடை வைத்து நடத்திவருகிறார். இவருடைய மனைவி அத்தாயி (52). இவர், நித்யானந்தாவின் மீதுள்ள பக்தியில், அவரின் தீவிர பக்தையாக மாறியதாகச் சொல்லப்படுகிறது. இதனால், அத்தாயி கடந்த 2017-ம் ஆண்டு பெங்களூரிலுள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்துக்குச் சென்றிருக்கிறார். அங்கேயே தங்கியிருக்கிறார். அவர் ஆசிரமத்துக்குச் செல்வதற்கு முன்பு அவரது பெயரில் இருந்த வீடு, கடையை அடமானம்வைத்து வங்கி ஒன்றில் ரூ. 6,40,000 கடன் பெற்றிருக்கிறார். அந்தப் பணத்தை ஆசிரமத்துக்கு எடுத்துச் சென்றுவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. அத்தாயி வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாததால், அவரது வீடு ஜப்திக்கு வந்திருக்கிறது. இதனால், குடும்பத்தினர் கடனை செலுத்த முடிவுசெய்தனர். ஆனால், வங்கி நிர்வாகத்தினர் அத்தாயி கையெழுத்திட்டால்தான் கடனை முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்று தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால், அவர்கள் பெங்களூரு ஆசிரமத்தில் இருந்த அத்தாயியைப் பலமுறை அழைத்தும், அவர் திரும்பி வரவில்லை. மேலும், கடந்த நான்கு ஆண்டுகளாக அவர் தனது குடும்பத்தாருடன் எந்தவிதத் தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, கடந்த ஒரு மாதமாக மகன் பழனிசாமி, பழனிசாமியின் மகள் சஸ்மிதா ஆகியோருடன் அத்தாயி செல்போனில் பேசிவந்திருக்கிறார். அப்போது, வீடியோ காலில் அவரது பேத்தியான சஸ்மிதா, `உன்னைப் பார்க்க வேண்டும். உடனே வா' என்று அழுதபடி அழைத்தாராம். இதனால், தனது குடும்பத்தை அத்தாயி பார்க்க நினைத்தாலும், ஆசிரமத்தில் தன்னை வெளியேவிட மறுப்பதாகவும், `நீங்கள் வந்து அழைத்துச் செல்லுங்கள்’ என்று அவர் வலியுறுத்தியிருக்கிறார். இந்தச் சூழலில், சில தினங்களுக்கு முன்பு காலை 11 மணிக்கு பெங்களூரிலிருந்து ஒரு காரில் நித்யானந்தாவின் இரண்டு பெண் சீடர்களுடன், அத்தாயி அய்யம்பாளையத்துக்கு வந்தார்.

நித்யானந்தாவின் சீடர்கள் தங்கள் ஊருக்குள் வந்திருக்கிறார்கள் என்பதை அறிந்த அத்தாயியின் உறவினர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர். அவர்கள், நித்யானந்தாவின் சீடர்கள் வந்த காரைச் சூழ்ந்துகொண்டு, 'அத்தாயியை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும்' என்று கோரிக்கைவைத்தனர். ஆனால், நித்யானந்தாவின் பெண் சீடர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். இதனால், நித்யானந்தாவின் பெண் சீடர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அத்தாயியை மீட்ட பொதுமக்கள், ஆம்னி வேன் ஒன்றில் ஏற்றி, குடும்பத்தினருடன் அனுப்பிவைத்தனர். இதற்கு நித்யானந்தா ஆசிரமப் பெண் சீடர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவர்களை விரட்டியடித்தனர்.

விரட்டப்படும் நித்தி ஆசிரம பக்தைகள் வந்த கார்
விரட்டப்படும் நித்தி ஆசிரம பக்தைகள் வந்த கார்

இதனால், பயந்துபோன அந்த இரண்டு பெண் சீடர்களும், அங்கிருந்து காரில் தப்பிச் சென்றனர். அதோடு, அங்குள்ள சமூக ஆர்வலர்கள் சிலர், ``பட்டணம், வடுகம், புதுப்பட்டி உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் சிலர் பெங்களூரிலுள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் சிக்கித் தவிக்கிறார்கள். அவர்களை மீட்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை நினைத்து அவர்களுடைய குடும்பத்தினர் தினம் தினம் அல்லாடிவருகிறார்கள்" என்று கோரிக்கை விடுத்தனர்.

`கைலாசாவில் இந்திய பக்தர்களுக்கு அனுமதியில்லை' - நித்தியானந்தா தடாலடி!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நித்யானந்தா தரப்பில், 'அத்தாயியின் உறவினர்கள் பெண் பக்தைகளைத் தாக்கினர். சேலையைப் பிடித்து இழுத்தனர்' என்று புகார் அளித்தனர். இன்னொரு பக்கம், அத்தாயியின் கணவரும் நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் நித்யானந்தா ஆசிரமத்தைச் சேர்ந்த பெண் பக்தைகள் மீது, தனது மனைவியைக் கடத்தியதோடு, தங்களை மிரட்டுவதாகவும் புகார் கொடுத்தார். இரு தரப்பிலும் ஒருவருக்கு ஒருவர் நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து, அந்தப் புகார் மீது ராசிபுரம் டி.எஸ்.பி செந்தில்குமார், காவல் ஆய்வாளார் யமுனாதேவி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். இரு தரப்பையும் அழைத்து சமாதானம் பேச முயன்றதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இரு தரப்பும் அதற்கு ஒத்துவராததால், இரு தரப்பு மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

நித்தி ஆசிரம பக்தை
நித்தி ஆசிரம பக்தை

அதன்படி, நித்தியின் சீடர்களான, ராசிபுரம் மேட்டுத்தெருவைச் சேர்ந்த அகிலாராணி (எ) நித்யஜோதிகாசாமி (33), பாண்டிச்சேரியை சேர்ந்த சத்யா (எ) சத்யவர்மநர்மதா (41), பெங்களூரைச் சேர்ந்த ஜெயகிருஷ்ணன் (39) ஆகிய மூன்று பேரும், அத்தாயியின் கணவர் ராமசாமி (62), மகன் பழனிசாமி (30) ஆகியோரும் கைதுசெய்யப்பட்டனர். பின்னர், ராசிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நித்யானந்தாவின் சீடர்கள் கைதுசெய்யப்பட்ட தகவலறிந்து காவல் நிலையம் முன்பு பொதுமக்கள் கூடியதால், அந்தப் பகுதி பரபரப்பாகக் காணப்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு