பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றில் நித்யானந்தாவுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த 2010-ம் ஆண்டு ஜாமீன் வழங்கியது. இந்த ஜாமீனை ரத்துசெய்ய வேண்டும் என்று கோரி லெனின் கருப்பன் என்பவர், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவைக் கடந்த மாதம் 31-ம் தேதி விசாரித்த உயர் நீதிமன்றம், இதுகுறித்து விளக்கம் கேட்டு நித்யானந்தாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்திருந்தது.

இந்தநிலையில், வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் விசாரணை அதிகாரியான காவல் துணை ஆணையர் பி.பால்ராஜ் நேரில் ஆஜரானார். விசாரணை தொடர்பாக அவர் தாக்கல் செய்திருந்த அறிக்கையில், `நித்யானந்தா, ஆன்மிக சுற்றுலாவில் இருப்பதால், பெங்களூரு பிடதி ஆசிரமத்தில் அவர் இல்லை. அதனால், அவரது சீஷ்யையான குமாரி அர்ச்சனானந்தாவிடம் நோட்டீஸ் வழங்கப்பட்டது' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதேபோல், குமாரி அர்ச்சனானந்தா தரப்பிலும் அஃபிடவிட் ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், நித்யானந்தா இருக்குமிடம் தமக்குத் தெரியாது என்பதால், நோட்டீஸை நித்யானந்தாவிடம் அளிக்க முடியாது என போலீஸாரிடம் கூறியும் அவர்கள் நோட்டீஸை வாங்கிக்கொள்ளும்படி தன்னைக் கட்டாயப்படுத்தியதாக குமாரி அர்ச்சனானந்தா குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரத்தில், போலீஸாரின் நடவடிக்கைகள்மீது அதிருப்தி தெரிவித்த நீதிமன்றம், ``நீதிமன்ற நோட்டீஸை ஒருவரிடம் அளிப்பதை முதல்முறையாகவா செய்கிறீர்கள்?
நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் உத்தரவை முறையாக செயல்படுத்துவதாக நீங்கள் எப்படிச் சொல்ல முடியும்? கட்டாயப்படுத்தி குமாரி அர்ச்சனானந்தாவை நீங்கள் நீதிமன்றத்துக்கு இன்று வரவழைத்துள்ளீர்கள். நீதிமன்ற உத்தரவுகளைச் செயல்படுத்தாமல், விளையாட்டுக் காட்டுகிறீர்கள்'' என்று கடிந்துகொண்டது. இதையடுத்து, உடனடியாக விசாரணை அதிகாரியான துணை ஆணையர் தரப்பில் மன்னிப்பு கோரப்பட்டது. ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிமன்றம், விசாரணை அதிகாரி நடந்துகொண்ட விதம் தொடர்பாக உரிய உத்தரவை பின்னர் பிறப்பிப்பதாகத் தெரிவித்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், ''நித்யானந்தாவின் ஜாமீனை ரத்து செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். அரசு தரப்பில், விசாரணை நீதிமன்றத்தின் முன்பு உடனடியாக அவர் (நித்யானந்தா) ஆஜராக வேண்டிய அவசியமில்லை. மனுதாரர் போதிய ஒத்துழைப்பு வழங்காததாலேயே வழக்கின் விசாரணை தாமதமாவதாக வாதிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் தரப்பு, நித்யானந்தா நீதிமன்றத்தை ஏமாற்றிவருகிறார். குற்றம் சாட்டப்பட்டவர் வழக்கு விசாரணையின்போது ஆஜராகாமல் இருந்தால், அதை அரசு தரப்பு அமைதியாக வேடிக்கை பார்க்குமா? சம்மனை அளிக்க முடியாதது, ஜாமீனை ரத்து செய்வதை எந்தவிதத்திலும் பாதிக்காது'' என்று வாதிடப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர், ''ஜாமீன் விதிமுறைகள் எதையும் குற்றம் சாட்டப்பட்டவர் மீறவில்லை. அதேநேரம், குற்றம் சாட்டப்பட்டவருக்கு நீதிமன்றம் வழங்கிய சலுகைகளுக்கு மனுதாரர் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தால், அதற்கு எதிராக மனுதாரர் முறையிடலாம். ஆனால், ஜாமீனை ரத்து செய்ய அவர்கள் கோர முடியாது'' என்று வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், நித்யானந்தாவின் ஜாமீனை ரத்துசெய்யக் கோரும் வழக்கின் உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
குஜராத்தில், நித்யானந்தாவால் நடத்தப்படும் பள்ளி ஒன்றி லிருந்து சிறுமிகளைக் கடத்தித் துன்புறுத்தியதாக, அவர்மீது கடந்த ஆண்டு நவம்பரில் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், இந்த வழக்கு தொடர்பாக நித்யானந்தா இதுவரை கைது செய்யப்படவில்லை. அவர், ஈக்வடாரில் தலைமறைவாக இருப்பதாகவும், அந்நாட்டுக்குட்பட்ட தீவுகளுள் ஒன்றில் `கைலாசா' என்ற பெயரில் தனிநாடு ஒன்றை அவர் பிரகடனப்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. ஆனால், இந்தத் தகவல் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.